சென்னை ஐஐடியில் வனவிலங்குகள் உயிரிழப்பு அதிகரிப்பு

Read Time:9 Minute, 33 Second
சென்னை ஐஐடியில் வனவிலங்குகளின் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்பும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னைக்கு மத்தியில் பசுமை நிரம்பிய இதயப்பகுதியாக இருக்கும் வனப்பகுதியில் தான் சென்னை ஐஐடி அமைந்து உள்ளது. இங்கிருக்கும் வனம் காரணமாகவே சென்னையில் மாசு கட்டுப்பாடு என்பது குறிப்பிடக்கத்தக்க வகையில் கட்டுக்குள் உள்ளது என பல்வேறு ஆய்வுகள் குறுப்பிடுகிறது. எங்கும் பசுமை போர்த்திய ஒரு பகுதியில் பாடசாலை என்றால் எவ்வளவு அற்புதமானது என்று மனதில் நினைக்கையிலே மனம் மகிழ்ச்சியில் நிறைகிறது. இப்படிதான் ஐஐடி சென்னையும். ஆனால் உள்கட்டமைப்பு, வளர்ச்சி என்ற பெயரில் அதுவும் தப்பவில்லை. இது ஒருபகுதியில் இருக்க மற்றொரு பகுதியில் அந்த மண்ணிற்கு சொந்தமான வனவிலங்குகள் உயிரை மாய்த்து வருகிறது என்பது மிகவும் வேதனைக்குரியதாக இருக்கிறது.
 
சென்னையில் 236 ஹெக்டேர் பரப்பில் அமைந்துள்ள ஐஐடி வளாகத்தில் கலைமான்கள், புள்ளிமான்கள், குள்ளநரிகள், காட்டுப் பூனைகள் உட்பட பலவகை வன உயிரினங்கள் உள்ளன. அங்கு உள்ளவர்களால் உருவாக்கப்படும் குப்பைகளாலும், அங்கு நடத்தப்படும் நிகழ்ச்சிகளாலும் வன உயிரினங்கள் பல இறந்துள்ளன என வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

விலங்குகள் நலவாரிய அதிகாரி ஆண்டனி கிளமெண்ட் ரூபின், சென்னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் ஜூலையில் தாக்கல் செய்த மனுவில், சென்னையில் 236 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள ஐஐடி வளாகத்தில் கலை மான்கள், புள்ளி மான்கள், குள்ளநரிகள், காட்டுப்பூனைகள் உள்ளிட்ட பல அரியவகை வன உயிரினங்கள் உள்ளன. இந்த வளாகத்தில் வசிக்கும் குடும்பத்தினரும், உணவகங்கள் நடத்துவோரும் கொட்டும் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகளை சாப்பிட்டும், அங்கு உலவும் நாய்கள் கடித்தும் வாகனங்களில் சிக்கியும் 21 மான்கள் உயிரிழந்துள்ளன. எனவே, ஐஐடி வளாகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்குத் தடை விதிக்க வேண்டும். அங்குள்ள வன விலங்குகள் வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்த செயல்திட்டம் ஒன்றை வகுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது 

இது தொடர்பாக பசுமைத் தீர்ப்பாயம் அளித்த உத்தரவின் அடிப்படையில், ஐஐடி வளாகத்தில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நேரில் சென்று ஆய்வு நடத்தியது. ஆய்வுக்கு பின்னர் அறிக்கையை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பசுமை தீர்ப்பாயத்தில் சமர்பித்தது. அதில், ஐஐடி வளாகத்தில் முக்கிய இடங்களில் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படவில்லை, அங்கு குப்பைகள் முறையாக அள்ளப்படுகிறது. அங்கு கூடுதல் கட்டடங்கள் கட்ட அனுமதி பெறுவதற்காக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது என்று அதில் கூறப்பட்டிருந்தது.

2010-ம் ஆண்டில் இருந்து ஐஐடி சென்னை வளாகத்தில் 517 வன விலங்குகள் உயிரிழந்த சம்பவத்திற்கு ஐ.ஐ.டி. நிர்வாகத்தை குற்றம் சாட்டி தமிழக அரசு அறிக்கையை தாக்கல் செய்தது. மேலும் வளாகத்தில் கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெறும் போது அதிக சத்தம் எழுப்பப்படுவதையும் குறைக்கவேண்டும் என்று தமிழக அரசு கூறியது. விபரம்:- http://www.thehindu.com/news/national/tamil-nadu/state-blames-iit-m-for-death-of-517-wild-animals-in-its-campus/article19830649.ece

இந்த வழக்கு விசாரணை டிசம்பரில் நடைபெற்ற போது, சென்னை ஐஐடி வளாகத்தில் வாழும் அரிய வகை உயிரினங்கள் அனைத்தையும் ஐஐடி நிர்வாகம் பாதுகாக்க வேண்டும். பாதுகாக்கத் தவறும் பட்சத்தில் அபராதம் விதிக்கப்படும் என உத்தரவிட்டது. இருப்பினும் வளாகத்தில் உருவாகும் குப்பைகள் முறையாக அகற்றப்படுவதில்லை. இதனால், அங்கு இருக்கும் வன உயிரினங்களுக்குப் பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது எனவும் வனவிலங்குகள் ஆர்வலர்கள் தரப்பில் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

வன உயிரிகள் வாழ்வதற்கான சூழலை ஐஐடி வளாகம் மெல்ல மெல்ல இழந்து வருவதாகவும் சாடப்பட்டு வருகிறது.

இதற்கிடையே மான்கள் பட்டாசு குப்பைகளை உண்ணும் வீடியோக்களும் வெளியாகியது. இந்நிலையில் ஐஐடி மெட்ராஸ் வளாகத்தில் வனவிலங்குகளின் உயிரிழப்பு அதிகரித்து உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

2017-ம் ஆண்டில் வளாகத்தில் மட்டும் 99 வனவிலங்குகள் உயிரிழந்து உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

டிசம்பரில் ஐஐடி வளாகத்தில் உள்ள உயிரினங்களை நிர்வாகம் பாதுகாக்க வேண்டும் என பசுமைத்  தீர்ப்பாயம் உத்தரவிட்டு இருந்த நிலையில் 2017 நவம்பர் முதல் 2018 பிப்ரவரி வரையில் மட்டும் 46 விலங்குகள் உயிரிழந்து உள்ளன. விலங்குகள் நல ஆர்வலர் கிளமென்ட் ரூபின் தாக்கல் செய்த ஆர்.டி.ஐ. மனுவிற்கு பதிலளித்து உள்ள வனத்துறை மேற்கண்ட தகவல்களை வழங்கி உள்ளது. 82 மான்கள், நான்கு கலைமான்கள், மூன்று குள்ளநரிகள், ஒரு காட்டு நாய் மற்றும் ஒன்பது குரங்குகள் உயிரிழந்து உள்ளன என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 வனவிலங்குகள் உயிரிழப்பை குறைக்க தேவையான நடவடிக்கையை மேற்கொள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம் ஐஐடி மெட்ராசுக்கு உத்தரவிட்டதை அடுத்து, நிர்வாகம் தரப்பில் முதல்கட்டமாக சில நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை, குப்பைகளை விலங்குகள் எடுக்க முடியாத வகையிலான குப்பை பெட்டிகள், தெருநாய்களுக்கு கருத்தடை உள்ளிட்ட நடவடிக்கையை தொடங்கியது. ஆனால் இப்போதும் வன விலங்குகள் உயிரிழப்பு ஒவ்வொரு வருடம் அதிகரித்து காணப்படுகிறது. 2013 முதல் 2016 வரையில் 220 மான்கள், 8 கலை மான்கள் உயிரிழந்து உள்ளது. 

இப்போது வன விலங்குகள் உயிரிழப்பு அதிகரிப்பு தொடர்பாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கைக்கு பேட்டியளித்து பேசிய கிளமென்ட் ரூபின், “தேசிய பசுமை தீர்ப்பாயம் ஐஐடி மெட்ராஸ் நிர்வாகத்திற்கு எச்சரிக்கையை விடுத்தது, ஆனால் அதற்கு பின்னரும் இயற்கைக்கு மாறாக வனவிலங்குகள் உயிரிழந்து உள்ளன. தேசிய பசுமை தீர்ப்பாயம் செயல்படாத நிலையில், நீதியை கோருவது என்பது கடினமானது,” என்றார். 

மேலும் ஐஐடி சென்னை நிர்வாகம் வனவிலங்குகள் உயிரிழப்பை குறைத்து காட்டுகிறது எனவும் சந்தேகம் எழுப்பி உள்ளார். 2017 ஜூலை 19-ல் கலைமான் ஒன்று உயிரிழந்த விவகாரத்தை ஆர்.டி.ஐ.யில் முக்கிய கேள்வியாக எழுப்பியதாகவும், இதுதொடர்பாக தகவல் இல்லை எனவும் வனத்துறை தெரிவித்துவிட்டது எனவும் கிளமென்ட் ரூபின் குறிப்பிட்டு உள்ளார். ஆனால் ஐஐடி சென்னை அதிகாரிகள் வன விலங்குகள் உயிரிழப்பிற்கு நாய்கள் மற்றும் குரங்குகள்தான் காரணம் என குற்றம் சாட்டிஉள்ளனர். 

 “வனவிலங்குகளை பாதுகாக்க நிர்வாகம் மேற்கொள்ளும் நடவடிக்கையில் நாய்களின் தொல்லையானது மிகவும் சவாலாக உள்ளது. வளாகத்தில் உள்ள இளம் மான்களை பாதுகாப்பது என்பது கடினமான நிலையாக உள்ளது. நாய்கள் இளம் குட்டிகள் மற்றும் தாய் விலங்குகளை வேட்டையாடுகிறது. கிண்டி தேசிய பூங்கா போன்று சென்னை ஐஐடி வளாகப்பகுதியானது வனவிலங்குகள் பகுதியாக அறிவிக்கப்படாததால் எங்களால் நாய்களை விரட்ட முடியவில்லை,” என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நிர்வாகம் தரப்பில் கருத்தடை நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுகிறது.
 
ஐஐடி சென்னை வளாகம் ஒருபுறம் பசுமையை இழந்து வரும் நிலையில், அப்பகுதியில் வசிப்பவர்கள் குப்பையை கொட்டுவதாலும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *