சித்தராமையாவின் ‘தான்’ அகங்காரம், கடைசி நேரத்தில் கவிழ்ந்த காங்கிரஸ்!

Read Time:9 Minute, 25 Second

சாதிய அரசியல் ஆழமாக வேரூன்றி விஸ்தரித்த கர்நாடகாவில் பெருமளவும் எதிர்ப்பு எதுவுமின்றி வெற்றியை தவறவிட்ட காங்கிரஸ் கடைசி நேரத்தில் மேற்கொண்ட நகர்வுகளாலே கவிழ்ந்து உள்ளது.

கர்நாடகாவில் சித்தராமையா தலைமையில் நடைபெற்று காங்கிரஸ் அரசுக்கு எதிராக பெருமளவு எதிர்ப்புகள் எதுவும் கிடையாது. தேர்தலுக்கு முன்னதாக எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்புகளில் கூட காங்கிரஸ் ஆட்சியை தக்கவைக்கும் என்றே கூறப்பட்டது. கர்நாடகாவில் பிதார் முதல் சாம்ராஜ் நகர் வரையிலும் சாதிய தலைவர்கள், சங்கங்கள், மடங்கள் என சாதியை அடிப்படையாக கொண்டே அரசியல் வியாபித்து உள்ளது.  சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு மீது பெரிய அளவில் ஊழல் புகார்கள் எதுவும் எழவில்லை. அரசு கொண்டுவந்த, அன்ன பாக்ய, ஷீரபாக்ய உள்பட பல்வேறு பிரபலமான நலத்திட்டங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக பெரிய அளவில் எதிர்ப்பு அலை இல்லை என்றும் கூறப்பட்டது. சித்தராமையாவிற்கு முன்னால் மோடியின் அலையால் நிற்க முடியாது என மார்தட்டும் அளவிற்கு காங்கிரஸ் ‘ஸ்திரம்’ பெற்றது. இதனால் கர்நாடகத்தில் காங்கிரசை வீழ்த்த பா.ஜனதா பல்வேறு வியூகங்களை வகுத்தது. அதற்காக பெரிய அளவில் சிரமப்பட்டது. தேர்தல் பிரசாரங்களில் போதும் பிரதமர் மோடி, அமித்ஷா மற்றும் பிற பா.ஜனதா தலைவர்களின் குற்றச்சாட்டுக்களுக்கு சித்தராமையாவின் பதில்கள் கடும் காரசாரமாகவே இருந்தது.

தென்னகத்தில் மதவாதம் பலிக்காது, மக்கள் மத்தியில் ஆதரவு என பல்வேறு காரணிகளும் அவருடைய கண்களை மூடிக்கொண்டு அகந்தையில் நடவடிக்கைகளை எடுக்கச்செய்தது. ‘தான்’ என்று சித்தராமையா மேற்கொண்ட ஒவ்வொரு நடவடிக்கையும் பாரதீய ஜனதாவின் கைகளையே ஓங்கசெய்தது. தேர்தல் முடிவுக்கு பின்னர் காங்கிரஸ் தலைவர் டிகே சிவகுமார் பேசுகையில், “கர்நாடகாவில் காங்கிரஸ் தோல்விக்கு மாநில தலைமையே காரணம், மத்திய தலைமை கிடையாது,” என பகிரங்கமாக கூறிஉள்ளார்.

தேர்தலை சித்தராமையாவின் ஒரே தலைமையின் கீழ் மத்திய காங்கிரசும் எதிர்க்கொண்டது. லிங்காயத் வகுப்பை சேர்ந்த எடியூரப்பாவை முதல்-மந்திரி வேட்பாளாராக களமிறக்கிய பா.ஜனதா, அவருடைய மகனுக்கு சீட் கொடுக்கவில்லை. ஆனால் சித்தராமையா தனனுடைய மகனை வருணா தொகுதியில் களமிறக்கினார். மத்திய தலைமையை எதிர்த்து இரு தொகுதிகளில் போட்டியிட்டார். குற்றப்புகார்களில் சிக்கிய அமைச்சர்களுக்கும், பிற கட்சியிலிருந்து வந்த தன்னுடைய ஆதரவாளர்களுக்கு ‘சீட்’ என தொடர்ந்து சித்தராமையா ‘தான்’ அகந்தையின் காரணமாக முடிவுகளை எடுத்தார்.

காங்கிரஸ் தலைமையில் காணப்பட்ட விரிசல், மனக்கசப்பு மல்லிகார்ஜூன கார்கே, பரமேஷ்வரா, டி.கே.சிவகுமார் போன்ற தலைவர்கள் அவரிடம் இருந்து விலக செய்தது.

லிங்காயத்

வட கர்நாடகத்தில் வீரசைவ–லிங்காயத் சமூக மக்கள் அதிகமாக வசிக்கிறார்கள். வீரசைவ–லிங்காயத் சமூகம் ஒன்று கிடையாது, லிங்காயத் மற்றும் வீரசைவ சமூகம் தனித்தனியானது என்ற வாதத்தில் விளைவுகளை எண்ணிப்பார்க்காமல் சித்தராமையா முன்நகர்ந்தார். லிங்காயத் சமூகத்தை சேர்ந்த மடாதிபதிகளில் ஒரு பிரிவினர் வீரசைவ–லிங்காயத் சமூகம் ஒன்று கிடையாது என்றனர். அதே நேரத்தில் வீரசைவ–லிங்காயத் சமூகத்தினர் ஒன்றே தான், இரு சமூகமும் வெவ்வேறானது கிடையாது என்றும் வீரசைவ சமூகத்தை சேர்ந்த தலைவர்கள் மற்றும் மடாதிபதிகள் வலியுறுத்தினர்.

லிங்காயத் வகுப்பை சேர்ந்த எடியூரப்பாவிற்கு ‘செக்’ வைக்க வேண்டும் என்று சித்தராமையா அரசு தேர்தலை எதிர்நோக்கிய நிலையில் நடவடிக்கையை மேற்கொண்டது.

இந்துக்களாகவே வாழ்ந்து பழகிவிட்ட லிங்காயத்துகளை தேர்தல் நெருங்கிய வேளையில் தனி மதமாக சித்தராமையா அங்கீகரித்து மத்திய அரசுக்கு பரிந்துரையை அனுப்பினார். ஆனால் அதனை மத்திய பா.ஜனதா சரியாக பயன்படுத்தியது. அதுவரையில் பிடிகிடைக்காது தவித்த பா.ஜனதாவிற்கு சித்தராமையாவே வழியை ஏற்படுத்திக்கொடுத்தார். பா.ஜனதா தலைவர் அமித் ஷா மடாதிபதிகளிடம் படையெடுத்தார். ‘சித்தராமையா இந்து மதத்தை பிளவுப்படுத்திவிட்டார்’ என்ற கோஷத்தை மாநிலம் முழுவதும் பா.ஜனதா எடுத்துச் சென்றது.

லிங்கயாத் சமூகத்தை சேர்ந்தவர்கள்கூட சித்தராமையா அரசின் முடிவை ஏற்கவில்லை. அவர்களிடம் இருந்து கேள்விக்கணைகளும் எழுந்தது. வேறு சாதியை சேர்ந்த நீங்கள் (சித்தராமையா) எப்படி எங்களை பிரிக்கலாம்? என கேள்வியை எழுப்பினர். சித்தராமையாவின் முன்னெச்சரிக்கையற்ற நகர்வை லிங்கயாத் சமூதாயத்தை சேர்ந்த எடியூரப்பாவும் சரியாக பயன்படுத்திக்கொண்டார். “ஆட்சி அதிகார ஆசைக்காக நமது சமூகத்தை உடைக்க சித்தராமையா முயற்சி செய்கிறார். அவருக்கு லிங்காயத் மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும். லிங்காயத்-வீரசைவ சமூகம் ஒரே சமூகம் என்று நடமாடும் கடவுள் என்று மக்களால் அழைக்கப்படும் சிவக்குமாரசாமி பல முறை கூறி இருக்கிறார். ஆயினும் சித்தராமையா நமது சமூகத்தை உடைக்கும் முயற்சியை கைவிடவில்லை” என்று பழிசுமத்தினார் எடியூரப்பா.

ஏற்கனவே எடியூரப்பாவை எதிர்த்த லிங்கயாத்துகளும் சித்தராமையாவை எதிர்க்க நேரிட்டது. விளைவு காங்கிரஸின் பலம் லிங்காயத் மத்தியில் சரிந்தது. கடந்த 2013 தேர்தலில் லிங்காயத்துகள் அதிகம் வசிக்கும் இடங்களில் 47 இடங்களை வசப்படுத்திய காங்கிரஸ் 20 இடங்களில் சுருண்டது. சித்தராமையா தலைமையிலான காங்கிரஸின் லிங்காயத் வியூகம் தவிடு பொடியாகியது.

பிற தவறுகள்:- 

* கர்நாடகாவில் தலித், இஸ்லாமியர், குருபர், பழங்குடியினர், கிறிஸ்தவர், இதர பிற்படுத்தப்பட்டவர்கள் உள்ளிட்ட சாதியினருக்கு 60% வாக்குகள் இருக்கின்றன, இதில் 40 சதவித வாக்குகள் கிடைத்தாலே மீண்டும் முதல்வராகிவிடலாம் என சித்தராமையா கணக்கு போட்டார். ஆனால் சாதிய அரசியலை மையமாக கொண்ட மாநிலத்தில் சாதிய தலைவர்கள் பிற கட்சிகளுக்கு சென்றது மற்றும் அதிருப்தியடைந்த தலைவர்களை ஒற்றுமையாக இணைப்பதில் பெரும் தோல்வியை தழுவினார். ஒக்கலிகர், தலித் வகுப்பினரின் தலைவர்களை தன்பக்கம் தக்கவைத்துக் கொள்வதிலும் தோல்வியையே தழுவினார். கட்சியில் இரண்டாம் கட்ட தலைவர்கள் மத்தியில் நிலவிய அதிருப்தியை சரிசெய்வதிலும் தவறிழைத்தார்.

* பாரதீய ஜனதாவிற்கு பதிலடி கொடுக்கும் வகையிலே பிரசாரத்தை முன்னெடுத்த காங்கிரஸ், மக்களை எளிதில் அணுகும் உணர்வுப்பூர்மான பிரசாரத்தை மேற்கொள்ளவே இல்லை.

*  வெற்றியை உறுதி செய்வதில் முக்கியமான வாக்குச்சாவடி அளவிலான ஒருங்கிணைப்பின்மை காங்கிரசுக்கு பெரும் அடியாக அமைந்தது.

* தேசிய அரசியலில் இருந்து மாநில தேர்தல் முற்றிலும் மாறுப்பட்டது. பாரதீய ஜனதாவின் அசுரவேக வளர்ச்சியும், கர்நாடகாவில் அக்கட்சிக்கு உள்ள ஓட்டு வங்கியையும் அறிந்தும் மெத்தனப்போக்குடன் களமிறங்கியது. ஒக்கலிகர் வாக்கு சிதையாத வண்ணம் கூட்டணியை  அமைக்கவும் முன்நகரவில்லை. சாதிய அரசியலின் மையத்தில் காங்கிரஸ் கட்சியின் தவறுகளை, பா.ஜனதா தனதாக்கியதையே தேர்தல் முடிவுகள் காட்டுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *