போர்க்களமான ஸ்டெர்லைட் போராட்டம்! போலீஸ் துப்பாக்கி சூட்டில் 10-ம் வகுப்பு மாணவி உள்பட 10 பேர் உயிரிழப்பு

Read Time:9 Minute, 26 Second

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது போலீஸ் நடத்திய துப்பாக்கி சூட்டில் 10 பேர் உயிரிழந்தனர்.

தூத்துக்குடியில் உள்ள சிப்காட் வளாகத்தில் வேதாந்தா குழுமத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை அமைந்துள்ளது.

1997-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ஆலையில் இருந்து வெளியேறும் புகையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதுடன் பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. ஸ்டெர்லைட் ஆலையால் நிலத்தடி நீர் மாசு அடைந்து வருவதாகவும், மாசடைந்த புகையால் பல்வேறு நோய்கள் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆலையை மூட வேண்டும் என்று மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர்.  வருங்கால சந்ததியினர் இந்த ஆலையால் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள்.

ஆனால் மார்ச் தொடக்கத்தில் ஆலையின் அருகே மேலும் 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யும் வகையில் ஆலை விரிவாக்கம் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டது.

ஏற்கனவே ஆலையை மூட வேண்டும் என மக்கள் போராட்டம் நடத்திய நிலையில் ஆலையை விரிவாக்கம் செய்வதற்கான பணியை தொடங்கியது பெரும் கொந்தளிப்பை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியது. மக்கள் எச்சரிக்கையை தெரிவிக்கும் வகையில் பெரும் போராட்டம் ஒன்றை நடத்தினார்கள். மாணவர்கள், பொதுமக்கள் என தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்தது. ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் செய்வதற்கு தடை விதிக்கவும், நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் ஆலையை சுற்றியுள்ள கிராம மக்கள் தொடர் போராட்டத்தை தொடங்கினர்.

போராட்டம் தொடர்ந்து நடைபெற்ற நிலையில் நிறுவனத்தை தொடர்ந்து இயக்குவதற்கான இசைவாணை 2018–ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிவடைந்தது.

பல்வேறு விதிமுறைகளை மீறிய ஸ்டெர்லைட் ஆலை செயல்படுவதற்கான இசைவாணை புதுப்பிப்பதற்கான தொழிற்சாலையின் விண்ணப்பத்தினை 9–4–2018 அன்று தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் நிராகரித்தது.

போராட்டம் தீவிரம் & 144 தடை உத்தரவு

கிராம மக்கள் போராட்டம் இன்று (மே 22-ம் தேதி) 100-வது நாளை எட்டியது. இதையொட்டி ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு சார்பில் கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த போராட்டத்துக்கு பல்வேறு தரப்பில் ஆதரவு தெரிவிக்கப்பட்டது.

எனவே சட்டம்- ஒழுங்கினை பராமரித்திட குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 144-ன் கீழ் தூத்துக்குடி தெற்கு போலீஸ் நிலையம் மற்றும் சிப்காட் போலீஸ் நிலைய எல்கைகளுக்கு உட்பட்ட பகுதிகள் முழுவதற்கும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மேலும் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸ் தூத்துக்குடியில் குவிக்கப்பட்டது.

தூத்துக்குடியில் திரண்ட போராட்டக்காரர்கள்

“ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் செய்யக்கூடாது. ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும்” என்று தொடர்ந்து குரல் கொடுத்த மக்கள் இன்று தூத்துக்குடியில் திரண்டனர். தூத்துக்குடியில் காலை 9 மணி முதல் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. பனிமய மாதா ஆலயம் அருகே திரண்ட போராட்டக்காரர்கள் கலெக்டர் அலுவலகத்தை நோக்கி பேரணியாக புறப்பட்டனர். ஆங்காங்கே போலீசார் அவர்களை வழிமறித்தனர்.

போலீசார் வைத்து இருந்த தடுப்புகளை மீறி போராட்டக்காரர்கள் முன்னேறிச் சென்றனர். 144 தடை உத்தரவு பிறக்கப்பட்டு இருப்பதால் அனைவரும் கலைந்து செல்லும்படி போலீசார் எச்சரித்தனர். போராட்டக்காரர்கள் இரும்பு தடுப்புகளை தள்ளிக் கொண்டு முன்னேறிச் செல்ல முயன்றனர்.

துப்பாக்கி சூடு 

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி மக்கள் பல்வேறு திசைகளில் சார, சாரையாக பேரணியாக சென்றனர். ஆங்காங்கே பொதுமக்கள் முன்சென்ற போது அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு நடந்தது. உடனடியாக போலீசார் தடியடி நடத்தினார்கள். கூட்டம் அதிகமானதால் போலீசாரால் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இருதரப்பு இடையே மோதல் வெடித்தது. பொதுமக்கள் மீது போலீஸ் தாக்குதல் நடத்தியதும், அவர்கள் கற்களை வீசியதால் போலீசார் பின்நோக்கி ஓடினார்கள்.

வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதனால் இந்த போராட்டம் பயங்கர கலவரமாக மாறியது. 

போராட்டக்காரர்கள் ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைய முயற்சி செய்த போதும் வன்முறை வெடித்தது. அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்கள் தாக்கப்பட்டது. அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் அந்த பகுதியே போர்க்களம் போல் காட்சி அளித்தது. போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி பொதுமக்களை விரட்ட முயற்சி செய்தார்கள். போலீஸ் நடத்திய துப்பாக்கி சூட்டிலும், வன்முறை சம்பவங்களிலும் பலர் காயம் அடைந்தார்கள். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

10 பேர் உயிரிழப்பு

போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீஸ் நடத்திய துப்பாக்கி சூட்டில் தூத்துக்குடியை சேர்ந்த எஸ்.எஸ்.எல்.சி. மாணவி வெனிஸ்டா உள்பட 10 பேர் உயிரிழந்து உள்ளனர். 60-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களில்

பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. எனவே உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. மாலை 4 மணியளவில்  வன்முறை சம்பவங்கள் முடிவுக்கு வந்தது. அதன்பின்னர் நிலைமை கட்டுக்குள் உள்ளது என்றும், பொதுமக்கள் அச்சமடைய தேவையில்ல்லை என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நீதி கோரி போராடிய மக்கள் மீது காவல் துறை ஏவப்பட்டதற்கு பல்வேறு தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

அரச பயங்கரவாதம்

பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்டது அரச பயங்கரவாதம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக டுவிட்டரில் ராகுல் காந்தி வெளியிட்டு உள்ள செய்தியில், “ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் 10 பேர் கொல்லப்பட்டது, அரசு ஸ்பான்ஸர் செய்யும் பயங்கரவாதத்தின் கொடூரமான உதாரணமாகும். அநீதிக்கு எதிராக போராடிய மக்கள் சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளார்கள். என்னுடைய எண்ணங்கள் மற்றும் பிரார்த்தனை துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களை பற்றியே உள்ளது,” என கூறிஉள்ளார்.

ரூ.10 லட்சம் நிவாரண நிதி

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்றும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.3 லட்சமும் லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் நிவாரணம் வழங்கப்படும். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர, தவிர்க்க முடியாத சூழ்நிலையில் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க நேரிட்டது என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *