அரசுக்கு எதிராக நாங்கள் போராடவில்லை, தனியார் ஆலைக்கு எதிராகதான் போராட்டம் நடத்தினோம் என பாதிக்கப்பட்டவர்கள் வேதனையை தெரிவித்து உள்ளார்கள்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தும் மக்கள் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய போது வன்முறை வெடித்தது. அப்போது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 11 பேர் உயிரிழந்தனர். 65-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். போலீசார் கொடூரமான முறையில் தாக்கினர் என காயம் அடைந்தவர்கள் குற்றம் சாட்டி உள்ளார்கள். காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை கூட சந்திக்க அனுமதிப்பது கிடையாது எனவும் குற்றம் சாட்டப்படுகிறது.
இதற்கிடையே புதிய தலைமுறை செய்தி சேனலுக்கு பேட்டியளித்து பேசிய காயம் அடைந்தவர்கள் மற்றும் அவர்களுடைய உறவினர்கள் தங்களுடைய வேதனையை பதிவு செய்து உள்ளார்கள்.
காயமடைந்த ஒருவர் பேசுகையில், “போலீஸ் துப்பாக்கி சூட்டில் என்னுடைய மூட்டு பகுதியில் காயம் அடைந்து உள்ளது. ரொம்ப தூரத்தில் இருந்துதான் என்னை சுட்டிருக்கிறார்கள். எனக்கு அருகில் இருந்த பெண்ணுக்கு தலையில் குண்டடிபட்டது. அவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். கிட்டதட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே 4 பேர் உயிரிழந்துவிட்டனர். ஒரு தனியாருக்காக இவ்வளவு பண்ணனுமா? நாங்கள் ஒன்றும் அரசுக்கு எதிராகவே போராட்டம் நடத்தவில்லையே,” என வேதனையுடன் குறிப்பிட்டு உள்ளார்.
பாதிக்கப்பட்டவரை பார்க்க வந்த பெண் ஒருவர் பேசுகையில், போராட்டம் நடக்கும் போது ஓரமாக தான் நின்று கொண்டிருந்தோம். போலீஸ்காரர் இவனை மூட்டில் சுட்டுள்ளார்கள். பின்னர் தூக்கிக் கொண்டு வந்து மருத்துவமனையில் சேர்த்துள்ளார்கள். எங்களுக்கு ஒருமணி அளவில் போன் செய்து தகவலை தெரிவித்தார்கள். நாங்கள் திரேஸ்புரத்தில் இருக்கிறோம். அங்கு போலீசாரின் அராஜகம் தாங்க முடியவில்லை. லத்தியால் அடித்தார்கள். துப்பாக்கியால் சுட்டுவிடுவோம் என பயமுறுத்தினார்கள். நாங்கள் வீட்டில் இருந்தோம். இவன் மூட்டில் அடிபட்டு இங்கு அனாதையாக கிடந்துள்ளான், என கூறிஉள்ளார். போலீஸ் கட்டையை கொண்டு தாக்கியதாகவும், காப்பாற்ற சென்றவர்களை தாக்கியதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.