சென்னையில் காற்று ஆரோக்கியமற்றாதாகி வருகிறது

Read Time:10 Minute, 28 Second
மனிதன் வாழ முக்கியமானது மற்றும் அடிப்படையானது காற்று. இன்று நாம் சுவாசிப்பது சுத்தமான காற்றா என்ற பெரும் கேள்வி எழுகிறது. காற்று மாசுபாடு குறித்து பள்ளியில் ஆச்சரியமாக படித்த நாம் இன்று யோசிப்பது கூட கிடையாது. சென்னை போன்ற பெரும் நகரங்களில் எதிர்க்கொள்ளும் கொடுமை நம்முடைய வாழ்நாளை குறைத்துக் கொண்டு வருகிறது என்பதுதான் உண்மையாகும். பெருகிவரும் வாகனங்கள், தொழிற்சாலைகள், எரிபொருள் பயன்பாடுகள், மக்கா குப்பைகள் என பல்வேறு நிலைகளில் இந்தியாவே குப்பையாக மாறிக் கொண்டிருக்கிறது என்பதில் ஐயம் கிடையாது. 

2017 நவம்பர் இரண்டாவது வாரத்தில் டெல்லி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடுமையான காற்று மாசு ஏற்பட்டது இந்தியா முழுவதும் கவனம் பெற்றது. காற்று தரக் குறியீடு (ஏக்யூஐ) பல இடங்களில் 500-க்கும் அதிகமாக சென்றதால் 200 மீட்டருக்கு அப்பால் உள்ள எதையும் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது. பனி மூட்டம் போன்று காற்று மாசு சூழ்ந்ததால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். பள்ளி செல்லும் குழந்தைகள் மாஸ்க் அணித்து பள்ளிக்கு சென்றது, இலங்கை வீரர்கள் மாஸ்க் அணிந்து விளையாடியது, விளையாட தயங்கியது என்ற நிலையெல்லாம் அனைவரும் அறிந்தது. இவ்விவகாரம் சுப்ரீம் கோர்ட்டு சென்றது, உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.
 
இந்தியாவில் தீபாவளி பண்டிகை நாட்களில் முக்கிய தலைநகரங்களில் காற்று மாசுபாடு மிகவும் மோசமான நிலையை எட்டி வருவது வழக்கமானதாகும். 

காற்று மாசுபாட்டால் இந்தியர்களின் ஆயுட்காலமே குறைந்து கொண்டிருக்கிறது என்பதை புள்ளிவிபரங்கள் காட்டுகிறது.

ஆனால் இதுதொடர்பான செய்திகளை பத்திரிகையில் படிக்கும் போது ஆச்சர்யம் தெரிவிப்பதுடன் முடிந்து விடுகிறது. 	

2016-ம் ஆண்டில் காற்று மாசுபாடு அதிகம் உள்ள நகரங்கள் பட்டியலில் (ஒரு கியூபிக் மீட்டர் காற்றில் உள்ள மைக்ரோகிராம்ஸ் நுண்துகள்கள்) முதல் பத்து இடங்களில் இந்தியாவின் குவாலியர் - 176, பாட்னா - 149, அலாகாபாத் - 170, ராய்ப்பூர் - 144 , டெல்லி நகரங்கள் இடம்பெற்றது. இந்திய நகரங்கள் 50 சதவீத காற்று மாசுபாட்டால் மிகவும் பாதிப்படைந்துள்ளன. இந்தியாவில் 3 கோடி மக்கள் காற்று மாசுபாட்டால் ஏற்படும் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை ஆய்வுகள் காட்டுகிறது. 

காற்று மாசுபாடு காரணமாக கடந்த 2015-ம் ஆண்டில் மட்டும் உலகம் முழுவதும் சுமார் 90 லட்சம் பேர் பலியாகி உள்ளதாக தனியார் அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டது. காற்று மாசுபாட்டால் சுமார் 70 லட்சம் பேர் உயிரிழக்கக் கூடும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
 
காற்று மாசுபாடு என்றாலே உடனடியாக டெல்லியை பார்க்கும் நிலைமட்டும்தான் காணப்படுகிறது. சென்னையில் போகி பண்டிகையின் போது வழக்கத்திற்கு மாறாக அதிகமான அளவு காசு மாசுபாடு பதிவானது. போகி பண்டிகையின் போது பழைய பொருட்கள், டயர்கள், டியூப், பிளாஸ்டிக் பொருட்கள் எரிப்பதை தவிர்க்கவும், அதனால் ஏற்படும் மாசு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் பலன் கிடையாது. விமான சேவையை பாதிக்கும் வகையில் நிலைமை மாறியது. காற்று மாசுபாடு என்றால் டெல்லி நினைவுக்கு வரும் நிலையில் கடற்கரை நகரனா சென்னையில் வசிக்கும் மக்களே மோசமான காற்றைதான் சுவாசிக்கின்றனர். 

இவ்வருடம் தொடங்கியதில் இருந்து சென்னையில் எடுக்கப்பட்ட ஆய்வுகள் சென்னையில் காற்று ஆரோக்கியமற்ற நிலைக்கு சென்று உள்ளது என்பதை காட்டுகிறது.

பிப்ரவரி 7-ம் தேதியில் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு ஆய்வில் மணலியில் காற்று தரக் குறியீடு (ஏக்யூஐ, https://app.cpcbccr.com/AQI_India/ ) 162 ஆக காட்டியது. இது ஆரோக்கியமற்றதாக கருதப்படுகிறது. இதுபோன்று அமெரிக்க தூதரக பகுதியிலும் மோசமான அளவு காற்று மாசுப்பட்டது தெரியவந்தது. அப்பகுதியில் ஏக்யூஐ 157 ஆக பதிவாகியது. இயற்கை நிறைந்த சென்னை ஐஐடி பகுதியில் மட்டும் மிதமாக எக்யூஐ 99 ஆக பதிவாகியது. சென்னை விமான நிலையத்தையொட்டிய ஆலந்தூர் பகுதியிலும் காற்று தரக் குறியீடு (ஏக்யூஐ) 141 என ஆரோக்கியமற்ற நிலைக்குதான் சென்றது. 

காற்று தரக் குறியீடு 

ஏக்யூஐ (0 முதல் 50 வரையில்) தரமானது

ஏக்யூஐ (50 முதல் 100 வரையில்) திருப்திகரமானது

ஏக்யூஐ (101 முதல் 200 வரையில்)  மிதமான மாசுபாடு, சுகாதாரமற்றது. 

ஏக்யூஐ (201 முதல் 300 வரையில்) மோசமானது, சுகாதாரமற்றது.

ஏக்யூஐ (301 முதல் 400 வரையில்) மிகவு மோசமானது, அபாயகரமானது.

ஏக்யூஐ 401க்கும் அதிகமானது மிகமிக மோசமானது மற்றும் அபாயகரமானது.

சென்னையில் காற்று தரம் குறித்தான பரிசோதனையில் மாங்கனீசு, சல்பர், இரும்பு, அலுமினியம், சிலிக்கான் ஆகியவற்றின் அளவு அதிகமாக காற்றில் பதிவாகியது தெரியவந்தது.. இவையால் மனித உடல் ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்த முடியும். இதய, நுரையிரல் மற்றும் ஆஸ்துமா போன்ற நோய்களை ஏற்படுத்த முடியும். பிஎம் 2.5 மீட்டரால் இரத்தசெல்களிலும் நுழைய முடியும், மூளையிலும் பாதிப்பை ஏற்படுத்த முடியும். சாலைகளில் புழுதி, வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை, மெட்ரோ கட்டுமானம், கழிவுப்பொருட்களை எரிப்பது, நிலக்கரி யார்டுகள் மற்றும் எண்ணூர் அனல் மின் நிலையம் ஆகியவை சென்னையில் காற்று மாசுபாடுக்கு முக்கிய காரணியாக உள்ளது.

மார்ச் மாத தொடக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவில் மணலி பகுதியில் மிகவும் மோசமான அளவு காற்று மாசு இருப்பது தெரிகிறது.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சென்னையில் கோயம்பேடு, கொடுங்கையூர் மற்றும் ராயப்புரத்தில் கண்காணிப்பு நிலையங்களை கொண்டு உள்ளது. இங்கு சேகரிக்கப்படும் தரவுகள் ஐதராபாத்தில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது, பின்னர் டிஎன்பிசிபி இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. இதில் பிரச்சனை என்னவென்றால் பொதுமக்களுக்கு தகவல் சென்றடைவதில் காலம் கடந்துவிடுகிறது. மத்திய, மாநில அரசுக்கள் காற்று மாசு விவகாரத்தில் முக்கியமான, ஸ்திரமான நடவடிகையை எடுக்க வேண்டிய நிலை உள்ளது. டெல்லியில் மட்டுமின்றி சென்னை உள்பட பிற நகரங்களிலும் அரசுக்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. பொதுமக்களுக்கும் இதில் பெரும் பங்கு உள்ளது.

சென்னையில் வாகனங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பதையே புள்ளி விபரங்கள் காட்டுகிறது. 

வாகனங்கள் தவிர்த்து சென்னையில் மாசுபாட்டிற்கு பிளாஸ்டிக் பொருட்களும் முக்கியமான காரணியாக உள்ளது. பெருமளவு பொதுமக்கள் பிளாஸ்டிக் பைகளை தவிர்ப்பது சுற்றுசூழலுக்கு மிகவும் நல்லது. பிளாஸ்டிக் பொருட்கள் எரியூட்டல் காற்று மாசுபாடு மற்றும் சுகாதார பாதிப்புக்கு பெரும் காரணியாக உள்ளது. மத்திய சுகாதார கட்டுப்பாட்டு வாரியம் சேகரித்த தகவலின்படி ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் 5.6 மில்லியன் பிளாஸ்டிக் கழிவுகள் சேர்கிறது, இவற்றில் 2.24 மில்லியன் சேகரிக்கப்படமாலமே காணப்படுகிறது. இந்தியாவில் அதிகமாக பிளாஸ்டிக் கழிவுகள் சேரும் மாநிலமாக டெல்லி (689 பிளாஸ்டிக் கழிவுகள்) உள்ளது. 

இரண்டாவது நகராக சென்னையில் 429 டன்கள் பிளாஸ்டிக் கழிவுகள் சேர்கிறது. தமிழகத்தில் 301 பதிவுசெய்யப்பட்ட பிளாஸ்டிக் உற்பத்தி/மறுசுழற்சி நிறுவனங்கள் உள்ளது, அவற்றை உரமாக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் 5 நிறுவனங்கள் உள்ளது. எச்சரிக்கையாக 2015-16-ம் ஆண்டுகளில் தமிழகத்தில் சேர்ந்த பிளாஸ்டிக் கழிவுகளின் மதிப்பீடு 1,50,323 டன்களாக உள்ளது. இதே காலகட்டங்களில் 26.8 டன்கள் பிளாஸ்டிக் கழிவுகள் சாலை அமைக்கும் பணிக்கு பயன்படுத்தப்பட்டு உள்ளது என தகவல்கள் காட்டுகிறது. சுத்தமான இயற்கையை நம்முடைய சந்ததியினருக்கு கொடுக்க வேண்டும் என்ற பொறுப்பு உணர்வுடன் அனைவரும் செயல்படுவோம் என்பதை உறுதிசெய்வோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *