ஸ்டெர்லைட் மனிதர்கள் உருவாக்கிய பேரழிவு! அரசாங்கங்களின் துரோகம்!!

Read Time:36 Minute, 45 Second

தூத்துக்குடியில் மார்ச் 24, 2018-ல் பொதுமக்கள் வீதிக்கு வந்து ‘ஸ்டெர்லைட்டை மூடு’ என்று எழுப்பிய கோஷம் மீண்டும் ஆலையினால் ஏற்படும் பாதிப்புகளை மக்கள் நினைக்க செய்தது. குழந்தைகள், பெண்கள், தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், சிறு கடை நடத்துனர்கள் என அனைத்து தரப்பினரும் ஒரே கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தை முன்னெடுத்தார்கள். பொதுமக்கள் பெருமளவு திரண்டதால் போலீஸ் செயலற்று நின்றது.

பொதுமக்கள் எந்தஒரு அசம்பாவிதமும் இன்றி தங்களுடைய போராட்டத்தை உலகம் முழுவதும் அறியசெய்தார்கள்.

இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. உலக தமிழர்களும் தங்களுடைய ஆதரவை தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். பொதுமக்களின் எதிர்ப்பு அலையின் உச்சம் ஸ்டெர்லைட் ஆலைக்கானது மட்டும் கிடையாது, மாவட்ட நிர்வாகம், போலீஸ், 1998-ல் நிறுவப்படுவதில் இருந்து தொடர்ந்து மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனம் செயல்படுவதற்கு உறுதுணையாக இருந்துவரும் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு எதிராகவும்தான். பெரிய அளவில் எந்தஒரு அழைப்பும் இன்றி பொதுமக்கள் பெருமளவில் திரண்டதே ஆலையினால் மக்கள் எதிர்க்கொள்ளும் பிரச்சனைகளுக்கு சான்றாகும்.

ஸ்டெர்லைட் விவகாரத்தில் பொதுமக்கள் கோபத்தை தெரிந்துக்கொள்ள வரலாறு மற்றும் அரசு, மாசடைந்த மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் பற்றி தெரிந்துக்கொள்வது அவசியமாகும். ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் மக்களுக்கு செய்த துரோகம் அதிகமானது, கட்டுப்பாட்டாளர்களாக இருக்கும் இரு முகமைகளும் தங்கள் பொறுப்புகளில் இருந்து தோல்வியை தழுவிட்டது என்பதைதான் வரலாறு காட்டுகிறது.

மராட்டியத்தில் எதிர்ப்பு

ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் முதலில் தெற்கு மராட்டியத்தின் கடற்கரை நகரான ரத்னகிரியில்தான் கால்பதிக்க முயற்சித்தது. 1992-ம் ஆண்டு மகாராஷ்டிரா தொழில்துறை மேம்பாட்டு மையம் வருடத்திற்கு 60,000 டன் தாமிரம் உற்பத்தி செய்யும் வகையில் ஆலையை அமைக்க 500 ஏக்கர் நிலம் வழங்கியது. 1993-ம் ஆண்டு ஜூலை 15-ம் தேதி ரத்னகிரி மாவட்ட கலெக்டர் Sterlite Industries (India) Ltd நிறுவனத்திற்கு கட்டுமானப் பணிகளை நிறுத்துமாறு கடிதம் எழுதினார். ஆலை அமைப்பதன் மூலம் சுற்றுசூழல் மாசுபடும் என்ற அச்சம் காரணமாக உள்ளூர் மக்கள் ஒருவருட காலமாக போராட்டம் நடத்தியதன் காரணமாக மாவட்ட நிர்வாகம் கட்டுமான பணிகளை முடக்க முன்வந்தது. (விபரத்தை படிக்க)

எதிர்ப்புகளுக்கு மத்திலும் கட்டுமானப் பணிகள் நடைபெற்றது உள்ளூர் மக்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. 1993 டிசம்பர் மாதம் 13-ம் தேதி உள்ளூர் மக்கள் 30 ஆயிரம் பேர் ஒன்றாக ஆலை கட்டுமானப் பணி நடைபெற்று வந்த பகுதியை நோக்கி பேரணியாக சென்றனர். கட்டுமானம் நடைபெற்ற இடங்களில் கால்வாசியை தகர்த்தனர். மராட்டிய மாநில அரசு ஆலை அமைப்பதன் மூலம் சுற்றுசூழலுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பாக ஆய்வு செய்ய சிறப்பு குழுவை அமைத்தது. ஆய்வு அறிக்கையில் இதுபோன்ற ஆலை அமைப்பதால் பிராந்தியத்தின் கடற்கரை சுற்றுசூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுத்தது. ஆலையை அமைக்க முடியாத நிலை ஏற்பட்டது.

மராட்டியம் மட்டும் எதிர்க்கவில்லை முன்னதாக குஜராத்தில் அனுமதி மறுக்கப்பட்டது, கோவாவிலும் நுழைய தடை ஏற்படுத்தப்பட்டது.

இதனையடுத்து ஸ்டெர்லைட் நிர்வாகம் கர்நாடகா, கேரளாவில் இடம் தேடியது. அம்மாநில அரசுகள் ஆலைக்கு அனுமதி கொடுக்க திட்டவட்டமாக மறுத்து விட்டன. போபால் விஷ வாயு கசிவு சம்பவத்துக்கு பிறகு பல மாநிலங்களிலும் ஆபத்து மிகுந்த ஆலைகளை அமைக்க எதிர்ப்பு வலுத்ததால், மாநில அரசுகள் பின்வாங்கியது.
தமிழகத்தில் வரவேற்பு

இப்படி வரிசையாக பல்வேறு மாநிலங்களில் நிராகரிக்கப்பட்ட திட்டத்திற்கும் ஒருவருடத்திற்குள் தமிழகத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. துறைமுக நகரான தூத்துக்குடியில் ஆலையை அமைக்க அனுமதி தர அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா சம்மதம் தெரிவித்தார். 1994 ஆகஸ்ட் 1-ம் தேதி தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இஐஏயை (எண்வயர்மெண்ட் இம்பேக்ட் அசஸ்மெண்ட்) மேற்கொள்ள என்ஒஜி (தடை இல்லா சான்றிதழை) சான்றிதழை வழங்கியது.

தூத்துக்குடியை ஒட்டியுள்ள சிறுசிறு தீவுகளால் அமைந்துள்ள தேசிய கடல் பூங்காவுக்கு, 25 கிலோ மீட்டருக்கு அப்பால்தான் இத்தகைய ஆலையை அமைக்க முடியும் என்று சுற்றுச்சூழல் விதிகள் திட்டவட்டமாக கூறுகிறது. இதன்படியே ஆலை அமைக்கப்பட வேண்டும் என என்ஒஜியில் நிபந்தனை இடம்பெற்றது. ஆனால் இஐஏ (எண்வயர்மெண்ட் இம்பேக்ட் அசஸ்மெண்ட்) அறிக்கைக்காக காத்திருக்காமல் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் 1995 ஜனவரி 15-ல் அனுமதியை வழங்கியது. 1995 மே மாதம் ஸ்டெர்லைட் நிர்வாகம் ஆலை கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள தொழிற்சாலையானது மன்னார் வளைகுடாவில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலையில் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் அனுமதிக்கப்பட்டது.

விதிமுறைகள் மீறல்

கட்டுப்பாட்டு வாரியம் மன்னார் வளைகுடாவில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில்தான் ஆலை அமைக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனை விதித்தும், ஆலை 14 கிலோ மீட்டர் தொலைவில் அமைக்கப்பட்டது. அப்போது பொதுமக்கள் உண்மையான கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தை முன்னெடுத்தனர் தூத்துக்குடியில், ஆனால் போலீஸ் மற்றும் மாவட்ட நிர்வாகம் அடக்குமுறையை கொண்டு மக்களை ஒடுக்கியது.

தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் விதித்த நிபந்தனைகளை மீறி ஆலை அமைக்கப்பட்டும், அதனை கண்டுக்கொள்ளாமல் 1996-ல் ஆலை செயல்பட அனுமதி வழங்கப்பட்டது. புதியதாக வழங்கப்பட்ட உரிமத்தில் புதிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. ஆலைக்குள் 25 மீட்டர் அகலத்திற்கு பசுமை அடர்த்தி (Green Park) அமைக்க வேண்டும் என்று விதிமுறையுடன் உரிமம் வழங்கப்பட்டது. (ஆலைக்குள், 250 மீட்டர் அகலத்திற்குப் பசுமை அடர்த்தி அமைக்க வேண்டும் என்ற விதியை, அன்றைய தமிழக அரசு ஏழு நாட்களில் மாற்றி, 25 மீட்டர் அகலத்திற்கு இருந்தால் போதும் என்று திருத்தியது.)

தொழில்சாலையால் நிலத்தடி நீர் மற்றும் காற்று மாசுபாடு ஏற்படக்கூடாது எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டது. இவையெல்லாம் மதிக்கப்பட்டதா என்பது இன்று இருக்கும் நிலையே சாட்சியாகும்.

பலனளிக்காத போராட்டம்

மராட்டியம் போன்று தமிழகத்திலும் ஆலைக்கு எதிராக போராட்டம் தொடங்கியது. ஆனால் அவையெல்லாம் போலீஸ் மற்றும் மாவட்ட நிர்வாகம் மூலமாக ஒடுக்கப்பட்டது. 1996-ல் ஸ்டெர்லைட் ஆலை செயல்பட தொடங்கிய நிலையில் மீனவ மக்களும், தன்னார்வ அமைப்புகளும் ஆலைக்கு எதிராக அறப்போராட்டம் நடத்தினர். வைகோ தலைமையிலான மதிமுக ஆலைக்கு தொடக்கத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகிறது. 1996 மார்ச் 5-ல் தூத்துக்குடியில் வைகோ தலைமையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற உண்ணாவிரத அறப்போர் நடைபெற்றது.

தொடர்ந்து மதிமுக தரப்பிலும், மக்கள் தரப்பிலும் போராட்டம் நடைபெற்றது. ஆனால் அடக்குமுறையால் போராட்டம் ஒடுக்கப்பட்டதே தவிர பலன் எதையும் அளிக்கவில்லை. மராட்டியத்தில் ஒரு வருடத்தில் மக்கள் விரட்டிய ஆலையை எவ்வளவு போராடியும் விரட்ட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது. ஆட்சியாளர்கள் பக்கபலமாக இருந்தனர் என்பதை தவிர்த்து வேறு எதுவும் கிடையாது. போராட்டத்திற்கு தொடக்கத்தில் ஆதரவு என்று கூறி வந்த அரசியல் கட்சிகளும் தெரித்து ஓடிவிட்டன. புதிது, புதியதாக கிளம்பிய அமைப்புகளும் கிடைத்ததை வாங்கியும், வேறுபாட்டாலும் இருந்த இடம் தெரியாமலே சென்றது.

வி‌ஷ வாயு

ஸ்டெர்லைட் ஆலை தொடங்கி செயல்பட தொடங்கியதுமே பாதிப்புக்கள் தொடர்பாக மக்களின் புகார்கள் குவியத்தொடங்கியது. ஆனால் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மாசு ஏற்படுத்திய ஆலையை பாதுகாக்கும் பணியையே மேற்கொண்டது.

1997 ஆகஸ்ட் 20-ம் தேதி ஸ்டெர்லைட் தொழிற்சாலை பகுதியில் அமைந்திருக்கும் தமிழ்நாடு துணை மின்நிலையத்தில் பணியாற்றிய ஊழியர்கள் ஆலையில் இருந்து வெளியேறிய புகை காரணமாக தலைவலி, இருமல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்படுவதாக குற்றம் சாட்டினர்.

1997 மே 5-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலையில் அருகே செயல்பட்டு வரும் ரமேஷ் ப்ளவர் நிறுவனத்தில் பணியாற்றிய பெண்கள் பாதிப்புக்கு உள்ளானார்கள். அவர்கள் ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியாகிய நச்சு வாயு காரணமாக மயக்கம் அடைந்தார்கள். ஆனால் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஸ்டெர்லைட்டை பாதுகாக்கும் விதமாகவே செயல்பட்டது.

1997 ஜூலை 5-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலையில் நச்சு வாயுக் கசிவு ஏற்பட்டதால், அந்தப் பகுதியை சுற்றிலும் நூற்றுக்கணக்கானோர் மயக்கம், மூச்சுத் திணறல், நெஞ்சு எரிச்சல், வயிற்றுக் குமட்டலால் பாதிக்கப்பட்டனர்.

ஐகோட்டில் அல்லாடிய வழக்கு

சுத்தமான சுற்றுச்சூழலுக்கான தேசிய அறக்கட்டளை ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடர்ந்த வழக்கில் 1998 நவம்பரில் மெட்ராஸ் ஐகோர்ட்டு, ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்படும் மாசுபாடு தொடர்பாக அறிக்கையை சமர்பிக்குமாறு தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு உத்தரவிட்டது.

தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் மற்றும் ஆராய்ச்சி அமைப்பான நீரி என்னும் (National Environonment Engineering Research Institute-NEERI) மத்திய அரசு நிறுவனம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு வந்து ஆய்வு செய்த அறிக்கையை தாக்கல் செய்தது. அதாவது சுற்றுச்சூழலை முற்றாக நாசமாக்கும் என்பதால், ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என அறிக்கையில் குறிப்பிட்டது.

நிறுவனம் ஆய்வு செய்து அறிக்கையை தாக்கல் செய்ததில்:-

  ஸ்டெர்லைட் ஆலை பசுமை அடர்த்தியை ஏற்படுத்தவில்லை.

  தயாரிக்கும் பொருட்களும் அங்கீகாரம் பெறவில்லை.

  ஸ்டெர்லைட் ஆலையால் நிலத்தடி நீர் மாசுபடுகிறது. ஆர்செனிக், செலினியம், ஆர்சனிக், அலுமினியம் மற்றும் தாமிரத்தால் மாசு ஏற்படுகிறது.

  ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியான நச்சு வாயு காரணமாக ரமேஷ் ப்ளவர் மற்றும் தமிழ்நாடு துணை மின்நிலை ஊழியர்கள் பாதிக்கப்பட்டு உள்ளார்கள்.

  ஸ்டெர்லை ஆலை மன்னார் வளைகூடாவில் இருந்து 14 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து உள்ளது. அனுமதிக்கப்பட்ட நிபந்தனையானது மீறப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டது. நீரி அமைப்பின் தலைவர் சுற்றுச்சூழல் அறிவியல் முனைவர் கண்ணா, ‘ஸ்டெர்லைட் ஒரு நாசகார ஆலை, மூடப்பட வேண்டியதுதான்’ என்றார்.

1998 நவம்பர் 23 ம் தேதியன்று, ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு மெட்ராஸ் ஐகோர்ட்டு இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. ஐகோர்ட்டு உத்தரவை அடுத்து வெற்றியாக ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. ஆனால் சில நாட்கள் மட்டுமே செயல்படவில்லை, மீண்டும் அனுமதியுடன் செயல்பட தொடங்கியது.

டிசம்பர் ஒன்றாம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து நடத்தலாம் என்று ஐகோர்ட்டு முந்தைய தீர்ப்பை மாற்றியது. மேலும், ஸ்டெர்லைட் ஆலையில் மீண்டும் ஆய்வை மேற்கொள்ளும்படி நீரி அமைப்பிற்கு உத்தரவிட்டது. இது நீரிக்கு ஒரு வருவாய் தொடக்கமாக இருந்தது. 1999 மற்றும் 2007 வரையில் நீரி பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ள ரூ. 1.27 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்களை வாங்கியது, இவற்றில் ஒரே மாதிரியாக ஸ்டெர்லைட் நடவடிக்கைகளை பாதுகாக்கும் வகையில் அதனால் ஏற்படும் பாதிப்பு குறைத்து மதிப்பிடப்பட்டது.

இதனையடுத்து நீரி தன்னுடைய இரண்டாவது ஆய்வு அறிக்கையை 1999 பிப்ரவரி 9-ம் தேதி சமர்பித்தது. அதாவது முதல் அறிக்கையை தாக்கல் செய்து 45 நாட்கள் கழித்து தாக்கல் செய்தது. அப்போது ஆலைக்கு சாதமாக தகவல் தெரிவிக்கப்பட்டது. சிக்கலான சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டை மேற்கொள்ள வேண்டும் என்றால் தொழிற்சாலை முழுவதுமாக இயங்க வேண்டும் என்ற பரிந்துரையையும் முன்வைத்தது. ஆய்வை ஒருவருடத்திற்குள் முடிக்க வேண்டும் என்ற நிலையில், ஆய்வு அறிக்கையானது ஜூலை 2003-ல் சமர்பிக்கப்பட்டது. ஸ்டெர்லைட் தொழிற்சாலை முழு அளவு உற்பத்தியிலும் ஈடுபடலாம் என தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் 70,000 டன் தாமிரம் உற்பத்தி செய்வதற்கு அனுமதி வழங்கியது, ஆனால் 2004-ல் மட்டும் ஸ்டெர்லைட் ஆலை 1,75,242 டன் தாமிரம் உற்பத்தி செய்தது.
தொடர்ந்த நச்சுவாயு பாதிப்பு

1999 மார்ச் 2-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலை அருகே அமைந்து உள்ள ஆல் இந்தியா ரேடியோ நிலையத்தில் 11 பணியாளர்கள் வாயு கசிவு காரணமாக பாதிப்புக்கு உள்ளானார்கள், அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிர்தப்பினர். அப்போது தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாவட்ட நிர்வாகம் ஸ்டெர்லைட் ஆலையை பாதுக்காக்கவே முன்வந்தது, ஆலைக்கு ஆதரவாகவே ‘கிளின் ஷிட்’ கொடுக்கப்பட்டது. தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் ஸ்டெர்லைட் ஆலையின் உற்பத்தியை 40,000 டன்னில் இருந்து 70,000 டன்னுக்கு உயர்த்தியது.

கழிவுநீர் வெளியேற்றம்

2001 ஜனவரி 2-ம் தேதி தூத்துக்குடி மாவட்ட மக்கள் தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியத்திடம் புகார் ஒன்றை கொடுத்தார்கள். அதில் ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து மழை நீருடன் கழிவுநீரும் வெளியேற்றப்படுகிறது என தெரிவிக்கப்பட்டது. 2000-ம் ஆண்டு நவம்பர் 21, 24 மற்றும் டிசம்பர் 12-ம் தேதிகளில் கனமழை பெய்த போது அவை வெளியேற்றப்பட்டது. சில்வர்புரம், மீளவிட்டான் குளங்களுக்குள் வெள்ளமாக சென்றது. இதற்கிடையே வழக்கு சுப்ரீம் கோர்ட்டு சென்றது.

மாசுகட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவு

2004 செப்டம்பர் 21-ல் சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்பு குழு ஸ்டெர்லைட்டில் ஆய்வு செய்தது. கண்காணிப்பு குழுவும் ஆலையில் செயல்பாட்டில் திருப்தி கொள்ளவில்லை. மேலும் ஆலையின் தரப்பில் ஒருநாளையை தாமிரம் உற்பத்தி 391 டன் என்பதை 900 டன்னாக உயர்த்துவதற்கு (வருடத்திற்கு 300,000 டன்கள்) மேற்கொள்ளப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதி பரிந்துரைக்கு ஒப்புதல் கொடுக்கக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே ஒப்புதல் பெறுவதற்கு முன்னதாகவே உள்ளே ஆலைக்கான உட்பிரிவு பணிகள் (உற்பத்தியை அதிகரிப்பதற்காக கட்டமைப்பு) நடைபெற்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடர்பாக விசாரணையை மேற்கொள்ள கண்காணிப்பு குழு உத்தரவிட்டது. உரிமம் பெறாமல் ஆலை நிர்வாகம் கட்டுமான பணிகளை மேற்கொண்டு இருந்தால் பவ்லேறு சுற்றுசுழல் பாதுகாப்பு சட்ட பிரிவுகளின் கீழ் நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கண்காணிப்பு குழு மாசுகட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவிட்டது.

2004 நவம்பர் 16-ல் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கையை தாக்கல் செய்தது. ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் உரிமம் பெறாமல் உற்பத்திக்கான பணியை மேற்கொண்டு உள்ளது என உறுதிசெய்யப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் 70 ஆயிரம் டன் தாமிரம் உற்பத்தி செய்யவே அனுமதி பெற்றது, ஆனால் அதனை மீறி 1,64,236 டன்களை உற்பத்தி செய்து உள்ளது என கண்டுபிடிக்கப்பட்டது. அதுபோக ஆலையின் முழு பரப்பும் தாமிரம் உருக்குதல், சுத்திகரித்தல், கந்தக அமில ஆலை, பாஸ்போரிக் அமில ஆலை, மாற்றிகள் பல்வேறு நிலைகளில் பணிகள் முடிந்து இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் கந்தக அமிலம் ஆலைக்கான (Sulphuric Acid plant ) பணி 2004 ஆகஸ்ட் மாதம் முடிந்துவிட்டது, சுற்றுசுழல் துறையின் அனுமதியை பெறுவதற்கு முன்னதாக பிளாண்ட் அமைக்கப்பட்டது. ஆலைக்கு உள்ளே மேற்கொள்ளப்பட்ட உட்பிரிவு கட்டுமானங்களுக்கு எந்தஒரு அனுமதியும் தமிழக மாசுகட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதியை பெறவில்லை.

சட்டத்தை பாதுகாக்க வேண்டியவர்களை அதனை உடைத்த அவலம்

சட்டத்தின்படி ஆலைக்கு உள்ளே மேற்கொள்ளப்பட்ட உட்கட்டுமானப் பணிகள் அனைத்தும் சட்டவிரோதமானவை, தமிழக மாசுகட்டுப்பாட்டு வாரியத்திடம் இருந்து அனுமதியை பெறவே இல்லை. மாறாக செய்த தவறில் இருந்து தப்பிக்க ஸ்டெர்லைட் ஆலை அதிகார வர்க்கங்களை சதாமாதானப்படுத்தும் பணியை மேற்கொண்டது. ஆலையில் இவ்வளவு குறுபடி மற்றும் சட்டவிரோத பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருந்த நிலையில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தை சேர்ந்த டாக்டர் இந்திரானி சந்திரசேகரன் 2005 ஏப்ரல் 7-ம் தேதி, ஸ்டெர்லைட் ஆலை உற்பத்தியை அதிகரிக்க உரிமத்தை நீட்டிக்குமாறு தமிழக மாசுகட்டுப்பாட்டு வாரியத்திற்கு கடிதம் எழுதினார்.

இத்தகையை சூழ்நிலையில் சுப்ரீம் கோர்ட்டு அமைத்த கண்காணிப்பு குழுவும் சமரத்திற்கு வந்ததாகவே தெரிகிறது. டாக்டர் இந்திரானி சந்திரசேகரன் கடிதத்தில் “ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கான ஒப்புதலை வழங்குவது பற்றி தமிழக மாசுகட்டுப்பாட்டு வாரியம் இப்போது முடிவு செய்யலாம் என சேர்மன், எஸ்சிஎம்சி (சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்பு குழு) விரும்புதாக,” குறிப்பிடப்பட்டு உள்ளது. இவ்விவகாரத்தில் தமிழக மாசுகட்டுப்பாட்டு வாரியத்தை இக்கட்டான நிலையில் தள்ளிவிட்டு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்பு குழு தங்களை விடுவித்துக்கொண்டது. தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தை சட்டத்தை மீற செய்யவும், ஆலை நிர்வாகத்தின் சட்டவிரோதமான கட்டுமானம் மூலம் உற்பத்தியை தொடங்க உரிமம் வழங்கவும் உத்தரவிட்டுவிட்டது.

மக்கள் போராட்டம், கோர்ட்டு வழக்கு என சென்றாலும் ஸ்டெர்லைட் ஆலை தன்னுடைய உற்பத்தியை பெருக்கிக்கொண்டுதான் சென்றது. 2008-ல் ஒருநாள் உற்பத்தியை 1,200 டன்னாக உயர்த்தியது. உற்பத்தி அதிகரிக்க, மாசும் அதிகரித்தது. சட்ட விதி முறைகளுக்கான தெளிவான ஆதாரங்கள் இருந்தும் நடவடிக்கை எடுக்கப்படாமல் மிகவும் துரதிஷ்டவசமான நிலைக்கு தள்ளியது. இதனையடுத்து உரிமத்தில் குறிப்பிடப்பட்ட விதிகளை மீறியதற்கும், மாசு அதிகரிப்புக்கும் ஏன் ஆலையை மூடக்கூடாது என தமிழக மாசுகட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ் அனுப்பியது.

இதற்கிடையே ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிராக 1996-ல் இருந்து பல்வேறு கால கட்டங்களில் வைகோ மற்றும் பல்வேறு தரப்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த மெட்ராஸ் ஐகோர்ட்டு 2010 செப்டம்பர் 28-ல் சட்டத்தை மீறியதாகவும், சுற்றுசூழலுக்கு மாசு ஏற்படுத்தியதாகவும் ஆலையை மூட உத்தரவிட்டது ஐகோர்ட்டு. இருப்பினும் ஆலை மூடல் என்ற நற்செய்தியானது நீண்ட நாள் நீடிக்கவில்லை. ஆலை நிர்வாகம் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்து, இடைக்கால தடையை பெற்று ஆலையை நடத்தியது.

2012 ஜூனில் வைகோ ஆஜராகி வாதாடிய போது, ஸ்டெர்லைட் ஆலை தூத்துக்குடியில் 1994-ல் நிறுவப்பட்டது. தேசிய கடல் பூங்கா எனும் 21 தீவுகள் இருக்கிற கடற்கரையிலிருந்து 25 கி.மீ.,க்கு அப்பால்தான் ஆலையை நிறுவ வேண்டும் என்ற நிபந்தனையை மீறி இந்த ஆலை அமைக்கப்பட்டதாலும், பசுமை வளாகம் நிபந்தனைப்படி அமைக்கப்படாததாலும் சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதாலும் சென்னை ஐகோர்ட்டு ஆலையை நிரந்தரமாக மூடிட உத்தரவு பிறப்பித்தது.

ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயங்கினால் லட்கணக்கான மக்களுக்கு உடல்நலக்கேடு ஏற்படும்,” என பட்டியலிட்டார்.

விசாரணையின் நகர்வில் உரிமம் பெறாமல் தொடங்கப்பட்ட பிளாண்ட் மூலம் ஸ்டெர்லைட் தன்னுடைய உற்பத்தியை மேற்கொள்ளலாம் என உத்தரவிடப்பட்டது. அக்டோபர் 2010 முதல் 2013 வரையில் கோர்ட்டு தன்னுடைய உத்தரவை பிறப்பித்தது, இதற்கிடையே ஆலையில் நடைபெற்ற விபத்து சம்பவங்களில் உயிரிழப்பு சம்பவங்களும் நேரிட்டது.

விடாத நச்சுவாயு தாக்குதல்

2013 மார்ச் 23-ம் தேதி தூத்துக்குடி நகரம் மிகவும் மோசமான அளவில் நச்சுவாயு தாக்குதலுக்கு உள்ளானார்கள். மக்கள் மூச்சு திணறல், வாந்தி, கண் எரிச்சல், கருச்சிதைவுகள் மற்றும் கடுமையான பாதிப்பை மக்கள் சந்தித்தனர். தமிழக மாசுகட்டுப்பாட்டு வாரியம் தன்னுடைய சுழற்சியை தொடர்ந்தது. 2013 மார்ச் 29-ம் தேதி மாசு கட்டுப்பாடு தடுப்பு சட்டத்தின் விதிகளை மீறியதாக ஆலையை மூட உத்தரவிடப்பட்டது.
ஆனால் ஸ்டெர்லைட் நிர்வாகம் தவறு எதுவும் செய்யவில்லை, சிக்காட்டில் அமைந்து உள்ள பிற நிறுவனங்களில் இருந்து வந்திருக்கலாம் என குற்றம் சாட்டியது.

ஆனால் அதே தேதியில் ஸ்டெர்லைட் ஆலையில் சல்பூரிக் அமில பிளாண்டில் இருந்து வெளியாகிய வாயு (சல்பர் டையாக்ஸைடு) அனுமதிக்கப்பட்ட அளவைவிட மூன்று மடங்கு அதிகமாக காணப்பட்டது என தெரிவிக்கப்பட்டது. அப்போதும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் தோல்வியையே தழுவியது. ஸ்டெர்லைட் ஆலை பசுமை தீர்ப்பாயத்தில் முறையீடு செய்தது. இதனை விசாரித்த தீர்ப்பாயம், தொழிற்சாலையை ஆய்வு செய்ய வல்லுநர் குழுவை அமைத்தது. அந்தக் குழுவின் அறிக்கை அடிப்படையில், தொழிற்சாலையை மூடும் உத்தரவு ரத்து செய்யப்பட்டது.

சுப்ரீம் கோர்ட்டில் தோல்வி

2013 ஏப்ரல் 2-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டு கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தது. சட்டவிதிகள் மீறப்பட்டதை மனுதாரர்கள் பட்டியலிட்டதை ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, ஆலையை மூட உத்தரவிட முடியாது என மறுத்துவிட்டது. ஆலையை மூடுவது என்பது சரியானது கிடையாது என சுப்ரீம் கோர்ட்டு வாதிட்டது. “ஸ்டெர்லைட் ஆலையின் தாமிர உற்பத்தி இந்தியாவில் கணிசமாக பங்களிப்பை கொண்டு உள்ளது. இந்திய பாதுகாப்பு, மின்சார, ஆட்டொமொபைல், கட்டுமான உட்கட்டமைப்பு போன்றவற்றில் தாமிரம் பயன்படுத்தப்படுகிறது. ஆலையானது 1300 பேருக்கு பணி வழங்குகிறது.

கட்டுமான பணிகள் மூலமாகவும் வேலைவாய்ப்பு வழங்குகிறது,” என்றது சுப்ரீம் கோர்ட்டு. சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்காக மாவட்ட நிர்வாகத்திடம் ரூ.100 கோடி அபராதம் செலுத்த உத்தரவிட்டப்பட்டது. இப்போது வரையில் இந்த பணம் பயன்படுத்தப்படவில்லை, அதனுடைய நிலைப்பாடு என்னவென்றே தெரியவில்லை என்றே மக்கள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.
தூத்துக்குடி மக்களின் பரிதவிப்பு

காப்பர் உருக்குதல் காரணமாக மிகவும் மாசுபாடு ஏற்படுகிறது. ஆர்சனிக், ஈயம், இரும்பு, சல்பர் டையாக்ஸைடு மற்றும் அமில வாயுக்கள் நச்சுத்தன்மையற்ற துகள்கள் நீர் மற்றும் காற்றில் பரவலாக மாசுபாட்டை ஏற்படுத்துகிறது. ஏற்கனவே தூத்துக்குடி நகரம் மாசுபாடு மற்றும் அபாயகரமான தொழில்சாலைகளின் மையமாகி வருகிறது. ஏற்கனவே சுற்றுச்சூழல் மாசுபாடு என்பது மோசமான நிலையிலே உள்ளது. தூத்துக்குடி தமிழகத்தின் புற்றுநோய் தலைமையமாக ஆகிவருகிறது என்பது உள்ளூர் மக்களிடம் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கிறது.

பல்வேறு இன்னல்களை எதிர்க்கொண்டு போராடி வரும் மக்கள் எந்தஒரு பிடிமானமும் இன்றி தவித்து வருகிறார்கள். தொழில்வளர்ச்சி முக்கியம்தான் ஆனால் சுற்றுச்சூழலையும் வாழ்வாதாரத்தையும் சீரழிக்கும் ஆலையால், சுற்றிலும் வசிக்கும் மக்களின் உயிருக்கு உத்திரவாதம் கிடையாது என்றால் எப்படி இருக்கும்? அத்தகைய பதற்றத்தில் இருக்கிறார்கள். இந்நிலையில் ஆலையை விரிவாக்கம் செய்ய கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. மாசுபாடு இடையே வாழும் மக்கள் தங்களுடைய குழந்தைகள் நிலைக்குறித்து பெரிதும் ஐயம் கொள்ளும் மக்கள் விழித்துக்கொண்டு போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.

தூத்துக்குடி மக்களின் நிம்மதியை முற்றிலும் கெடுத்த ஆலையாக ஸ்டெர்லைட் உள்ளது என்பதில் ஐயம் கிடையாது. அவர்களுடைய பரிதவிப்பை அனைவரும் பகிர்ந்து ஆலையை மூட போராட்டத்தை இன்னும் ஸ்திரமாக்க வேண்டும்.

யார் குற்றவாளி?

மக்களை பற்றி துளியும் எண்ணாமல் பிறமாநிலங்களில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட திட்டத்திற்கு விரைவாக அனுமதி கொடுத்து அடிக்கல் நாட்டிய அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா முதல், பல்வேறு எதிர்ப்புகள் மற்றும் போராட்டங்களை தகர்த்து, காங்கிரசு-கருணாநிதி ஆசியுடன் 1997-ல் ஸ்டெர்லைட் ஆலை தூத்துக்குடியில் தனது உற்பத்தியை தொடங்கியது வரையில் தவறுகள் செய்தது யாரென்று சற்று யோசியுங்கள். மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளை மாற்றி, குறிப்பிடப்பட்ட விதிமுறையும் ஆலை நிர்வாகத்தால் பின்பற்றப்படாமல் இப்போது வரையில் ஆலை செயல்பட்டு வருகிறது.

மாசு கட்டுப்பாட்டு வாரியம், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சம், தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் மற்றும் ஆராய்ச்சி அமைப்பு மற்றும் சுப்ரீம் கண்காணிப்பு கமிட்டி என அனைத்து தரப்பில் விதிமுறைகள் மீறல் மற்றும் மாசு உறுதிசெய்யப்பட்டும் எந்தஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாமல் ஆலை செயல்படுகிறது.

இதில் அரசு அதிகாரிகள், ஆட்சியாளர்கள் என அனைத்து தரப்பிலும் துணிந்து மேற்கொள்ளப்பட்ட அழிவு நகர்வுதான் இன்றைய தூத்துக்குடி மக்களின் வாழ்க்கை பாதிப்புக்கு காரணமாகும். 1996-ல் இருந்து இப்போது வரையில் அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் ஆட்சியில் இருந்து வருகிறது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடி வரும் கட்சிகளும் இந்த அரசுகளில் பங்கு பெற்று இருந்தது என்பது அனைவருக்கும் நினைவிருக்கலாம். யார் நடவடிக்கை எடுத்தார்கள் என்று யோசியுங்கள். போராட்டம் நடக்கும்போது ஆதரவு என வரும் கட்சிகள், பழையவற்றை மறுக்க முடியுமா?. ஆலையை முதலிலே அதிமுக நிறுத்தியிருக்கலாம், திமுக முடக்கியிருக்கலாம். ஆனால் நடந்தது என்ன?

இன்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதியை மறுத்து உள்ளது, எத்தனை நாட்கள் நீட்டிக்கும் என்று யாருக்கு தெரியும்? ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் 96-களில் இருந்து எத்தனையோ அமைப்புகள் தோன்றி, மூழ்கி போய்விட்டன. இன்று போராட்டம், உண்ணாவிரதம் என கூறும் கட்சிகள் ஆளும் கட்சியாக இருந்தபோது ஆலை நிர்வாகத்திற்கு எதிராக சிறு நடவடிக்கையில் கூட இறங்கியது கிடையாது. மக்களை ஏமாற்ற கண் துடைப்பு நாடகத்தின் கருவியாகவே மாசு கட்டுப்பாட்டு வாரியம் பயன்படுத்தப்பட்டு உள்ளது.

1996-களில் இருந்து தூத்துக்குடி மக்கள் தங்களுடைய எம்.பி., எம்.எல்.ஏ.க்களை தேர்வு செய்து உள்ளனர். அவர்கள் தேர்தலின் போது தங்களுடைய எதிர்ப்பை பதிவுசெய்யும் விதமாக தேர்தலை புறக்கணிக்கவில்லை. மாறாக ஏமாற்றம் மட்டுமின்றி உயிருக்கே உலை வைக்கும் திட்டத்தை கொண்டுவந்து செயல்படுத்திய அரசியல் கட்சிகளுக்கே வாக்குகளை போட்டார்கள். இது யாருடைய தவறு?.

அமெரிக்காவில் அசார்கோ எனும் தாமிர உருக்கு ஆலையை எதிர்த்து அப்பகுதி மக்கள், குறிப்பாக விவசாயிகள் எதிர்த்துப் போராடியதால், அந்த ஆலையை மூடும்படி அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு அளித்து இருக்கின்றது. அதன்பிறகு 40 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், அசார்கோ ஆலை இருந்த சுற்றுப்புற விவசாய நிலங்களை இன்றுவரை பண்படுத்த முடியவில்லை. தூத்துக்குடி மக்களின் கதறல் அவ்வபோது கேட்டு, மங்குகிறது. இனியும் விடாது, அவர்களுக்காக ஸ்திரமாக நிற்கவேண்டும். மராட்டிய மாநில மக்கள் ஒரு வருடத்தில் விரட்டிய ஆலையை 24 வருடங்கள் போராடி நம்மால் முடக்க முடியவில்லை என்பது மிகவும் வேதனைக்குரியது.

போபால் விஷவாயு தாக்குதலின் போது பாதிக்கப்பட்ட மக்கள் இன்றுவரையில் பாதிக்கப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள். இதில் தவறிழைத்தவர்கள் அனைவரும் தப்பிவிட்டார்கள். இன்றுவரையில் குழந்தைகள் நச்சு தன்மையால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். டிசம்பர் 3 தேதி (1984 டிசம்பர் மூன்றில் விபத்து நேரிட்டது) மட்டும் பாதிக்கப்பட்டவர்கள் பாதகையுடன் போராட்டம் நடத்தும் காட்சிகள் மட்டும் ஊடகத்தில் வரும், இதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட்டார்களா? இல்லவே இல்லை. ஆலை தொடக்கம் முதல் அனைத்து பலனையும் அனுபவித்துவிட்டு ஒரு அரசு அதிகாரியை கையை காட்டி அரசியல்வாதிகள் எளிதாக தப்பிக்கிறார்கள் என்பதே இத்தேசத்தில், இன்றைய நிலை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *