5 ஆண்டுகளில் இந்திய வங்கிகளில் ரூ.1 லட்சம் கோடி மோசடி செய்யப்பட்டு உள்ளது ரிசர்வ் வங்கி தகவல்

Read Time:3 Minute, 50 Second
புதுடெல்லி,

5 ஆண்டுகளில் இந்திய வங்கிகளில் ரூ.1 லட்சம் கோடி மோசடி செய்யப்பட்டு உள்ளது ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்து உள்ளது.
  
இந்திய வங்கிகளில் தொழில் அதிபர்கள் கோடிக்கணக்கில் கடன் பெற்று அதை திருப்பி செலுத்தாமல் மோசடியில் ஈடுபடும் சம்பவம் அதிகரித்து காணப்படுகிறது. பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, பொதுத்துறை வங்கிகளிடம் ரூ.9 ஆயிரம் கோடி கடன்களை வாங்கி விட்டு திரும்ப செலுத்தாமல் லண்டனுக்கு தப்பி விட்டார். இதேபோன்று நிரவ் மோடி, மெகுல் சோக்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 13 ஆயிரம் கோடிக்கு மேல் அதிகமாக கடன் வாங்கி வெளிநாட்டுக்கு தப்பிவிட்டனர். 

கான்பூரில் உள்ள ரோட்டாமேக் பேனா தொழிற்சாலையின் உரிமையாளர் விக்ரம் கோத்தாரி மும்பையில் உள்ள யூனியன் பேங்க் ஆப் இந்தியா, கொல்கத்தாவில் உள்ள அலகாபாத் வங்கி, பேங்க் ஆப் இந்தியா, பேங்க் அப் பரோடா, இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் உள்பட 5-க்கும் மேற்பட்ட வங்கிகளில் ரூ.800 கோடிக்கும் மேல் கடன் வாங்கி மோசடி செய்த தகவல் வெளியாகியது. இதுபோன்று தொழில் அதிபர்கள் வரிசையானது நீண்டுக்கொண்டே செல்கிறது. சிபிஐ, அமலாக்கப்பிரிவு, வருமான வரித்துறையினர் என அனைத்து விசாரணை முகமைகளும் விசாரித்து வருகிறது.

இந்நிலையில் 5 ஆண்டுகளில் இந்திய வங்கிகளில் 23,866 மோசடி வழக்குகளில் ரூ.1 லட்சம் கோடி மோசடி நடந்து உள்ளது ரிசர்வ் வங்கி கூறிஉள்ளது.
  
தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் பி.டி.ஐ. செய்தி நிறுவனம் பெற்றதில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் இந்திய வங்கிகளில் நடந்துள்ள மேற்படி கடன் மோசடிகளின் விவரம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2013–14–ம் ஆண்டில் 4306 மோசடி சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. இதில் ரூ.10,170 கோடி அளவுக்கு முறைகேடு நடந்து இருக்கிறது. இது 2014–15 மற்றும் 2015–16–ம் ஆண்டுகளில் முறையே ரூ.19,455 கோடி (4639 சம்பவங்கள்), ரூ.18,698 கோடியாக (4693 சம்பவங்கள்) அதிகரித்து உள்ளது. 

2016–17–ம் ஆண்டில் நடந்த 5076 சம்பவங்களில் மொத்தம் ரூ.23,933 கோடி மோசடி அரங்கேறி உள்ளது. இதைப்போல மிகவும் அதிக அளவாக 2017–18–ம் ஆண்டில் ரூ.28,459 கோடி (5152 சம்பவங்கள்) முறைகேடு நடந்துள்ளது. இப்படி கடந்த 5 ஆண்டுகளில் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மோசடி சம்பவங்களில் ஒட்டுமொத்தமாக ரூ.1 லட்சத்து 718 கோடி தொகை அளவுக்கு மோசடி நடந்துள்ளதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. இத்தகைய முறைகேட்டில் ஈடுபட்டுள்ள தனிநபர்கள் மீது உண்மைத்தன்மை மற்றும் சூழ்நிலைகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறியுள்ள ரிசர்வ் வங்கி, இதில் மிகப்பெரிய மோசடிகள் தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும் குறிப்பிட்டு உள்ளது.

வங்கி மோசடி வழக்குகளில் வங்கி அதிகாரிகள் மீதும் வழக்குப்பதிவு செய்து சிபிஐ விசாரணையை முன்னெடுத்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *