பயங்கரவாத ஆபரேஷன்களில் பயன்படுத்தும் எஸ்.எல்.ஆர் வகை துப்பாக்கி! அனுமதிக்கப்பட்டதா?

Read Time:8 Minute, 10 Second

தூத்துக்குடியில் போராட்டக்காரர்களுக்கு எதிராக பயங்கரவாத ஆபரேஷன்களில் பயன்படுத்தப்படும் எஸ்.எஸ்.ஆர். வகை துப்பாக்கி பயன்படுத்தப்பட்டு உள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டம் நடத்தும் மக்கள் செவ்வாய் கிழமை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற போது வன்முறை வெடித்ததில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 11 பேர் கொல்லப்பட்டனர்.

போராட்டம் நடத்திய மக்களை எதிர்க்கொள்வதில் பல்வேறு விதிமுறைகள் வெளிப்படையாகவே மீறப்பட்டு உள்ளது என்பது அப்பட்டமாகி உள்ளது.

‘மாப் ஆபரேஷன்’ விதிமுறைகள் சொல்வது என்ன?

போராட்டம் நடத்தும் மக்களை கலைந்து செல்ல முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு பெயர்தான் ‘மாப் ஆபரேஷன்’ ஆகும். போராட்டம் நடத்துபவர்களுக்கும், காவல்துறையினர் இடையே மோதலான போக்கு நிலவும் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் வகுக்கப்பட்டு உள்ளது. ‘மாப் ஆபரேஷன்’ தொடர்பாக காவல்துறையினர் அவ்வப்போது பயிற்சியும் மேற்கொள்வார்கள். இப்போது ஆயுதமில்லாது போராடிய தூத்துக்குடி மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை சரியானதா? விதிமுறைகள் பின்பற்றப்பட்டதா? என்ற கேள்விகள் எழுகிறது.

போராட்டத்தின் விளைவாக போலீஸ் துப்பாக்கி பிரயோகிப்பது தொடர்பாகவும் விதிமுறைகள் வகுக்கப்பட்டு உள்ளது.

சட்டவிரோதமாக போராட்டம் நடத்தப்படுகிறது என்றால் அவர்கள் அமைதியான முறையில் கலைந்து செல்வதற்கு ‘மெகாபோன்’ வாயிலாக எச்சரிக்கையை விடுக்கவேண்டும், அதற்கான கொடியை ஏந்தவேண்டும். அதையும் மீறி போராட்டம் தொடரும் போது இரண்டாம் கட்ட நகர்வாக கண்ணீர் புகை குண்டுகள், ரப்பர் குண்டுகளை பிரயோகம் செய்யலாம். கண்ணீர்ப் புகைகுண்டுகளை தரையில் படும்படியாக 45 டிகிரி கோணத்தில் வைத்துதான் சுட வேண்டும். அப்படியும் கூட்டம் கலையாத பட்சத்தில், போலீஸ் அவர்களை விரட்ட தடியடியை மேற்கொள்ளலாம்.

தடியடிக்கும் கூட்டம் கலையாமல், போராட்டக்காரர்கள் தீ வைப்பு, தாக்குதல் போன்ற வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டால் போலீஸ் அதிஉயர் நடவடிக்கையாக துப்பாக்கி சூடு நடவடிக்கையை மேற்கொள்ளலாம். அதுவும் முடியாத பட்சத்தில்தான். அதற்கும் விதிமுறைகள் உள்ளது. வன்முறை கட்டுக்குள் அடங்காத நிலைக்கு செல்லும் போது போலீஸ் படையின் தூப்பாக்கி ஏந்திய குழு (குறைந்த அளவு மட்டுமே) தோட்டாக்களை நிரப்ப வேண்டும்(சம்பவம் நடக்கும் போதுதான்). 5 அடி முன்னதாக சென்று போலீஸ் எச்சரிக்க வேண்டும். பின்னர் எதிர்தரப்பில் முக்கியமான நபராக இருப்பவரின் காலில் சுடவேண்டும் (உயர் அதிகாரி உத்தரவிட்ட பின்னர்தான்). முக்கியமான நபர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதும் கூட்டம் கலைந்து ஓடும் என்பதே கணிப்பாக உள்ளது. துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு எச்சரிக்க வேண்டும்.
போராட்டக்காரர்களை எதிர்க்கொள்ள போலீஸ் படை 4 நிலைகளாக பிரிக்கப்பட்டு வரிசைப்படுத்த வேண்டும். போலீஸ் படையில் முன் வரிசையில் நிற்கும் முதல் பிரிவில் கண்ணீர் புகைக் குண்டுகளை கையாளும் பிரிவை நிறுத்த வேண்டும். அடுத்து தடியடி நடத்தும் வகையிலான பிரிவு. அதற்கு அடுத்தப்படியாக துப்பாக்கி ஏந்திய பிரிவு. இறுதி வரிசையில் காயம் அடைபவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், மருத்துவமனைக்கு அழைத்து செல்லவும் முதல் உதவி பிரிவு இருக்க வேண்டும். இவையெல்லாம் ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது பின்பற்றப்பட்டவில்லை என்றே கூறப்படுகிறது. போலீஸ், போராட்டக்காரர்களை எச்சரிக்க வானத்தை நோக்கிகூட சுடவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது.

துப்பாக்கிச் சூட்டில் விதிகள் மீறல் 

போராட்டக்காரர்களை விரட்ட துப்பாக்கி சூடு நடத்துவதில் விதிமுறைகள் மீறப்பட்ட நிலையில், பிரயோகம் செய்யப்பட்ட துப்பாக்கியும் விதிமுறைகளை மீறியதாக உள்ளது. போராட்டக்காரர்களை விரட்ட என்ன வகையான துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட வேண்டும்? என்ற விதிமுறைகளும் உள்ளது. தூத்துக்குடியில் போராட்டக்காரர்களின் ஆவேசத்தை கட்டுப்படுத்தி அமைதி ஏற்படுத்தவே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் அங்கு துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட போது விதிமுறைகள் மீறப்பட்டது தெளிவாக தெரிகிறது.

போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கியை பிரயோகம் செய்யும் போது ‘ஒருத்தனாவது சாவணும்’ என போலீஸ் கூட்டத்தில் ஒருவர் பேசும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. துப்பாக்கி சூடு தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோக்கள் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. போலீஸ் படை வேன் மீது ஏறி நின்று போராட்டக்காரர்களை ராணுவம் போது குறிவைத்து சுடுவது புதியதாக உள்ளது. போராட்டங்களில்

கூட்டத்தை கலைக்க பாய்ண்ட் 303 வகை துப்பாக்கியை பயன்படுத்துவது வாடிக்கையாகும். ஆனால் தூத்துக்குடியில் செல்ஃப் லோடிங் ரைபிள் Self Loading Rifle எனப்படும் வகையான துப்பாக்கி உபயோகப்படுத்தப்பட்டு உள்ளது.

பாய்ண்ட் 303 வகை துப்பாக்கியில் ஒரு முறைதான் சுட முடியும். பின்னர் புல்லட் ஆபரேட் செய்துதான் பயன்படுத்த முடியும். இந்தரக துப்பாக்கிகளில் அதிகபட்சம் 6 குண்டுகள் நிரப்ப முடியும். அதனை ஒவ்வொரு முறையும் லோட் செய்ய வேண்டும். ஆனால் ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது காவல்துறை பயன்படுத்தியது செல்ப் லோடட் ரைபிள் (எஸ்.எல்.ஆர்) என தெரியவந்து உள்ளது. இவ்வகையான துப்பாக்கியில் 30 புல்லட்டுகள் லோட் செய்ய முடியும். துப்பாக்கியின் ட்ரிக்கரை அழுத்தி பிடிக்கும் போது வரிசையாக குண்டுகள் சீறிப்பாயும். இந்தரக துப்பாக்கியில் தனித்தனியாக தோட்டாக்களை லோட் செய்ய வேண்டியது கிடையாது. இந்திய தரைப்படையில் பயன்படுத்தப்படுகிறது.

எஸ்.எல்.ஆர் வகை துப்பாக்கிகளை முக்கியமான இடங்களில் பயங்கரவாத ஆபரேஷனில் மட்டும் பயன்படுத்துவார்கள் என கூறப்படுகிறது. தூத்துக்குடியில் போராட்டக்காரர்களுக்கு எதிராக எஸ்.எல்.ஆர் வகை துப்பாக்கியை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டதா? என்ற கேள்வி வலுக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *