கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாரா போதைப் பொருள் விற்பனை செய்யும் பெண்ணாக நடித்து உள்ளாராம்.
நானும் ரவுடிதான் படத்தில் காதுகேளாத பெண்ணாக அசத்திய ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா தொடர்ந்து மாறுபட்ட வேடங்களில் முக்கியத்தும் கொடுத்து நடித்து வருகிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்க மிகவும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். அவர் நடித்த அறம் படம் அவருக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது. ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை காப்பாற்ற போராடும் அவரது கதாபாத்திரம் பேசப்பட்டது. பாராட்டுகளும் குவிந்தது. தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்களுக்கு இணையாக அவரது படங்கள் வசூல் குவிக்கிறது.
தொடர்ந்து இமைக்கா நொடிகள், கோலமாவு கோகிலா, கொலையுதிர் காலம் என கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருகிறார். ‘சை ரா நரசிம்ம ரெட்டி’ மற்றும் சிவகார்த்திகேயன் ஜோடியாக மற்றொரு படத்திலும் நடித்து வருகிறார்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடித்து உள்ளார். யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன், அறந்தாங்கி நிஷா உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடித்து உள்ளனர். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் படத்தில் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்து உள்ளார். இப்படத்திற்காக சிவகார்த்திகேயன் பாடல் ஆசிரியராகி உள்ளார். கோலமாவு கோகிலா படத்தில் இருந்து இருபாடல்கள் வெளியாகி, படத்தின் மீது எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்து உள்ளது.
‘எதுவரையோ’ மற்றும் ‘கல்யாண வயசு’ பாடல்களில் ‘கல்யாண வயசு’ பாடலை சிவகார்த்திகேயன் எழுதி உள்ளார்.
நயன்தாராவிடம் யோகிபாபு காதலை சொல்வது போன்ற பாடல் வெளியாகி பெரும் கவனம் ஈர்த்து, வைரலாகி உள்ளது.
நயன்தராவுக்கு ஜோடி கிடையாது, அவரது தெருவில் வசிக்கும் யோகிபாபு அவரை ஒருதலையாகக் காதலிக்கும் கேரக்டரில் நடித்திருக்கிறார் என்கிறார்கள்.
இப்படத்தில் நயன்தாரா போதை மருந்து விற்கும் பெண்ணாக நடித்து உள்ளார் என தெரியவந்து உள்ளது. ஏழ்மையின் காரணமாக அப்பாவியாக இருக்கும் நயன்தாரா போதைப் பொருள் விற்பனை செய்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது.