அழிவுப்பாதையின் விளிம்பில் பனைமரம்! பனைத்தொழில்!!

Read Time:22 Minute, 59 Second

“இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்” என்ற சொலவடைக்கு சொந்தமான பனைமரத்தினால் கிடைக்கும் பொருட்களின் நன்மை தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்த நிலையில் மனிதன் மீண்டும் அதனைநோக்கி ஓட தொடங்கி உள்ளான். சர்க்கரை நோயின் அச்சம் மனிதனை முன்னோர்கள் பயன்படுத்திய கருப்பெட்டியின் மகத்துவத்தை புரிந்துக்கொள்ள செய்து உள்ளது. கருப்பெட்டியின் விலை உயர்வு கசத்தாலும், நன்மைகள் யோசிக்க செய்கிறது. பண்டமாற்று முறையில் வாங்கிய கருப்பெட்டி இப்போது கிலோ 350 ரூபாயை எட்டியதற்கு தொழில் நசிவு, பனை ஏறுவதற்கு ஆட்கள் இல்லை என எளிதே கூறிவிடலாம். இந்த தொழிலில் உள்ள ஆபத்து என்பது முக்கியமானது. ஆனால் எந்த ஒரு பொருட்செலவும் இல்லாமல் தொழில் நசிவு என்பது யோசிக்க கூடியது.

இத்தொழில் அழிவிற்கு காரணமும் அரசு முகமை காவல்துறை காரணம் என்பதே முற்றிலும் உண்மையானது.

தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் பனை ஏறுவது முக்கிய தொழிலாக விளங்கியது. குறிப்பாக தென் மாவட்டங்களில், இந்த தொழில் மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக விளங்கியது. 90-களின் இறுதியில் கிராமங்களில் காலையில் இடுக்கி, அரிவாளுடன் பனை ஏறுபவர்கள் செல்லும் காட்சிகளையும், பதநீரை பெண்கள் பானையில் எடுத்துவரும் காட்சிகளையும் பார்க்க முடிந்தது. இப்போது சில பகுதிகளில் பதநீர் இறக்கப்படுகிறது என்றாலும் நிலையானது முன்புபோல் கிடையாது. தொழில் மிகவும் நலிவடைந்து உள்ளது.

பனை ஏறுவது மிகவும் கடினமானது மட்டுமின்றி, ஆபத்து நிறைந்ததும் ஆகும். கரடு முரடான பனை மரத்தில் ஏறி இறங்குவதற்கு நல்ல ஆரோக்கியமும், உடல் திறனும், மன தைரியமும் வேண்டும். கரணம் தப்பினால் மரணம் என்பது போல, சிறிது கவனம் சிதறினாலும் உயிருக்கு உத்தரவாதம் கிடையாது. பதனீரை இறக்குவது, அதை வீட்டுக்கு கொண்டு வந்து காய்ச்சி பனைவெல்லம் ஆக்குவது என்று இந்த தொழிலில் குடும்பம் முழுவதுமே ஈடுபட வேண்டியது. கடுமையாக உழைத்தாலும், போதிய வருமானம் கிடைப்பது இல்லை எனவும் கூறப்படுகிறது.

இதனால்தான் பரம்பரை பரம்பரையாக பனை ஏறும் தொழில் செய்து வந்தவர்கள் கூட, தங்கள் வாரிசுகள் அந்த தொழிலில் ஈடுபடுவதை விரும்புவதில்லை. சிலர் மட்டும் அதனுடைய நன்மையை உணர்ந்து அப்பணியை தொடர்கிறார்கள்.

உயிருக்கு உத்தரவாதம் இல்லாத இந்த தொழிலை பலரும் விரும்புவதில்லை. இதன் காரணமாக அவர்கள் வேறு தொழில்களுக்கு சென்று விட்டதால், பனை ஏறும் தொழில் கிட்டத்தட்ட அழிவுப்பாதையின் விளிம்பில் நின்று கொண்டு இருக்கிறது.

கரும்பில் இருந்து கிடைக்கும் சர்க்கரையை விட பனைவெல்லம் மிகுந்த சத்தும், மருத்துவ குணமும் நிறைந்தது. கெமிக்கல் எதுவும் இணையாது உடலக்கு நன்மை மட்டுமே கொடுக்கக்கூடியது கருப்பட்டி. உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது. நீரிழிவு நோயாளிகள் கூட சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டியை பயன்படுத்தலாம். பனை ஏறும் தொழில் நசிந்து விட்டதால், விலை அதிகரிப்பு, தூய்மையான கருப்பட்டி கிட்டத்தட்ட காட்சிப் பொருளாகி விட்டது.

இப்போது  பனைமரத்தினால் கிடைக்கும் பொருட்களின் நன்மை தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்து உள்ளது. அத்தொழில் செய்பவர்களுக்கு நம்பிக்கையை கொடுத்து உள்ளது. இருப்பினும் போதுமானதா என்பது கேள்விக்குறியானது. மரங்களின் எண்ணிக்கை குறைந்து இருந்தாலும் நன்மை தொடர்பான விழிப்புணர்வு அதிகரிப்பு காரணமாக நுங்கு, கிழங்கு, பதநீர், கருப்பட்டி என அனைத்திற்கும் தேவையும் அதிகரித்து உள்ளது. பனை ஏறும் தொழிலுக்கும் ஆட்கள் தேவையும் அதிகரித்து உள்ளது.

தொழில் செய்வோர் குறைந்து விட்டதால், பனை மரங்களும் பயன்பாடு இன்றி செங்கல் சூளைகளுக்கு விறகாக சென்று கொண்டிருக்கின்றன.

திருவண்ணாமலை மாவட்டம் நாகாபாடி கிராமத்தை சேர்ந்த சுற்றுசூழல் ஆர்வலர் தண்டபானி (வயது 43) ‘வில்லேஜ் ஸ்கெயர்’ இணையதளத்திற்கு பேசுகையில்,  “பனைப்பொருட்களினால் கிடைக்கும் நன்மைகள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துவது மட்டுமே அதனை பாதுகாக்க முக்கிய நடவடிக்கையாக இருக்கும். பதநீர் மற்றும் கருப்பட்டி தொடர்பாகவும் நாம் விளிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இதனை கல்வி பாடத்திட்டத்தில் இணைக்க வேண்டும். ஆவணப்படங்களை எடுக்க வேண்டும், மக்களுக்கு செய்தியை வெளிப்படுத்த நட்சத்திரங்களையும் இப்பணியில் இணைக்கவேண்டும்,” என்று கூறி உள்ளார்.

தமிழகத்தில் 1991-ம் ஆண்டுகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்ற கருத்தையும் முன்வைக்கிறார் தண்டபானி.  “சிகரெட், மதுபானங்கள் போன்றவற்றை விற்பனை செய்யும் போது, நம்முடைய கலாச்சார உணவுடன் தொடர்புடைய கள்ளை விற்பனை செய்ய அரசு ஏன் நடைமுறை விதிமுறைகளை கொண்டுவரக்கூடாது? என கேள்வியை எழுப்புகிறார்.

ராமநாதபுரத்தை சேர்ந்த கிராமப்புற வேலைகள் மேம்பாட்டு சங்கத்தின் இயக்குநர் சத்தியா பேசுகையில், “நமது அரசு விற்பனை செய்யும் மதுபானங்களில் 48.5 சதவிதம் ஆல்கஹால் இருக்கிறது, ஆனால் பனமரத்து கள்ளில் 4.1 சதவிதம் மட்டுமே ஆல்கஹால் உட்பொருட்கள் உள்ளது,” என்கிறார். ராமநாதபுரத்தில் அவர் கூட்டிய பனமரத் தொழிலாளர் சங்க கூட்டத்தில் அரசாங்கத்திற்கு முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. பனைமரங்களை கண்மூடித்தனமான வெட்டுவதை தடுக்க வேண்டும், நீர்நிலைகளை சுற்றிலும், தேவையற்ற இடங்களிலும் பனைமரங்களை நடவேண்டும். 60 வயதை கடந்த பனை தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் பனை ஏறுபவர்களையும் விவசாயிகளாக பார்க்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பணம் பறிக்கும் போலீஸ்

சத்தியா மேலும் பேசுகையில், “கேரளா மற்றும் ஆந்திர பிரதேசம் மாநிலங்களில் கள் இறக்குவது அதிகாரப்பூர்வமாக்கப்பட்டு உள்ளது. இதனால் அவர்களுடைய கிராமபுற பொருளாதாரம் உயர்கிறது. ஆனால் எங்களுடைய அண்டைய கிராமத்தில் போலீசார் கள் இறக்கும் பனை ஏறியிடம் வாரத்திற்கு ரூ.12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரையில் கேட்கிறார்கள். கம்போடியாவை போன்று நாம் பனைமரத்தை பயன்படுத்தவில்லை, நாம் தொழில்துறையின் மீது மட்டுமே கவனம் செலுத்துகிறோம்,” என்று கூறிஉள்ளார். கிராமபுற பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அரசின் நடவடிக்கை இருக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கிறார்.

போலீசார் பணம் பறிப்பது என்பது புதியது கிடையாது. 90-களின் இறுதியில் இருந்து பனை ஏறுபவர்கள் இலக்காக்கி வருகிறார்கள். பனை மரத்துக்கு கீழ் இருந்து பால் குடித்தாலும் கள் என்பார்கள் என்ற பழமொழிக்கு ஏற்ற வகையில் அவர்களுடைய நிலை மோசமாகியே சென்றது. விவசாயம் செய்துக்கொண்டு பனை ஏறும் தொழில் செய்பவர்கள் உடல் களைப்பு தெரியக்கூடாது என்பதற்காக கள் குடிப்பதை பழக்கமாக கொண்டிருந்தார்கள். ஆனால் அரசாங்கம் மற்றும் அரசு முகமைகள் அவர்கள் விற்பனை செய்கிறார்கள் என்று வேட்டையாடியது, தேவையற்ற வகையில் அவர்களை பிடித்து அபராதம் போட்டது. இவையும் அவர்கள் இத்தொழிலின் மீது நாட்டமில்லாமல் சென்றதற்கு காரணம். அரசு அவர்களை டாஸ்மார்க்கிற்கு வந்து சம்பாதித்த பணத்தை என்னிடம் கொடுத்து நீ அழிந்துவிடு என்று அவர்களை விரட்டியது. அதன் விளையும் இத்தொழில் நசிவுக்கு காரணம் என்பது முக்கியமானது. அதுவும் இளைஞர்கள் இத்தொழிலில் ஈடுபட்டால் என்னவாகும் என்று 2000-ம் ஆண்டுகளில் திருநெல்வேலி மாவட்டங்களில் பார்க்க முடிந்தது.

பதநீராக இருந்தாலும் போலீசின் அடாவடி தாங்க முடியாது பலர் மரத்தில் இருந்த பானையுடனே அத்தொழிலை விட்டார்கள் என்பது வேதனைக்குரியது. இன்றும் நடக்கிறது என்பதை சத்தியா அவர்களின் கூற்று உறுதிசெய்கிறது.

இயற்கையின் வரம்

தேவையில்லை என்று ஒதுக்கும் அளவிற்கு எதுவும் இல்லாது, வேர் முதல் உச்சியில் உள்ள ஓலை வரை எல்லாமே மக்களுக்கான வரமாக தன்னகத்தே சுமந்து நிற்பதுதான் பனைமரம். மக்கள் வாழ்க்கையுடன், கலாசாரத்துடன் பின்னிப்பிணைந்த பனைமரம் மக்களுக்காகவே தங்களை அர்ப்பணித்துக் கொண்ட மரமாகும். அதனால்தான் அதை ‘கற்பகதரு’ என்கிறோம். தமிழகத்தின் தேசிய மரமும் பனைமரம்தான்.

பனை மரங்கள் 100 ஆண்டுகளுக்கும் மேல் வளரக் கூடியவை. இது மெதுவாக வளரும் தாவரம்.

இயற்கையின் படைப்பில் உலகில் லட்சக்கணக்கான தாவரங்கள் உள்ளது. ஒவ்வொரு தாவரமும் தன்னகத்தே பல நன்மையை கொண்டிருக்கும். அப்படிபார்க்கையில் மக்களுக்காக அனைத்தையும் அர்ப்பணித்துக்கொள்ளும் மரம்தான் பனைமரம். மனிதனின் தேவைக்கான அனைத்து நன்மைகளையும் கொண்ட பனைமரம் ஒரு நிலையிலும் அவனை எதிர்பார்ப்பது கிடையாது. 100 அடி உயரம் வரை வளரும்தன்மை கொண்ட பனைமரம் பெரும் பிரச்சனையாக இருக்கும் தண்ணீர் பிரச்சனையால் பாதிக்கப்படுவது கிடையாது. பெரும் வறட்சியையும் எதிர்க்கொண்டு நிற்கும். நீர்வளம் மிக மிகக் குறைவாக உள்ள வறட்சி மிகுந்த பகுதியிலும் வளரக்கூடியது.

எத்தகைய தட்பவெட்ப நிலையையும், சூறாவளி காற்றையும் தாக்குப்பிடித்து நிலைத்து நிற்கக்கூடியவை. உலகில் அதிகபட்சமாக இந்தியாவில் 8.59 கோடி பனை மரங்கள் உள்ளன. தமிழகத்தில் மட்டும் 5.10 கோடி பனைமரங்கள் உள்ளது என தமிழ்நாடு பனை உற்பத்தி மேம்பாட்டு மையம் தெரிவிக்கிறது. இந்தியாவுக்கு அடுத்தபடியாக மேற்கு ஆப்பிரிக்காவில் அதிகளவு பனை மரங்கள் உள்ளன. இதுதவிர இலங்கை, இந்தோனேசியா, மடகாஸ்கர், மியான்மர், கம்போடியா, தாய்லாந்து நாடுகளிலும் அதிக அளவில் இருக்கின்றன. இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளில் ஏராளமான பனைகள் உள்ளன.

பனை மரத்தின் வேர் முதல் உச்சியில் உள்ள ஓலை வரை எல்லாமே பயன்படக்கூடியவையே. பனைமரம் தமிழர்கள் மத்தியில் இன்றும் இறைவனாகவே பார்க்கப்படுகிறது. காலையில் பனையில் ஏறும்போது பனையேறுபவர்கள் அவைற்றை வணங்கியே பணியை தொடங்குவார்கள். இன்றும் இதனை தென் மாவட்டங்களில் பார்க்கலாம். பனைமரத்தின் வேர், தண்டு, மட்டைகள், ஓலை, நுங்கு, பனம் பழம், தவுன், கிழங்கு, பனம்கருப்பட்டி, பனம் கற்கண்டு என பயன்களை அடுக்கிக்கொண்டே செல்லலாம்.

பனைமரத்தின் வேர்

பனைமரம் பெரும்பாலும் நீர்நிலைகளின் ஓரங்களிலே அதிகமாக காணப்படும். நம்முடைய முன்னோர்கள் பணியில் அதிக முக்கியத்தும் இருக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. பனைமரமும் அதற்கு விலக்கு கிடையாது. மழை வெள்ள காலங்களில் மண் அரிப்பை தடுப்பதில் பனை மரங்களுக்கு முக்கிய பங்கு உண்டு. அதனால்தான் அந்த காலத்தில் நம் முன்னோர்கள் ஏரி மற்றும் குளக்கரைகளில் பனை மரத்தை வளர்த்தார்கள். இப்போதும் அந்த இடங்களில் அவற்றை நாம் பார்க்க முடியும். பனை மரத்தின் வேர்கள் அடர்த்தியாகவும், உறுதியாகவும் இருக்கும் பனை மரத்தின் வேர்கள் மண்ணுக்குள் நீண்ட தூரம் ஊடுருவிச் சென்று வலை குவியல் போல் சேர்ந்து மண்ணை இறுக்கமாக பற்றிக் கொள்ளும்.

இதனால் எவ்வளவுதான் மழை பெய்தாலும், நீரோட்டம் பெருக்கெடுத்தாலும் கரைகள் உடையாமல் உறுதியாக இருக்கும். ஆனால் இப்போது  அதன் அருமை, பெருமையை உணராமல் ஏரி, குளக்கரைகளில் உள்ள பனை மரங்களையெல்லாம் வெட்டி வீழ்த்தும் சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது என்பது வேதனைக்குரியது.

பனைமரத்தின் தண்டு 

பனைமரத்தான் அந்த காலத்தில் கிராமப்புறங்களில் பெரும்பாலான காரை வீடுகள் கட்டுவதற்கு பெரிதும் ஆதாரமாக இருந்தது. பெரும்பாலான அரசு கட்டிடங்களில் இன்றும் பார்க்கலாம். வைரம்பாய்ந்த கட்டை என்று சொல்வார்கள், அவை மட்டுமே வீடுகட்ட, உத்தரம் அமைக்க பயன்படுத்தப்படும். இன்றும் தமிழகம் முழுவதும் உள்ள பழைய பள்ளிக்கூடங்களில் பனைமரங்கள் உத்தரமாக இருப்பதை பார்க்கலாம். காலப்போக்கில் பிற மரங்கள் மற்றும் காங்கிரீட்டின் பயன்பாடு அதிகரித்ததால் கட்டுமான பணிக்கு பனை மரத்தின் தேவைப்பாடு கிட்டத்தட்ட முற்றிலுமாக குறைந்துவிட்டது.

இப்போது தொழுவம் வைப்பதற்கு மட்டுமே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. வீடு கட்டுவோர் யாரும் இப்போது அதை சீண்டுவது இல்லை. ஒரு காலத்தில் மக்களின் வாழ்வாதாரமாக விளங்கிய பனை மரங்கள், சமீப காலத்தில் கண்மூடித்தனமாக வெட்டப்பட்டு செங்கல் சூளைகளுக்கு விறகாக பயன்படுத்தப்படுகின்றன என்பதே உண்மையானது. பனைமரத்தை வெட்டும் போது தண்டுப்பகுதியின் மையத்தில் வெள்ளை நிறத்தில் சோறு அமைந்து இருக்கும். மாடுகள், ஆடுகள் மிகவும் விரும்பி சாப்பிடும், அதுவும் மிகவும் தித்திப்பாகவே இருக்கும்.

ஓலைகள், மட்டைகள்

பனைமரத்தின் இலைகளே ஓலைகள் என அழைக்கப்படுகிறது. பனை ஓலைகள் என்றால் பெரும்பாலும் ஓலைச்சுவடிகள் எல்லோருக்கும் நினைவிற்கு வரும். பண்டைய காலங்களில் தகவல்களை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எழுதி அனுப்ப அரசர்கள், குறுநில மன்னர்கள் இதனையே பயன்படுத்தினார்கள். உலகப்பொதுமறை, பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, முப்பால், உத்தரவேதம், தெய்வநூல் எனப் பல பெயர்களாலும் அழைக்கப்படும் உலகப் புகழ்பெற்ற தமிழ் மொழி இலக்கியமான திருக்குறள் ஓலைச்சுவடியில் எழுதப்பட்டதே. இதேபோன்று எண்ணற்ற காவியங்களை இன்றைய தலைமுறையினருக்கு கொண்டுவருவதில் ஓலைச்சுவடிகளின் பங்கானது மிகவும் முக்கியமானது. கோவில் கும்பாபிஷேகம், திருமணம் என அனைத்து சுபநிகழ்ச்சிக்கான அழைப்பிதழ் தாங்கியும் ஓலைச்சுவடியே. இப்போது சில பகுதியில் இது நடைமுறையில் உள்ளது. ஜாதகம் போன்ற குறிப்புகள் ஓலைச்சுவடிகளை இப்போதும் பார்க்கலாம்.

இதுபோக பனை ஓலைகள் கூரை வேயவும், பெட்டி, கூடை, விசிறி, பாய், முறம் மற்றும் பூச்சாடி போன்ற கைவினை பொருட்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது. கோவில் விழாக்காலங்களில் பனை ஓலை பெட்டிகள் முக்கிய இடம் பிடிக்கும். திருச்செந்தூர் கோவிலில் கோவில் பூஜைக்கான பொருட்கள் ஓலை பெட்டியிலே வழங்கப்படும். இதுபோன்று இனிப்பு பண்டங்களும் அதிலே வழங்கப்படும். மிகவும் மனமாக இருக்கும். இப்போது நிலை மாறி உள்ளது. அங்கும் நீண்டகாலம் என கூறி பிளாஸ்டிக் படையெடுக்கிறது. பனையின் மட்டைகள், தண்டுகள் போன்று குடிசை வீடுகள் அமைக்க பயன்படும். தட்டிகள் அமைக்க பயன்படும்.

கயிறு தயாரிப்பு தொழிலில் பனை நார் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் வீட்டு தேவைக்கான பொருட்களை தயாரிக்கவும் பனையின் நார் பயன்படுகிறது. இவை அனைத்தும் சுற்றுசூழலுக்கு எந்தஒரு தீங்கையும் விளைவிக்காதவை.

கருப்பட்டி, பனங்கிழங்கு

பனைமரத்தில் இருந்து எடுக்கப்படும் பதனீரைக் காய்ப்பதன் மூலம் கருப்பட்டி கிடைக்கிறது. கூப்பதனியாக காய வைத்து அவற்றை தேங்காய் சிரட்டையில் ஊற்றி காய வைப்பதன் மூலம் கருப்பட்டி தயார் செய்யப்படுகிறது. வெள்ளை சர்க்கரையைவிட உடல் நலத்திற்கு மிகவும் மகத்தான கருப்பட்டி ரத்தத்தை சுத்திகரிக்கவும், உடலை சுறுசுறுப்பாக வைக்கவும், மேனியை பளபளப்பாக வைக்கவும், உடல் நலமாக வைக்கவும் பயன்படுகிறது. காபியில் வெள்ளை சர்க்கரைக்குப் பதிலாக கருப்பட்டி போட்டு குடித்தால் உடலில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாடாக வைத்திருக்க உதவும். கிராமங்களில் கருப்பட்டிக்காபி குடிக்கும் பழக்கும் இன்றும் உள்ளது. சென்னையிலும் இன்று கருப்பட்டி தொடர்பான விழிப்புணர்வு ஏற்பட்டு மக்கள் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டு உள்ளது. சர்க்கரை நோயாளிகளும் கருப்பட்டிக்காபி குடித்து வருகிறார்கள். கருப்பட்டி பல்வேறு நோய்களுக்கு இயற்கை மருத்துவத்திற்கு முக்கிய மூலப்பொருட்களாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

கருப்பட்டி பெண்கள் பூப்பெய்திய நேரத்தில் ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தவும், இடுப்பு எலும்புகள் மற்றும் கர்ப்பபையை வலுப்பெறவும் செய்யும் ஆற்றல் கொண்டது. பருவம் அடைந்த பெண்களுக்கு கிராம புறங்களில் உழுந்து மற்றும் கருப்பட்டியை பயன்படுத்தி ஊட்டச்சத்து களி செய்து கொடுக்கப்படுவது இன்றும் வழக்கத்தில் உள்ளது.

இதேபோன்று பனைமரத்தில் இருந்து கிடைக்கும் நுங்கு, பனம்பழம், தவுன் மற்றும் கிழங்கும் பல்வேறு நன்மையை கொண்டு உள்ளது. பனங்கிழங்கு நார்சத்து மற்றும் இரும்பு சத்தை கொண்டு உள்ளது. உடல் வழுப்பெறுவதற்கு பனங்கிழங்கு பயனுள்ளதாகும்.

விதை விதைப்பு

பல்வேறு நன்மைகள் இருப்பதாலும் இத்தொழில் செய்வோர் எண்ணிக்கை குறைந்து விட்டதால், பனை மரங்களும் பயன்பாடு இன்றி செங்கல் சூளைகளுக்கு விறகாக செல்லும் நிலை உள்ளது.

இதற்கிடையே இதற்குமாறாக விழிப்புணர்வு பிரசாரமும் பலனளிக்கும் வகையில் உள்ளது. கிராம புறங்களில் தொண்டு நிறுவனங்கள், ஆர்வலர்கள் மற்றும் இளைஞர்கள் தரப்பில் பனவிதையை விதிக்கும் நடவடிக்கையானது பாரட்டத்தக்க வகையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுபோதுமானதா என்பது கவனிக்கத்தக்கது. பனைமரம் தண்ணீர் பயன்பாடு இல்லாமல் வளரக் கூடியது. எனவே பனைவிதை விதைப்பு, வளர்ப்பு என்பது மிகவும் கடினம் நேர்ந்தது கிடையாது. அதிகம் பராமரிப்பு தேவையில்லாதது. வறட்சி இல்லாமல் இருந்தாலே போதும் தாக்குப்பிடித்துவிடும். நீர்நிலைகளில் மணல் கொள்ளையர்களால் பனைமரங்களும் பாதிக்கப்பட்டு வருகிறது.

அரசு பனைமரம் வளர்ப்புக்கும், பனை ஏறும் தொழிலுக்கும் ஊக்கம் அளிக்கவேண்டும். பனைமரம் அழிவை காக்க கள் இறக்கவும் அனுமதியை அளிக்க வேண்டும். பனைத்தொழிலை காப்பாற்றுவதோடு, தமிழகத்தின் தேசிய மரமான பனை மரங்களையும் அழிவில் இருந்து பாதுகாக்க வேண்டிய அவசியம் அரசிற்கு உண்டு. மழை வளம் குறைந்து வரும் நிலையில் அரசு பனைமரம் வளர்ப்புக்கும், பனை ஏறும் தொழிலுக்கும் ஊக்கம் அளிக்கவேண்டும்.

2 thoughts on “அழிவுப்பாதையின் விளிம்பில் பனைமரம்! பனைத்தொழில்!!

Comments are closed.