காவிரி வழக்கை திட்டமிட்டப்படி நகர்த்திய மத்திய அரசு!

Read Time:9 Minute, 6 Second
Page Visited: 79
காவிரி வழக்கை திட்டமிட்டப்படி நகர்த்திய மத்திய அரசு!
காவிரி வழக்கில் கர்நாடக தேர்தலுக்கு பிறகே விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதில் திட்டமிட்டபடி மத்திய அரசு சாதித்துவிட்டது.

காவிரி விவகாரத்தில் தேசிய கட்சிகளாக இருக்கும் காங்கிரஸ், பாரதீய ஜனதாவாக இருந்தாலும் சரி மாநிலக் கட்சிகளான திமுக, அதிமுகவாக இருந்தாலும் சரி அனைவரும் தமிழகத்திற்கு செய்தது அநீதி மட்டுமே. கர்நாடக ஆட்சிக்கட்டில் போதையில் தேசத்தில் ஒருபகுதியான தமிழகத்தை வஞ்சிக்கும் செயலில் காங்கிரசும், பாரதீய ஜனதாவும் போட்டிப்போட்டு அமைதிக்காக்கிறது. மறுபுறம் திமுகவும், அதிமுகவும் நாங்கள் நடுவர் மன்றம் அமைக்க போராடினோம், சுப்ரீம் கோர்ட்டில் வாதாடினோம், நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட போராடினோம் என வரிசையாக அடுக்கமுடியுமே தவிர பயன் என்ன என்பதை அவர்களால் சொல்லவே முடியாது.

 மத்திய அரசில் இருந்தபோதும், மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தபோதும் என்ன செய்தீர்கள் என்பதற்கு இதுவரையில் அவர்களிடம் தெளிவான பதில் கிடையாது. இரு கட்சிகளும் அரசியலுக்காக ஒருவரை மற்றி ஒருவர் குற்றம் சாட்டுவதை மட்டும் தொடர்கிறார்கள். ஒவ்வொரு முறையும் இவர்களுடைய பிடி மத்திய அரசிடமே இருந்தது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. 

நூற்றாண்டுகளாக தொடர்ந்துவரும் காவிரி பிரச்சனையில் பிப்ரவரி 16-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டு இறுதி தீர்ப்பை வழங்கியது. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பில் வழங்கப்பட்ட 192 டிஎம்சி தண்ணீரை குறைத்து, 177.25 டிஎம்சி தண்ணீர் தமிழகத்திற்கு வழங்க உத்தரவிட்டது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இருப்பினும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. தமிழகத்திற்கு 14.75 டிஎம்சி தண்ணீர் குறைக்கப்பட்டாலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்ற உத்தரவு சிறிதளவு நம்பிக்கையை கொடுத்தது.

 இருப்பினும், கர்நாடகம் தேர்தலை நோக்கியதால் மத்திய அரசு முனைப்பு காட்டாது என்ற யூகம் இன்று என்னவாகியிருக்கிறது என்பது நாம் உணரலாம். 

சுப்ரீம் கோர்ட்டு நடுவர் மன்றம் வழங்கிய இறுதித்தீர்ப்பை நிறைவேற்ற ‘ஸ்கீம்’ (செயல்திட்டம்) ஒன்றை 6 வார காலத்துக்குள் ஏற்படுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இதற்காக எந்த சூழ்நிலையிலும், எந்த விதமான கால நீட்டிப்பும் வழங்கப்பட மாட்டாது என்றும் சுப்ரீம் கோர்ட்டு தனது தீர்ப்பில் குறிப்பிட்டது. காவிரி நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பில் நீர் பங்கீட்டை மேற்கொள்ள காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குமுறை குழு ஆகியவற்றை அமைக்க வேண்டும் என்று கூறியிருந்தது. 

இதனால், இந்த இரு அமைப்புகளையும் ஏற்படுத்த வேண்டும் என்பதைத்தான் ‘ஸ்கீம்’ என்று சுப்ரீம் கோர்ட்டு தனது தீர்ப்பில் குறிபிட்டுள்ளது என்பது பெரும்பாலானோரின் கருத்து. இதன் அடிப்படையிலேயே, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆனால் சுப்ரீம் கோர்ட்டு விதித்த 6 வார ‘கெடு’ மார்ச் 29-ல் முடிந்த பின்னர் காவிரி தீர்ப்பில் கூறப்பட்டுள்ள ‘ஸ்கீம்’ என்பதன் பொருள் என்ன? என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் கேட்டது. 6 வார காலெக்கெடு முடிந்த நிலையில் தமிழக அரசு சார்பில் மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு  தொடரப்பட்டது.

 அப்போது உருவாக்கப்படும் அமைப்பை முழுக்க தொழில்நுட்ப நிபுணர்களை கொண்டு அமைக்க வேண்டுமா? அல்லது நதிநீர் பங்கீடு பற்றிய நுட்பமான பிரச்சினையை திறமையுடன் அணுகும் வகையில் தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் மேலாண்மை வல்லுனர்கள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டுமா? என்றெல்லாம் கேள்வி எழுப்பியது. (நீர் பங்கீட்டு விவகாரத்தில் இரு நிபுணர்கள் குழுவும் அவசியமானது என்பது தெரியவில்லை என்று) இதனையடுத்து 6 வார கால அவகாசம் முடிந்த பின்னர்தான் கேட்க வேண்டுமா என மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம் தெரிவித்தது. இதனையடுத்து கர்நாடக தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு மத்திய அரசு தொடர்ந்து காலம் தாழ்த்துவதையும், அவகாசம் செய்வதையும் சுப்ரீம் கோர்ட்டில் செய்தது. 

இவ்விவகாரம் தொடர்பான வழக்குகள் ஏப்ரல் 9-ம் தேதி விசாரணைக்கு வந்த போது மத்திய அரசு மேலும் அவகாசம் கோரியது. அதனை ஏற்க மறுத்த சுப்ரீம் கோர்ட்டு மே 3-ந் தேதிக்குள் வரைவு செயல்திட்டத்தை தாக்கல் செய்யவேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால்  காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வரைவு திட்டம் தயாராகிவிட்டது, ஆனால் கையெழுத்திட வேண்டிய மத்திய அமைச்சர்கள் கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் இருப்பதால் மத்திய அமைச்சரவைக்கு அனுப்ப முடியவில்லை என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் 10 நாட்கள் மத்திய அரசு கோரியது. சுப்ரீம் கோர்ட்டு அதை ஏற்க மறுத்து, மே 8-ம் தேதி வரைவு செயல்திட்டத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்றது. இன்றும் (மே-8) வெறும் கையுடனே மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டு வந்தது. 

மத்திய அரசின் சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான வரைவு திட்டம் தாக்கல் செய்யப்படவில்லை. மேலும் 10 நாட்கள் கால அவகாசம் தேவை என மத்திய அரசின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

சுப்ரீம் கோர்ட்டும் செய்தி மீடியாக்கள் கண்டனம் தெரிவிக்கப்பட்டது என செய்தியை வெளியிடும் வகையில் பெயருக்கு கண்டனம் தெரிவித்தது. மத்திய நீர்வளத்துறை செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. விசாரணையை வரும் 14-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது. கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் வரும் 12-ம் தேதி நடைபெறுகிறது. கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதாவிற்கு காவிரி மிகவும் முக்கியமான விவகாரமாகும். இந்தசூழ்நிலையில் வழக்கு விசாரணை 14-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசும் தன்னுடைய திட்டத்தை திட்டமிட்டப்படி முன்னெடுத்துவிட்டது.
0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *