ஜனநாயக ஆட்சியா? பாசிச ஆட்சியா? மோடி அவர்களே மவுனம் கலையுங்கள்!

Read Time:7 Minute, 34 Second

ஜனநாயக ஆட்சி நடக்கிறதா? பாசிச ஆட்சி நடக்கிறதா? என கேள்வி எழுப்பி உள்ள சத்ருகன் சின்ஹா தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து உள்ளார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய மக்கள் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பல்வேறு தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இவ்விவகாரம் தொடர்பாக தமிழக அரசு விரிவான அறிக்கையை அளிக்க வேண்டும் என உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டது. ஆனால் மத்திய அமைச்சர்கள் யாரும் இவ்விவகாரம் தொடர்பாக எதுவும் பேசவில்லை. பிரதமர் மோடியும் எந்தஒரு கருத்தும் தெரிவிக்கவில்லை. இது விமர்சனத்திற்கு உள்ளனது.

மவுனம் கலைத்த மத்திய அரசு

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தூத்துக்குடி மக்கள் அமைதிக்காக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு மிகுந்த வேதனையை அளிக்கிறது. துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். என்னுடைய எண்ணங்கள் எல்லாம் பாதிக்கப்பட்டவர்கள் பற்றி உள்ளது. காயமடைந்தர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். மக்கள் அமைதிக்காக்க வேண்டும். பிராந்தியத்தில் அமைதி நிலவ அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். துப்பாக்கிச் சூடு தொடர்பாகவும், தூத்துக்குடியில் நிலைமை மோசமடைந்தது தொடர்பாகவும் அறிக்கை அளிக்குமாறு மாநில அரசை கோரியுள்ளோம் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறிஉள்ளார்.
காங்கிரஸ் கேள்வி

போராட்டக்காரர்களை கொல்ல போலீசுக்கு உரிமை கிடையாது, அது அவர்களது பணியும் கிடையாது என காங்கிரஸ் தலைவர் கபில் சிபல் காட்டமாக குறிப்பிட்டு உள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் வெளியிட்டு உள்ள டுவிட் செய்தியில், மக்களுக்கு போராட்டம் நடத்த அடிப்படை உரிமை உள்ளது. போலீசுக்கு அவர்களை கொல்லும் உரிமையும் கிடையாது, அது அவர்களது பணியும் கிடையாது. ஆனால் தூத்துக்குடியில் அரசாங்கம் அதனை செய்து உள்ளது. அமைதியாக போராட்டம் நடத்தியவர்கள் 10 பேர் கொல்லப்பட்டு உள்ளார்கள். அரசு எப்போது எல்லாம் மக்களை அடக்குகிறதோ அப்போது எல்லாம் நாம் அமைதியாக அதை பார்த்து வருகிறோம். இத்தேசம் மாறிவிட்டது என கூறிஉள்ளார்.

கண்டனம் தெரிவித்து டுவிட்டரில் கருத்து பதிவு செய்து உள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி குறிப்பிட்ட நிறுவனத்திடம் இருந்து உத்தரவு பெற்று காவல்துறை தாக்கியதா? என்ற கேள்வியை எழுப்பி உள்ளார்.

‘‘தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டை ஜாலியன் வாலாபாக் படுகொலைகளுடன் ஒப்பிடுவது அதீதமானது கிடையாது. ஜாலியன் வாலாபாக் கொடுமை ஆங்கிலேயர்களால் நிகழ்த்தப்பட்டது. மக்கள் போராட்டத்தில் 10 பேர் உயிரிழந்தது எப்படி நிகழ்ந்தது என ஸ்டாலின் கேட்பது 100 சதவிதம் நியாயமானது. மேலே இருந்து வரும் உத்தரவுக்கு ஏற்ப செயல்பட்டு தமிழக அரசு சந்தோஷமடைந்து கொள்கிறது. வேறு எங்கிருந்தோ உத்தரவு பெற்று காவல்துறை செயல்பட்டிருக்காது என நம்புவோம்’’ என குறிப்பிட்டு உள்ளார்.

சத்ருகன் சின்ஹா காட்டம்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு பா.ஜனதா மூத்த தலைவர் சத்ருகன் சின்ஹா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக டுவிட்டரில் அவர் வரிசையாக பதிவிட்டு உள்ள செய்தியில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்களை போலீஸ் சுட்டுக்கொன்றது வேதனையளிக்கிறது, வெட்கப்பட வேண்டியது. கண்டிக்கப்பட வேண்டியது.

காட்டுமிராண்டித்தனமானது என பாரதத்தாய் உணர்கிறாள். நாம் அனைவரும் ஜனநாயக ஆட்சியில்தான் வாழ்கிறோமா? அல்லது பாசிச ஆட்சியில் வாழ்கிறோமா?. அமைதியான முறையில் போராடிய ஏழை அப்பாவி மக்கள் மீது எந்தஒரு எச்சரிக்கையும் விடுக்காமல் தானியங்கி துப்பாக்கி மூலம் போலீஸ் தாக்குதல் நடத்தி உள்ளது. மக்களை கொன்ற இந்த படுகொலைக்கு உத்தரவிட்டது யார்? இது இந்திய வரலாற்றில் இது கறுப்பு நாள். ஆரோக்கியமான, அமைதியான சுற்றுப்புறச்சூழலுக்கு போராடியது ஒரு மிகப்பெரிய குற்றமா? ஜனநாயகத்தில் தங்களின் குரலை உயர்த்திப் பேச அனைவருக்கும் உரிமை இருக்கிறது.
மக்களைப் பாதுகாக்க வேண்டிய அரசு பயங்கரவாதத்திற்கு இணையாக துப்பாக்கியால் சுட்டுக் கொல்லும் போது மக்கள் எங்கு செல்வார்கள்?

இந்த படுகொலைக்கு நீதி கண்டிப்பாக வழங்க வேண்டும். அப்பாவி மக்களை கொலை செய்தவர்கள் மற்றும் காரணமானவர்களை கொடூரமாக தண்டிக்க வேண்டும். இந்த படுகொலைக்கு நான் கண்டனம் தெரிவிக்கிறேன், நீதி கோருகிறேன். இவ்விவகாரத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை ஆதரிக்கிறேன். ஆளும் அரசிடம் இருந்தும், நிர்வாகத்திடம் இருந்தும் பதில்கள் வராத நிலையில் ஏராளமான கேள்விகள் எழுகிறது. பிரதமர் மோடி அவர்களே இப்போது நீங்கள் பேச வேண்டிய நேரம் வந்துவிட்டது.

கதுவாவில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட போதும் பேசவில்லை, பெட்ரோல் விலை உயர்வு குறித்தும் பேசவில்லை.

தூத்துக்குடியில் இரக்கமற்ற முறையில் மக்கள் கொல்லப்பட்டபோதும் நீங்கள் மவுனம் கலைக்கவில்லை. தானியங்கி துப்பாக்கி மூலம்  அப்பாவி மக்களை கொல்ல யார் உத்தரவிட்டது? காஷ்மீர் பற்றி எரிகிறது, நீங்கள் ஒன்றுமில்லை என்று கூறிவிட்டீர்கள்! இப்போது தமிழ்நாடு கொந்தளிக்கிறது. ஆர்எஸ்எஸ் தொண்டரின் தோரணைப் பேச்சை இப்போது நாங்கள் கேட்க முடியுமா? என குறிப்பிட்டு உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *