ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு ‘ஒருத்தனாவது சாவணும்’ அதிர்ச்சி வீடியோ!

Read Time:3 Minute, 55 Second

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட சென்ற போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு தமிழக வரலாற்றில் ஒரு கருப்பு நாளாக பதிவாகி உள்ளது.  மாசுபாடு, சுகாதாரத்திற்கு வேட்டு வைக்கும் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது தீவிரவாதிகளை தாக்குவது போன்று நடந்து உள்ளது. 10 வகுப்பு மாணவி உள்பட 11 பேர் போலீஸ் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டு உள்ளனர். 75 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

அவர்களில் பலருடைய நிலை மோசமாக இருப்பதாகவும், உயிரிழப்பு அதிகரிக்க கூடும் எனவும் அச்சம் நிலவுகிறது.

100 நாட்கள் வரையில் அமைதியான முறையில் போராடிய மக்கள் மீது மூர்க்கத்தனமாக துப்பாக்கி பிரயோகம் செய்யப்பட்டு உள்ளது. தமிழக காவல்துறையிடம் இருந்து சற்றும் எதிர்பார்க்காத வகையில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. தாக்குதலுக்கு பல்வேறு தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

போராட்டத்தின் போது சீருடையில் இல்லாத போலீசார், துப்பாக்கியால் சூடும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.பயங்கரவாதம் நிறைந்த காஷ்மீர் மாநிலத்தில்கூட என்கவுண்டர்களுக்கு எதிராக போராடும் மக்களுக்கு எதிராக ‘பெல்லட்’ துப்பாக்கிகளை பயன்படுத்தியது கூட விமர்சனத்திற்கு உள்ளாகியது. ஆனால் ஆயுதம் ஏதுவுமின்றி போராடிய பொதுமக்களை குறிவைத்து துப்பாக்கியால் முன்னெச்சரிக்கை எதுவுமின்றி நடத்தப்பட்ட தாக்குதல் பெரும் வேதனையையே ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டு உள்ளது. போராட்டத்தின் போது கலவரம் வெடித்தால் போலீசார் முதலில் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கூட்டத்தை கலைக்க முயற்சி செய்ய வேண்டும், முடியாத கட்டத்தில் கால்களில் சுடுவதற்கு மட்டுமே அனுமதி உள்ள நிலையில் தூத்துக்குடியில் மிகவும் கோரமான சம்பவமே பதிவாகி உள்ளது. பொதுமக்களின் மார்பு, முகம், வாய் பகுதிகளை குறிவைத்து துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு உள்ளது வக்ரத்தின் உச்சமாகும்.

இதற்கிடையே ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டு உள்ள டுவிட்டரில், “காவல்துறையை சேர்ந்த நபர், ஒருத்தனாவது சாவணும்,” என்று கூறும் காட்சி இடம்பெற்று உள்ளது.  இதனையடுத்து வாகனத்தில் மேலிருந்து காவலர் ஒருவர் துப்பாக்கியால் சுடுகிறார். அதிலிருந்து குண்டு பாய்ந்து செல்கிறது. இதனால் யாரும் பாதிக்கப்பட்டார்களா? என்பது தெரியவரவில்லை. ஒருத்தனாவது சாவணும் என்று கூறி, 10-க்கும் மேற்பட்டோரை கொல்லப்பட்டு உள்ளனர். மனித உயிர்கள் எவ்வளவு கேவலமாக பார்க்கப்பட்டு உள்ளது என்பது இதிலிருந்து தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *