கர்நாடகாவில் பா.ஜனதா ஆட்சியமைத்தது தொடர்பாக பேசிய கமல்ஹாசன், ‘ஹிட்லர் ஆட்சியை கைப்பற்றியது ஜனநாயகம் மூலமாகதான்’ என கூறிஉள்ளார்.
கர்நாடக சட்டசபைக்கு நடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. 78 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ், 38 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற ஜனதாதளம் (எஸ்) கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு அளிக்க முன்வந்தது. ஆனால் அதிகபட்சமாக 104 இடங்களை பெற்ற பாரதீய ஜனதாவை ஆட்சி அமைக்க கவர்னர் வஜூபாய் வாலா அழைப்பு விடுத்தார். 15 நாட்களில் சட்ட சபையில் மெஜாரிட்டியை நிரூபிக்குமாறு எடியூரப்பாவிற்கு உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து பா.ஜனதா ஆட்சியமைத்தது. இவ்விவகாரம் சுப்ரீம் கோர்ட்டு சென்றதால் காங்கிரஸ் அணி எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சி தோல்வி அடைந்ததால், நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு முன்னதாகவே எடியூரப்பா ராஜினாமா செய்துவிட்டார்.
இதற்கிடையே புதிய தலைமுறை அக்னிப் பரீட்சையில், கர்நாடகாவில் பா.ஜனதா ஆட்சியமைத்தது ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்குவதா? என செய்தியாளர் கேள்விக்கு கமல்ஹாசன் பதிலளித்து பேசினார்.
கமல்ஹாசன் பேசுகையில், ஜனநாயகம் சிறப்பானதுதான். கத்தியை வைத்து நல்லதையும் செய்யலாம், கொலையும் செய்யலாம். ஜனநாயகம் என்பது பிழையா, பெருமையா என்பதுதான். இதுதான் சிறந்தது என்று சொல்ல முடியாது. அதனை நாம் எப்படி உபயோகிக்கிறோம், என்பதுதான் முக்கியமானது. ஹிட்லர் பற்றி கேள்விப்பட்டு இருப்போம். ஹிட்லர் ஒரு சர்வாதிகாரி. அவர் வந்தது எப்படி? ஜனநாயகம் இருந்து இருந்தால் இப்படி எல்லாம் நடந்து இருக்குமா? என்று கேட்கலாம். ஆனால் ஹிட்லர் ஆட்சியை கைப்பற்றியது ஜனநாயகம் மூலமாகதான். ஆகையில் யார் கையில் எப்படி கிடைக்கிறது என்பதுதான். இதனை நினைவுகூறுவது கர்நாடகாவில் நடந்தது போல் ஒரு தேசம் முழுவது ஜெர்மனில் நடந்தது.
அப்போது சாதூரியமாக என்னால் முடியும் என்று வந்தவர்தான் ஹிட்லர். அந்த சர்வாதிகாரம் நுழைவதற்கு பெரும்பாதை அமைத்து கொடுத்து ஜனநாயகம்தான். அதனால் ஜனநாயகம் வேண்டாம் என சொல்லவில்லை. கம்யூனிஸம் வழியென சொல்ல முடியாது. ஆனால் நாம் விழிப்புடன் பார்த்துக்கொண்டு இருக்க வேண்டும், அநியாயம் நடக்கும் போது 10 பேர் நடக்க கூடாது என குரல் கொடுத்தால் சிறிது யோசிப்பார்கள். நண்பர் ஒருவர் சிறப்பாக கூறியிருந்தார், அனுமதி கோரிய போது உங்களுக்கு 15 நாட்கள் அவகாசம் கொடுத்து உள்ளேன் என கவர்னர் சொல்லியிருக்கிறார். அதற்கு கோபம் கொண்டு அவர் சொல்கிறார், கவர்னர் பா.ஜனதாவை அதிகம் ஏமாற்றிவிட்டார். கவர்னர் நினைத்து இருந்தால் 5 வருடம் நேரம் கொடுத்து இருக்கலாம் 15 நாள் என்பது எவ்வளவு ஏமாற்று வேலையாகும். இப்படி வஞ்சித்து இருக்க கூடாது என்று வஞ்சபுகழ்ச்சி செய்து இருக்கிறார் நண்பர் சுப விரபாண்டியன்.
கர்நாடகாவில் நடப்பது ஜனநாயக படுகொலை என சொல்ல மாட்டேன், முதலில் ஜனநாயகம் படுக்கிறது, பிறகு யார் வேண்டுமென்றாலும் மிதித்து கொல்லலாம். ஜனநாயாகத்தை படுக்க விடக்கூடாது, அதுநாம் செய்த தவறு. ஜனநாயகம் பல நாட்களாக சொத்துக்கொண்டு இருக்கிறது. அதனை தூக்கி நிறுத்துவது நம் முன்னதாகதான் இருக்கிறது. வாக்குக்கு பணம் வாங்காதீர்கள், அங்குதான் இது நிற்கிறது. கை நீட்டி காசு வாங்குவதால் தான் அவர்களிடம் பேச முடியாது நிலம் பார்க்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. காசு வாங்குவதால் அவர்கள் 5 வருடங்கள் காத்திருங்கள் என சொல்லும் போது, நிலம் பார்க்க வேண்டியது உள்ளது. காசு வாங்கியதால் அவர்களை எதிர்க்க முடியவில்லை. கர்நாடகாவில் ஜனநாயம் படுகொலையா என்பது பிற்பாடு யோசித்துதான் சொல்ல முடியும்,” என்றார்.