போலீஸ் குறிவைத்து மார்பு மற்றும் தலையில் சுட்டது! எச்சரிக்கை விடுக்கவில்லை நேரில் பார்த்தவர் குற்றச்சாட்டு

Read Time:3 Minute, 15 Second

தூத்துக்குடியில் போலீஸ் எச்சரிக்கை எதுவும் விடுக்கவில்லை, போராட்டக்காரர்களை கொல்லவே துப்பாக்கி சூடு நடத்தியது என சம்பவத்தை நேரில் பார்த்தவர் குற்றம் சாட்டியுள்ளார்.

போலீசார் போராட்டக்காரர்களை சுட்டுக்கொல்ல வேண்டும் என்றே தாக்குதலை நடத்தியது. தலை மற்றும் மார்பு பகுதியிலே சுடப்பட்டது. பலர் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்த இடத்திலே உயிரிழந்துவிட்டனர். போராட்டக்காரர்கள் காயம் அடைந்தவர்களை கடைசி நேரத்தில் உயிரை காப்பாற்ற மோட்டார் சைக்கிளில் வைத்து அருகே இருந்த நல்லதம்பி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள் என சம்பவத்தை நேரில் பார்த்தவர் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையிடம் தெரிவித்து உள்ளார்கள்.

போராட்டத்தில் கலந்துக்கொண்ட ஜெய் கணேஷ் (பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது) பேசுகையில், “மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பகுதியில் போராட்டத்தில் கலந்துக்கொண்டேன். அப்போது காவல்துறை மற்றும் போராட்டக்காரர்கள் இடையே வாக்குவாதம் நேரிட்டது. போலீசார் துப்பாக்கியால் சுட தொடங்கினார்கள். அப்போது ஒரு சடலம் என் மீது விழுந்தது,” என குறிப்பிட்டு உள்ளார்.

போராட்டம் நடைபெற போது இருதரப்பு இடையேயும் மோதல் வெடித்தது. போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியதும், போராட்டக்காரர்கள் கற்களை வீசினர். பதிலுக்கு போலீசாரும் தாக்குதலை மேற்கொண்டார்கள். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பகுதியில் போராட்டக்காரர்கள் மற்றும் போலீஸ் இடையே வாக்குவாதம் நேரிட்டது. அங்கு 50 முதல் 60 போலீசார் வரையில் இருந்தார்கள். அப்போது எங்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. அதனால் எங்களை தடுக்க முடியாததால், எந்தஒரு எச்சரிக்கையும் விடுக்காமல் துப்பாக்கியால் சுட தொடங்கிவிட்டனர் என குற்றம் சாட்டிஉள்ளார்.

போலீசார் மார்பு மற்றும் தலையை குறிவைத்து துப்பாக்கி சூடு நடத்தினர். பாதிக்கப்பட்டவர்களில் பலர் சம்பவ இடத்திலே உயிரிழந்துவிட்டார்கள். சிலர் அருகே இருந்த நல்ல தம்பி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்கள். குண்டு அடிப்பட்டவர்கள் அசைவில்லாமல் கிடந்ததை நான் பார்த்தேன். துப்பாக்கி சூடு நடத்தியும் கூட்டத்தை கலைக்க முடியவில்லை. கோபம் அடைந்த போராட்டக்காரர்கள் கற்களை வீச தொடங்கினார்கள். ஒட்டுமொத்த இடமும் போர்க்களமானது என குறிப்பிட்டு உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *