எடியூரப்பா ‘அவுட்’

Read Time:10 Minute, 23 Second

தொங்கு சட்டசபை அமைந்த கர்நாடகாவில் நிரந்த முதல்-அமைச்சர் பதவிக்கான ஓட்டத்தில் பா.ஜனதாவின் எடியூரப்பா ‘அவுட்’ ஆனார்.

கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்காததால், தொங்கு சட்டசபை அமைந்தது.

பா.ஜனதா 104 தொகுதிகளிலும், ஆளும் காங்கிரஸ் 78 தொகுதிகளிலும், ஜனதா தளம்(எஸ்) கட்சி 38 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.

தேர்தலில் காங்கிரஸ் கட்சி 1 கோடியே 38 லட்சத்து 24 ஆயிரத்து 5 ஓட்டுகளை பெற்றது. இது 38 சதவீதமாகும்.

பா.ஜனதா கட்சிக்கு ஒரு கோடியே 31 லட்சத்து 85 ஆயிரத்து 384 ஓட்டுகள் கிடைத்துள்ளது. இது 36.2 சதவீதமாகும்.

ஜனதாதளம் (எஸ்) கட்சி 18.3 சதவீதம், 66 லட்சத்து 66 ஆயிரத்து 307 ஓட்டுகளை வேட்டையாடியது.

15-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற போது, தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாவதற்கு முன்பே, கர்நாடகத்தில் புதிய ஆட்சி அமைக்க ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் அவசர அவசரமாக அறிவித்தது. கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமைவதை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அதிரடி அறிவிப்பை காங்கிரஸ் முன்வைத்தது. அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று இருந்தாலும், முதல்–மந்திரி பதவியை ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு காங்கிரஸ் விட்டுக்கொடுக்க முன்வந்தது. அதே நேரத்தில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்ற பா.ஜனதாவும் ஆட்சி அமைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியது. இறுதியில் பெரும்பான்மை இல்லையென்றாலும் பா.ஜனதாவை ஆளுநர் வஜுபாய் வாலா ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தார், எடியூரப்பாவும் முதல் அமைச்சரானார்.

கர்நாடகத்தில் 222 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 221 பேர் எம்.எல்.ஏ.க்களாக தேர்வானார்கள். ஜனதாதளம்(எஸ்) முதல்–மந்திரி வேட்பாளர் குமாரசாமி 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால், சட்ட விதிகளின்படி ஒரு தொகுதியிலிருந்து அவர் விலக வேண்டும் என்ற நிலையில் சட்டசபையில் பலம் 221 ஆனது.

 முக்கிய நிகழ்வுகள்:-

மே 16 : கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலா எடியூரப்பாவை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தார். ஆளுநர் நகர்வுக்கு எதிராக காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதா தளம் அன்று இரவே சுப்ரீம் கோர்ட்டை நாடியது.

மே 17: 

அதிகாலை 2 மணியளவில் காங்கிரஸ் கட்சியின் மனுவை சுப்ரீம் கோர்ட்டு விசாரணை செய்தது.

காலை 5 மணியளவில் தீர்ப்பு கூறிய சுப்ரீம் கோர்ட்டு எடியூரபபா 9 மணிக்கு முதல்-அமைச்சராக பதவியேற்பதற்கு தடை விதிக்க முடியாது என்றது.

காலை 9 மணிக்கு பாரதீய ஜனதாவின் எடியூரப்பா முதல்-அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்.

மே 18:

19-ம் தேதி மாலை 4 மணிக்குள் கர்நாடக சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க எடியூரப்பாவிற்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

எடியூரப்பாவிற்கு ஆளுநர் வஜுபாய் வாலா கொடுத்த 15 நாள் அவகாசம் 24 மணி நேரங்களாக குறைக்கப்பட்டது.

எடியூரப்பா நம்பிக்கை வாக்கெடுப்பு கோர இருந்த நிலையில் சட்டசபையின் தற்காலிக சபாநாயகராக பா.ஜனதாவை சேர்ந்த சர்ச்சைக்குரிய  போபையா நியமனம் செய்யப்பட்டார். போபையா நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இரவு சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

மே 19 :

 காலை 6:40 மணி: காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் தங்களுடைய எம்.எல்.ஏ.க்களை பாதுகாப்பாக வைத்து இருந்தது, அவர்கள் ஐதராபாத்தில் இருந்து பெங்களூரு கொண்டுவரப்பட்டனர்.

காலை 10:30 மணி:  பா.ஜனதாவின் போபையாவை தற்காலிக சபாநாயகராக நியமனம் செய்ததற்கு எதிராக காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதா தளம் தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

காலை 11:30 மணி: காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்க வந்தார்கள். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இரு எம்.எல்.ஏ.க்களை காணவில்லை என கூறப்பட்ட நிலையில் அவர்கள் சட்டசபை வந்து காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்தார்கள். இது காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளத்திற்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்தது.

பிற்பகல் 3.45 மணி: எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்கும் நிகழ்ச்சி முடிந்தும், எடியூரப்பா தனது அரசின் மீதான நம்பிக்கை தீர்மானத்தை தாக்கல் செய்து உருக்கமாக பேசினார். 25 நிமிடங்கள் உரையாற்றிய எடியூரப்பா என் உயிர் உள்ள வரை கர்நாடக மக்களுக்காக போராடுவேன் என்றும், உழைப்பேன் என்றார். தழுதழுக்க பேசிய எடியூரப்பா,  எங்கள் கட்சிக்கு முழு மெஜாரிட்டி இல்லாததால், முதல்- மந்திரி பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று அறிவித்தார். சட்டசபையிலே காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதா தளத்தினர் வெற்றியை கொண்டாடினர்.

தோல்வியில் முடிந்த ‘ஆப்ரேஷன் கமல்’

தேர்தலில் ஆட்சியமைக்க பெரும்பான்மை இல்லாத நிலையிலும் பதவியேற்ற எடியூரப்பா, எப்படியாவது எதிர்க்கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களை தன்வசப்படுத்தலாம் என திட்டமிட்டார்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவதற்காக காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகளில் உள்ள சில எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியில் பாரதீய ஜனதா ஈடுபட்டது. அதற்காக ‘ஆப்ரேஷன் கமல்’பா.ஜனதாவால் முன்னெடுக்கப்பட்டது. 2008-ல் பலன் கொடுத்த ‘ஆப்ரேஷன் கமல்’ இப்போது திருப்பியடித்தது. பா.ஜனதா தலைவர்கள், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு ஆசைவார்த்தை கூறியதை ஆதாரத்துடன் எடுத்துவந்தது காங்கிரஸ்.

பா.ஜனதாவிடம் இருந்து எம்.எல்.ஏ.க்களை காப்பாற்றும் பணியில் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் வெற்றிய தனதாக்கியது.

தேர்தல் முடிவு வெளியானதில் இருந்து எங்கு இருக்கிறார்கள் என தெரியாமல் இருந்த காங்கிரஸ் என்.எல்.ஏ.க்கள் ஆனந்த் சிங், பிரதாப்கவுடா பட்டீல் ஆகியோரும் கடைசியில் சபைக்கு வந்தது காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணிக்கு பெரும் பலத்தை கொடுத்தது. காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகளில் இருந்து சில எம்.எல்.ஏ.க்களை இழுத்து நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள முடியும் என்ற எடியூரப்பாவின் மிகுந்த நம்பிக்கை சுக்குநூறாக உடைக்கப்பட்டது.

ராசியில்லாத எடியூரப்பா:-

பெரும்பான்மை பலம் இல்லாததால் அவரது தலைமையிலான பாரதீய ஜனதா அரசு பதவி ஏற்ற 3 நாளிலேயே முடிவுக்கு வந்துவிட்டது.

கர்நாடகத்தின் 23–வது முதல்–மந்திரியாக எடியூரப்பா கடந்த 17–ந் தேதி காலை 9 மணிக்கு பதவி ஏற்றார். மூன்றாவது நாளே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாமல் முதல்–மந்திரி பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துவிட்டார். 2007–ம் ஆண்டு பா.ஜனதா–ஜனதாதளம்(எஸ்)  கட்சிகள் கூட்டணி அரசில் 7 நாட்கள் மட்டுமே முதல்-அமைச்சராக இருந்தார். மதசார்பற்ற ஜனதா தளம் ஆதரவை வாபஸ் பெற்றதும் அவருடைய பதவி பறிபோனது. 2008-ம் ஆண்டு மீண்டும் முதல்-அமைச்சரான எடியூரப்பா 5 ஆண்டுகளை நிறைவு செய்யவில்லை. 2011-ம் ஆண்டே ஊழல் வழக்கில் சிக்கி பதவியை ராஜினாமா செய்ய நேரிட்டது.

நேற்று எடியூரப்பா ராஜினாமா செய்வது தொடர்பாக காலையிலே முடிவு செய்துவிட்டார் என தெரிகிறது. காலையில் பா.ஜனதா தலைமைகள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் உடனான கூட்டத்தின்போதே பதவியை கடைசி நேரத்தில் ராஜினாமா செய்வது தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டு உள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது. பல்வேறு வியூகங்களுடன் முன்வந்த எடியூரப்பா ‘அவுட்’ ஆகி வெளியேறிவிட்டார்.

குமாரசாமிக்கு அழைப்பு

எடியூரப்பா பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்து உள்ளார். ஆளுநர் அழைப்பை தொடர்ந்து மாநில புதிய முதல்-மந்திரியாக குமாரசாமி 23-ந் தேதி பதவி ஏற்கிறார். பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசத்தை கவர்னர் கொடுத்துள்ளார். பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் தேவை இல்லை. அதற்குள்ளாகவே பெரும்பான்மையை நிரூபிப்போம் என குமாரசாமி கூறிஉள்ளார். ஆட்சி நீடிக்குமா? என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *