காவிரி விவகாரம் இதுவரையில் நடந்தது என்ன? தெரிந்துக்கொள்ள வேண்டியவை

Read Time:15 Minute, 12 Second

காவிரி நதி நீர் பங்கீட்டு விவகாரத்தில் காவிரி நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தமிழகம், கர்நாடகம், புதுச்சேரி மற்றும் கேரளா மேல்முறையீடு செய்த வழக்கில்தான் பிப்ரவரி 16-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டு இறுதி தீர்ப்பை வழங்கியது. இறுதி தீர்ப்பை நிறைவேற்றும் விவகாரம்தான் மற்றொரு வழக்காக இன்னும் நீடித்து வருகிறது, இதுதொடர்பான தொடர்ச்சி செய்தியை தினசரி நாளிதழ்களில் பார்த்து வருகிறது. காவிரி விவகாரத்தில் 1892-ல் இதுவரையில் நடந்தது என்ன? என்பதை தெரிந்துக்கொள்ள வேண்டியது கீழே பட்டியலிடப்பட்டு உள்ளது.

காவிரில் முதலில் பிரச்சனை தொடங்கியது எப்படி? 1924 உடன்படிக்கை

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உள்ள பிரம்மகிரி மலைப் பகுதியில் தலைக்காவிரி என்ற இடத்தில் காவிரி பிறக்கிறது. குடகு மாவட்டத்தில் ஹாரங்கி ஆறு காவிரியில் கலக்கிறது. காவிரி, தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரி வழியாக வங்க கடலில் கலக்கிறது. கர்நாடகம் மற்றும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் குடிநீர் மற்றும் பாசான தேவையானது காவிரியை சார்ந்ததாகவே உள்ளது.

1892-ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் ஆட்சியின் போது அப்போதைய சென்னை மாகாணத்திற்கும், மைசூர் சமஸ்தானத்துக்கும் இடையே காவிரி நதி நீரை பகிர்ந்துக்கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ச்சியாக இரு பிராந்தியத்திற்கும் இடையே பிரச்சனையை தீர்க்கமுடியாத நிலை நீடித்தது.

1924-ம் ஆண்டு பிரிட்டிஷ் இந்தியா அரசு இருமாநிலங்களும் கட்டிய அணைகளை அடிப்படையாக கொண்டு நதிநீர் பங்கீடு தொடர்பான உடன்படிக்கையை செய்து வைத்தது. அதாவது கர்நாடகாவின் மைசூர் – கண்ணம்பாடியில் கிருஷ்ணராஜ சாகர் அணையையும், தமிழகத்தின் மேட்டூர் அணையையும் அடிப்படையாக வைத்து, சென்னை மாகாணத்துக்கும் மைசூர் சமஸ்தானத்துக்கும் 50 ஆண்டு கால உடன்படிக்கை 1924-ல் செய்யப்பட்டது.

உடன்படிக்கை செய்யப்பட்டாலும், இப்போதுவரையில் பிரச்சனை தொடர்வதற்கு காரணம் என்ன?

காவிரி நீர் பகிர்வு உடன்படிக்கையை அடுத்து சுதந்திரம் வரையில் குறிப்பிடத்தக்க வகையில் பெரிய பிரச்சனைகள் எதுவும் எழவில்லை. 1924 ஒப்பந்தப்படியே காவிரி நீர் பகிர்வு நடந்துவந்தது. 1956-ல் மொழிவாரியாக மாநிலம் மறு சீரமைப்புக்கு செய்யப்பட்ட பின்னர் காவிரி ஆறு உற்பத்தியாகும் குடகு கர்நாடகம் வசம் சென்றது. முந்தைய உடன்படிக்கை முன்னெடுக்கப்பட்ட போது பிரச்சனையும் எழதொடங்கியது. புதுவை 1954-ல் யூனியன் பிரதேசம் ஆனது, புதுவையின் காரைக்கால் காவிரியால் பயனடைந்துவந்தது. 1960-ல் கேரளா கபினி நீரில் பங்கு கோரியது. கபினியின் பிறப்பிடம் கேரளாவில் அமைந்ததால் பங்கு கோரியது.

புதுவையும், கேரளாவும் புதிய பங்குதார்களாகினர். பேச்சுவார்த்தையும் 10 ஆண்டுகள் வரையில் தொடர்ந்தது.

தமிழகம் மற்றும் புதுச்சேரி கொண்டிருந்ததில் கர்நாடகம் மகிழ்ச்சிக்கொள்ளவில்லை. பழைய உடன்படிக்கையை தொடர விரும்பாத கர்நாடகம் 1960-ல் காவிரியில் அணைகளை கட்ட தொடங்கியது. 50 ஆண்டுகள் மட்டுமே உடன்படிக்கை என்பதால் அதில் குறிப்பிடப்பட்ட நிபந்தனைகள் 1974-ம் ஆண்டுடன் காலாவதியாகிவிடும் என கர்நாடக வாதாடியது. 1970-களில் அமைக்கப்பட்ட காவிரி உண்மை அறியும் குழு தமிழகத்தில் காவிரி நீர்ப்பாசனப் பரப்பு அதிகம் என தெரிவித்தது. 1972-ல் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தமிழகத்தில் காவிரி நீர்ப்பாசனப் பரப்பு 25.80 லட்சம் ஏக்கர் என்றும், கர்நாடகத்தின் நீர்ப்பாசனப் பகுதி 6.80 லட்சம் ஏக்கர் என்றும் தெரியவந்தது.

தமிழகத்தில் காவிரி நீர்ப்பாசனப் பரப்பு அதிகம் என்றதும் இருபுறமும் பாசனப் பகுதிகள் குறித்தான சர்ச்சைகள் தொடங்கியது. காவிரியில் தொடங்கிய பிரச்சனைக்கு ஸ்திரமான ஆரம்பமாகியது. தமிழகம் தன்னுடைய நீர்ப்பாசனப் பரப்பை குறைக்க விரும்பவில்லை, கர்நாடகம் நீர்ப்பாசனப் பரப்பை விஸ்தரிக்க விரும்பியது. சென்னை மாகாணம் மற்றும் மைசூர் சமஸ்தானம் இடையிலான ஒப்பந்தம் 1974-ல் முடிவுக்கு வந்தது. பிரச்சனை அதிகரிக்கவும் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்தது. தமிழக சுப்ரீம் கோர்ட்டை நாடியது, ஆனால் அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி கேட்டுக்கொண்டதால் தமிழகம் வழக்கை திரும்பப் பெற்றது. 1976-ல் ஒருமித்த உடன்பாடு ஏற்பட்டது, நீடிக்கவில்லை.

பிரச்சனை காவிரி நடுவர் மன்றம் சென்றது எப்படி?

காவிரி நீர் பகிர்வு தொடர்பாக உடன்பாடு ஏற்படாதால் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றது. காவிரியில் தமிழகத்திற்கான தண்ணீரை குறைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் விவசாயிகள் தரப்பில் போராட்டம் நடைபெற்றது. மாநிலங்களுக்கு இடையிலான ஆற்றுநீர்ப் பிரச்சினைகளுக்கான சட்டம் 1956-ல் தீர்ப்பாயம் (நடுவர் மன்றம்) அமைப்பதற்கான வழிவகை இடம்பெற்று உள்ளது. அதன்படி தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என்று தமிழக விவசாய அமைப்புகள் 1986-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு சென்றது. தமிழக அரசு தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பியது.

1990-ம் ஆண்டு நதி நீர் பகிர்வு தொடர்பாக இருமாநிலங்கள் இடையே மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையானது தோல்வியில் முடிந்ததும், காவிரி நடுவர் மன்றத்தை அமைக்க சுப்ரீம் கோர்ட்டு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது (1970-ல் இருந்து நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று தமிழகம் தரப்பில் வலியுறுத்தப்பட்டது). 1990 ஜூன் 2-ம் நாள் பிரதமர் வி.பி.சிங் தலைமையிலான மத்திய அரசு, காவிரி தீர்ப்பாயம் அமைத்தது. காவிரி தீர்ப்பாயத்திடம் கர்நாடக 465 டிஎம்சி, தமிழகம் 566 டிஎம்சி, கேரளா 99.8 டிஎம்சி, புதுவை 9.3 டிஎம்சி நீர் கோரியது.

1991 ஜனவரியில் தங்களுக்கான நீரை திறக்க ஆணையிடுமாறு தீர்ப்பாயத்திடம் தமிழ்நாடு கோரிக்கை வைத்தது. தீர்ப்பாயம் ஏற்க மறுக்கவே தமிழகம் சுப்ரீம் கோர்ட்டு சென்றது. 1991 ஏப்ரல் மாதம், தமிழகத்தின் கோரிக்கையை விசாரிக்குமாறு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பாயத்திற்கு உத்தரவிட்டது. சுப்ரீம் கோர்ட்டு கட்டளையின்படி 1991 ஜூன் மாதம் காவிரி தீர்ப்பாயம் இடைக்கால உத்தரவை பிறப்பித்தது. அதாவது 1980-81 க்கும் 1989-90 க்கும் இடைப்பட்ட 10 ஆண்டு சராசரியைக் கணக்கிட்டு, ஒவ்வொரு நீர்ப்பாசன ஆண்டிலும் கர்நாடகம் தமிழகத்திற்கு 205 டிஎம்சி நீர் வழங்க வேண்டும் என்பதாகும். மாத வாரியாக கர்நாடகம் திறந்து விட வேண்டிய நீரின் அளவும் வரையறுக்கப்பட்டது.

கர்நாடகம் பாசனப் பரப்பை அப்போதைய 11,20,000 ஏக்கருக்கு மேல் விரிவுபடுத்தக் கூடாது என்றும் தீர்ப்பாயம் ஆணையிட்டது. உத்தரவிற்கு இணங்காத கர்நாடக அரசு, அவசரச் சட்டம் பிறப்பித்தது. பின்னர் ஜனாதிபதி கேட்டுக்கொண்டபடி சுப்ரீம் கோர்ட்டு தலையிட்டு அந்த அவசரச் சட்டத்தை நீக்கியது. மத்திய அரசு தீர்ப்பாயத்தின் இடைக்காலத் தீர்ப்பை 1991 டிசம்பர் 11-ல் அரசிதழில் வெளியிட்டது. இதனையடுத்து கர்நாடகாவில் வன்முறை வெடித்தது. தமிழர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டது. பின்னர் மூன்று ஆண்கள் மழைப் பொழிவு காரணமாக பிரச்சனை எழவில்லை, 1995-ல் பருவமழை பொய்க்கவே தீர்ப்பாயத்தின் இடைக்காலத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த முடியாது என்று கர்நாடகம் மறுத்துவிட்டது.

1997-ல் பிரதமரையும் நான்கு மாநில முதல்வர்களையும் உறுப்பினர்களாக கொண்ட காவிரி ஆற்று ஆணையமும் பயனற்று போனது.

காவிரி தீர்ப்பாயம் 2007 பிப்ரவரி 5-ல் இறுதித் தீர்ப்பை வழங்கியது. 16 ஆண்டுகள் கழித்து இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டது. 1892 மற்றும் 1924-ம் ஆண்டுகளில் மெட்ராஸ் மாகாணம் மற்றும் மைசூர் சமாஸ்தான் இடையிலான உடன்படிக்கையின் செல்லும்தன்மையை உறுதிசெய்தது. இடைக்காலத் தீர்ப்பில் கர்நாடகம் காவிரியில் தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டிய நீரின் அளவு (டிஎம்சி) 205 ஆக இருந்து, இறுதித் தீர்ப்பில் 192 ஆகக் குறைந்துபோனது. கொள்ளிடம் கீழணை வரைக்கும் காவிரி வடிநிலத்தில் ஓராண்டு காலத்தில் கிடைக்கும் மொத்த நீரின் அளவு 740 டிஎம்சி என கணக்கிடப்பட்டது. சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கும் கடலில் கலப்பதற்கும் 14 டிஎம்சி ஒதுக்கப்பட்டது. தமிழகத்துக்கு 419 டிஎம்சி, கர்நாடகத்துக்கு 270 டிஎம்சி, கேரளத்துக்கு 30 டிஎம்சி, புதுவைக்கு 7 டிஎம்சி ஒதுக்கி தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

தமிழகத்திற்கான 419 டிஎம்சியில் இங்கு பொழியும் மழை அளவில் கிடைத்தது போக, கர்நாடகம் திறந்துவிட வேண்டியது 192 டிஎம்சி. தமிழகத்திற்கு கர்நாடகம் மாதவாரியாக திறந்துவிட வேண்டிய நீரின் அளவையும் உத்தரவில் தீர்ப்பாயம் குறிப்பிட்டது.

காவிரி தீர்ப்பாயம் இறுதித் தீர்ப்பில் நீர் பங்கீட்டை மேற்கொள்ள காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குமுறை குழு ஆகியவற்றை அமைக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதுவரையில் கர்நாடகம் உத்தரவுபடி நடந்தது கிடையாது, தீர்ப்பை எதிர்த்து வருகிறது. காவிரி தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பு, கர்நாடகா உத்தரவை மதியாமை ஆகிய விவகாரம் மீண்டும் சுப்ரீம் கோர்ட்டு சென்றது. காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு தங்களுக்கு பாதகமாக இருப்பதாக கூறி தமிழக அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதேபோல் கர்நாடகம், கேரளா, புதுச்சேரி மாநில அரசுகளும் நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்தன. விசாரணை தொடர்ந்தது.

2007-ல் காவிரி தீர்ப்பாயம் வழங்கிய இறுதித் தீர்ப்பு பெரும் போராட்டத்திற்கு பின்னர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசால் 2012-ல் வெளியிடப்பட்டது.

காவிரி வழக்கு விசாரணையில் உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கடந்த ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. (காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்ட போது எல்லாம், உத்தரவின்படி கர்நாடகம் நீர் திறந்தது கிடையாது)

காவிரி மேல்முறையீட்டு வழக்கில் விசாரணை மேற்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு பிப்ரவரி 16-ம் தேதி இறுதித் தீர்ப்பை வழங்கியது.

சுப்ரீம் கோர்ட்டில் தமிழகத்திற்கு நீர் குறைப்பு

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பில் வழங்கப்பட்ட 192 டிஎம்சி தண்ணீரை குறைத்து, 177.25 டிஎம்சி தண்ணீர் தமிழகத்திற்கு வழங்க உத்தரவிட்டது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

இருப்பினும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. தமிழகத்திற்கு 14.75 டிஎம்சி தண்ணீர் குறைக்கப்பட்டாலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்ற உத்தரவு சிறிதளவு நம்பிக்கையை கொடுத்தது.

காவிரி மேலாண்மை வாரியத்தில் மத்திய அரசு நழுவல்

சுப்ரீம் கோர்ட்டு நடுவர் மன்றம் வழங்கிய இறுதித்தீர்ப்பை நிறைவேற்ற ‘ஸ்கீம்’ (செயல்திட்டம்) ஒன்றை 6 வார காலத்துக்குள் ஏற்படுத்த வேண்டும் பிப்ரவரி 16-ல் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இதற்காக எந்த சூழ்நிலையிலும், எந்த விதமான கால நீட்டிப்பும் வழங்கப்பட மாட்டாது என்றும் சுப்ரீம் கோர்ட்டு தனது தீர்ப்பில் குறிப்பிட்டு இருந்தது. காவிரி நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பில் நீர் பங்கீட்டை மேற்கொள்ள காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குமுறை குழு ஆகியவற்றை அமைக்க வேண்டும் என்று கூறியிருந்தது. இதுவரையில் எந்தஒரு ஸ்திரமான நகர்வையும் வெளிக்காட்டாத மத்திய அரசு, கர்நாடக தேர்தலை மனதில் கொண்டு நழுவியது. தேர்தலை அடுத்தும் வாரியம் அமைக்கப்படுமா? என்பது மில்லியன் டாலர் கேள்வியாகவே தொடர்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *