திருமணம் செய்யாமல் 18 வயது ஆணும், 19 வயது பெண்ணும் இணைந்து வாழ உயர்நீதிமன்றம் அனுமதி

Read Time:3 Minute, 4 Second

திருவனந்தபுரம்,

திருமணம் செய்யாமல் 18 வயது ஆணும், 19 வயது பெண்ணும் இணைந்து வாழ கேரளா உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

கேரளாவில் திருமணம் செய்யாமல் இளம்ஜோடி சேர்ந்து வாழ்வதற்கு எதிராக பெண்ணின் தந்தை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்தியாவில் திருமண வயதானது சட்டப்படி ஆண்களுக்கு 21 வயது, பெண்களுக்கு 18 வயது என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

19 வயது இளம்பெண்ணின் தந்தை ஆலப்புழாவை சேர்ந்த முகமது ரியாத் தாக்கல் செய்த மனுவில், என்னுடைய மகள் சட்டப்பூர்வமான திருமண வயதை எட்டவில்லை என குறிப்பிட்டு இருந்தார். இந்திய குழந்தை திருமண தடை சட்டம் 2006 பிரிவு 2 (a) படி 21 வயதை எட்டாத ஆணும், 18 வயதை எட்டாத பெண்ணும் குழந்தை என விளக்குகிறது. இத்தகைய சூழ்நிலையில், இந்த வயதில் திருமணம் செய்து கொண்டால் கூட, அவர்களின் திருமணம் செல்லுபடியாகாது, சட்டவிரோதமாக இருக்கும் என்று அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆட்கொணர்வு மனு (ஹேபியஸ் கார்பஸ்) தாக்கல் செய்து இளம் ஜோடியை பிரிக்க வேண்டும் என்று கேட்டு இருந்தார். இந்த மனு நீதிபதிகள் வி. சிதம்பரேஷ் மற்றும் கேபி ஜோதிந்திரநாத் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட்டு பெஞ்ச், குறிப்பிட்ட இளம்பெண் பருவமடைந்துவிட்டார், அவருக்கு திருமணம் செய்துக்கொள்ள உரிமை உள்ளது. Mahomedan Law பிரிவு 251-ன் படியும் அவருக்கான உரிமை உள்ளது என குறிப்பிட்டது.

“சமுதாயத்தின் மரபுசார்ந்த பிரிவினருக்கு ஏற்றுக்கொள்ள முடியாததாக இருந்தாலும், எல்லையை கொண்ட அரசியலமைப்பு நீதிமன்றம் வயது வந்த ஆணும், பெண்ணுக்குமான தடையற்ற உரிமைகளுக்கு மதிப்பளிக்கிறது. வாலிபருடன் இணைந்து வாழ இளம்பெண்ணுக்கு முழு சுதந்திரம் உள்ளது, வாலிபர் திருமண வயதை அடைந்த பின்னர் அவரை திருமணம் செய்துக்கொள்ளவும் செய்யலாம்,” என உயர்நீதிமன்றம் கூறியது.

கடந்த மே மாதம் இதேபோன்ற வழக்கில் தீர்ப்பு கூறிய சுப்ரீம் கோர்ட்டு, வயது வந்த ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொள்ளாமலேயே சேர்ந்து வாழ உரிமை உள்ளது. திருமணம் செய்துகொள்வதற்கான தகுதியை எட்டாவிட்டாலும் கூட திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ உரிமை உள்ளது என கூறியிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *