ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு உயிரிழப்பு 12 ஆக உயர்வு, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரியில் இணைய சேவை முடக்கம்

Read Time:8 Minute, 25 Second

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி பொதுமக்கள் சார்பில் செவ்வாய் கிழமை நடைபெற்ற மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டம் கலவரமாக வெடித்தது. போலீஸ் நடத்திய துப்பாக்கி சூட்டில்  10-ம் வகுப்பு மாணவி உள்பட 10 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

காயம் அடைந்த 60-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இன்று புதன்கிழமை துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தூத்துக்குடி மருத்துவமனைக்கு வந்தனர். அவர்கள் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்கள் உடல்களை பிரேத பரிசோதனை செய்யக்கூடாது என போலீசாரை கண்டித்து கோஷம் எழுப்பினர். போலீசார் அவர்களை அகற்ற முயற்சி செய்த போதும் இன்று மோதல் போக்கு ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் அடித்து விரட்டப்பட்டனர். இன்றும் தூத்துக்குடியில் போலீஸ் வாகனங்களுக்கு தீ வைப்பு, கண்ணீர் புகைக் குண்டு வீச்சு, தடியடி என பதற்றத்துடன் காணப்பட்டது.

அண்ணாநகர் பகுதியில் போலீசார் மற்றும் போராட்டக்காரர்கள் இடையே மோதல் ஏற்பட்டதில் காளியப்பன் என்ற வாலிபர் சுட்டுக் கொல்லப்பட்டார். காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த உசிலம்பட்டியை சேர்ந்த ஜெயராமன் என்பவர் உயிரிழந்தார். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 12 ஆக உயர்ந்தது. அங்கு பதற்றமான நிலை நீடிப்பதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

உள்துறை அமைச்சகம் உத்தரவு

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் போது கலவரம் வெடித்து உயிரிழப்பு நேரிட்டது தொடர்பாக விரிவான அறிக்கையை அளிக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. போராட்டம் வன்முறையாக மாறியது ஏன்? துப்பாக்கி சூடு நடத்துவதற்கான அவசியம் என்ன? உளவுத்துறை முன்கூட்டி அறியாமல் இருந்தது ஏன்? என்ற விடை அளிக்கும் வகையில் விரிவான பதிலை அளிக்க உத்தரவிட்டது.

மத்திய படைகள் தயார்

தூத்துக்குடியில் பதற்றமான நிலை நீடித்த நிலையில், தமிழக தலைமை செயலாளரிடம் மத்திய உள்துறை செயலாளர் ராஜீவ் கெளபா பேசினார். தூத்துக்குடியில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர தேவையான உதவிகளை செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது.  மத்தியப்படைகள் தயாராக உள்ளது, தேவைப்பட்டால் அனுப்பி வைக்கப்படும் என ராஜீவ் கெளபா குறிப்பிட்டு உள்ளார். தமிழக அரசு, உள்துறை அமைச்சகத்திடம் மத்திய படைகளை அனுப்பி வைக்க கோரினால் உடனே அனுப்பி வைப்போம் என ராஜீவ் கெளபா குறிப்பிட்டார்.

தேசிய மனித உரிமைகள் ஆணையம்

துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்த தேசிய மனித உரிமை ஆணையம், துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விளக்கம் தர நோட்டீஸ் அனுப்பியது. இது குறித்து தமிழக தலைமைச் செயலாளர், டிஜிபி 2 வாரங்களுக்குள் விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது. உரிய விதிகளை பின்பற்றாமல் போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியது குறித்தும் விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஸ்டாலின் கண்டனம்

கூட்டத்தைக் கலைக்கிறோம் என்ற பெயரில் குறிவைத்து காவல்துறை சுட்டுத்தள்ளியிருக்கிறது என ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

தூத்துக்குடியில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து பேசிய ஸ்டாலின், அவர்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் டுவிட்டரில் பதிவிட்ட செய்தியில், தோட்டாக்களால் துளைக்கப்பட்ட தூத்துக்குடி மக்களை மருத்துவமனையில் பார்த்தபோது, இதயத்தை துளைத்தெடுத்த வேதனையிலிருந்து இன்னும் மீள முடியவில்லை. இறந்தவர்களும் படுகாயமடைந்தவர்களும் கொடூரமான தாக்குதலை எதிர்கொண்டிருப்பது அப்பட்டமாக தெரிகிறது. கூட்டத்தைக் கலைக்கிறோம் என்ற பெயரில் குறி வைத்து சுட்டுத்தள்ளியிருக்கிறது காவல்துறை.

தன் சொந்த மாநிலத்து மக்களையே நர வேட்டை ஆடியள்ளது ஆளத்தகுதியற்ற எடப்பாடி அரசு. நீதியும் நியாயமும் கிடைக்க-குற்றமிழைத்தோர் தண்டிக்கப்பட நாம் உறுதியாக போராடுவோம் என குறிப்பிட்டு உள்ளார்.

ஆட்சியர் & எஸ்.பி. இடமாற்றம்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை அடுத்து தலைமைச்செயலாளர், டிஜிபி மற்றும் அமைச்சர்களுடன் முதல்-அமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து அதிகாரிகள் இடமாற்றம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியது.

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தை சரியாக கையாள தவறிய ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரை தமிழக அரசு இடமாற்றம் செய்து உள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் அனைவருக்கும் கல்வி கூடுதல் திட்ட இயக்குனராக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தூத்துக்குடி மாவட்டத்திற்கு மாற்றப்பட்டு உள்ளார். நெல்லை மாவட்ட ஆட்சியராக ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.  தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேந்திரன் வடசென்னை போக்குவரத்து துணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டார். நீலகிரி மாவட்ட எஸ்.பி. முரளி ரம்பா தூத்துக்குடிக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். சென்னை (வடக்கு) போக்குவரத்து காவல் ஆணையர் சண்முகப்பிரியா நீலகிரி எஸ்.பி.யாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

இணைய சேவை முடக்கம்

தூத்துக்குடியில் போராட்டம் தொடர்பாக வதந்திகள் பரவலை தடுக்கும் வகையில் இணைய சேவையை முடக்க தமிழக உள்துறை உத்தரவிட்டது.

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 5 நாட்களுக்கு இணைய சேவையை முடக்க உத்தரவிடப்பட்டது. 27-ம் தேதி வரையில் இணைய சேவையை முடக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இணைய சேவை முடக்கம் காரணமாக வாட்ஸ்-அப், பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்கள் செயல்படாது. மத்திய அரசின் அறிவுறுத்தலின் பெயரில் தமிழக அரசு இணைய சேவை முடக்கத்திற்கு உத்தரவிட்டு உள்ளது.

நிலைமை கட்டுக்குள் உள்ளது

தூத்துக்குடியில் நிலைமை கட்டுக்குள் உள்ளது என மாவட்ட காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இன்று புதன் கிழமை 2 காவல்துறை வாகனங்கள் உள்பட 5 வாகனங்களுக்கு இன்று தீ வைக்கப்பட்டு உள்ளது.

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் இன்று 67 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *