இந்திய அரசு மற்றும் அரசியல் கட்சிகளை பெரும் நிறுவனங்கள் மொத்த விலைக்கு வாங்குகிறதா? என்ற கேள்வியே வலுப்பெறுகிறது.
பன்னாட்டு நிறுவனங்களிடம் இருந்து பெருமளவு தொகையை நன்கொடையாக பெறும் அரசியல் கட்சிகள் எப்படி அவர்களுக்கு சாதகமாக செயல்படாது?. தூத்துக்குடி ஸ்டெர்லைட் விதிமீறல்கள் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசும், பா.ஜனதா தேசிய ஜனநாயக கூட்டணி அரசும் ஒருவருக்கு ஒருவர் விரல்களை நீட்டி குற்றம் சாட்டிக்கொள்ளலாம். ஆனால் தங்களுடைய குற்றங்களை மறைக்க முடியுமா?. போராட்டத்தின் போது 13 பேர் கொல்லப்பட்ட போது பா.ஜனதாவும், காங்கிரசும் அமைதிகாத்தது என்றே சொல்லலாம். பெயருக்கு கண்டனம் தெரிவிக்கும் காங்கிரஸ், அதனுடைய ஆட்சியின் கீழ் நடைபெற்ற விதிமுறை மீறல்களை மறைக்க முயற்சி செய்கிறது. பா.ஜனதாவும் காங்கிரஸை சாடி தன்னை பாதுகாத்துக்கொள்ள முயற்சி செய்கிறது.
இவர்கள் யாரும் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு எதிராக ஸ்திரமான நடவடிக்கைக்கு வலியுறுத்தினார்களா? என்றால் கிடையாது.
எப்சிஆர்ஏ திருத்தம்
தேர்தல் விதிமுறைகள் அடங்கிய மக்கள் பிரதிநிதித்துவ சட்டமானது அரசியல் கட்சிகள் வெளிநாட்டு நன்கொடைகளைப் பெறுவதை தடுக்கிறது. 1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 29 பி பிரிவு, 2010 வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டம் பிரிவு 4(1) (e) அரசியல் கட்சிகள் வெளிநாடுகளில் இருந்து பணம் பெருவதற்கு தடை விதிக்கிறது.
லண்டனை சேர்ந்த வேதாந்தா நிறுவனத்திடம் இருந்து 2005 முதல் 2012 வரையில் பெரும் தொகையை நன்கொடையாக பெற்ற விவகாரத்தில் காங்கிரஸ், பா.ஜனதா குற்றவாளிகள், எப்சிஆர்ஏ சட்ட விதிகள் மீறல் என ஜனநாயக சீர்திருத்த சங்கம் குற்றம் சாட்டியது.
காங்கிரஸ் – பா.ஜனதாவிற்கு வேதாந்தா வழங்கிய பணம் விபரம்:-
இதுதொடர்பாக ஜனநாயக சீர்திருத்த சங்கம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. எப்சிஆர்ஏ சட்டப்படி காங்கிரஸ், பாரதீய ஜனதா குற்றவாளிகள் என்று உயர்நீதிமன்றம் கடந்த 2014-ல் தீர்ப்பளித்தது.
காங்கிரஸ், பா.ஜனதா மீது நடவடிக்கையை எடுக்க உள்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட்டது. இவ்விவகாரம் தொடர்பாக காங்கிரஸ், பா.ஜனதா உடனடியாக உச்சநீதிமன்றம் சென்றது. ஆனால் காங்கிரஸ், பாரதீய ஜனதா 2016-ம் ஆண்டு நவம்பரில் சுப்ரீம் கோர்ட்டில் இருந்து தங்களுடைய மனுக்களை திரும்ப பெற்றது. இதன் அடிப்படையான அர்த்தம் மத்திய உள்துறை அமைச்சகம் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தது என்று. ஆனால் அது கிடையாது. இவ்விவகாரம் தொடர்பாக ஜனநாயக சீர்திருத்த சங்கம் தேர்தல் ஆணையம் மற்றும் உள்துறை அமைச்சகத்தை நாடியது.
குற்றவாளிகள் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதில் இருந்து தப்பிக்க வழிவகை செய்யும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது.
மத்திய பாரதீய ஜனதா அரசு அரசியல் கட்சிகள் வெளிநாட்டு நன்கொடைகளைப் பெறுவதை சுலபமாக்கியது. பா.ஜனதா அரசு கடந்த 2016 நிதி மசோதா மூலம் எப்சிஆர்ஏ சட்டத்தைத் திருத்தியது. வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பதைத் தடுக்கும் 2010-வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டத்தில் (எப்சிஆர்ஏ) திருத்தம் செய்யப்பட்டது. திருத்த மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட போது காங்கிரசும், பாரதீய ஜனதாவும் ஒன்றாக இணைந்து ஆதரவை கொடுத்தது.
மதசார்பற்ற ஜனதா தளம், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் தரப்பில் விமர்சனம் செய்யப்பட்டது. கடந்த 1976-ல் இயற்றப்பட்ட எப்சிஆர்ஏ சட்டம் வெளிநாட்டில் பதிவு செய்யப்பட்ட எந்தவொரு நிறுவனமும் வெளிநாட்டு நிறுவனமாகும். எனினும், 2010-இல் அச்சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. பா.ஜனதா அரசு 2016-நிதி மசோதாவில் செய்த திருத்தத்தின் மூலம் ஒரு வெளிநாட்டு அமைப்பு குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தில் 50 சதவீதத்துக்கும் குறைவான பங்குகளை வைத்திருந்தால் அது வெளிநாட்டு நிறுவனமாகக் கருதப்பட மாட்டாது. இது 2010 செப்டம்பரில் இருந்து முன்தேதியிட்டு அமலுக்கு வருவதாக அந்தத் திருத்தம் செய்யப்பட்டது.
மேலும் திருத்தம்
2018 பட்ஜெட் கூட்டத்தொடரின் போது மக்களவையில் 2018-நிதி மசோதாவுக்கு 21 திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டது. 2010-வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறைச் சட்டத்தில் (எப்சிஆர்ஏ) மேற்கொள்ளப்பட்ட திருத்தமும் அடங்கும். 2018-ல் இந்த சட்டத்தில் மத்திய அரசு மேற்கொண்ட திருத்தமானது கடந்த 1976-ம் ஆண்டுக்குப் பிறகு கட்சிகள் பெற்ற வெளிநாட்டு நன்கொடைகளை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியதில்லை என்பதாகும். அதாவது 2016 நிதிச் சட்டத்தில் இடம்பெற்றிருந்த 2010, செப்டம்பர் 26-ல் இருந்து என்ற வார்த்தைகள் 1976, ஆகஸ்ட் 5-ல் இருந்து கட்சிகளுக்கு விதிவிலக்கு என்று மாற்றம் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
சட்டவிரோதமான செயல்களில் இருந்து தப்பித்துக்கொள்ள அரசியல் கட்சிகள் தாங்களே சட்டம் இயற்றும் நிலைதான் காணப்படுகிறது. இவ்விவகாரத்தில் அரசியல் லாபத்திற்காக காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதாவால் அரசியலமைப்பு நிர்வாகம் எப்படி முறைகேடாக பயன்படுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு பெருமளவு தொகையை நன்கொடையாக வழங்கும் நிறுவனங்களுக்கு ஆட்சியில் இருக்கும் கட்சியும், எதிர்க்கட்சியும் உதவிசெய்யாது என்பது என்ன நிச்சயம்?. இந்திய அரசு மற்றும் அரசியல் கட்சிகளை பெரும் நிறுவனங்கள் மொத்த விலைக்கு வாங்க முடியாதா என்ன?. இதுபோன்ற நிலையுடன் களமிறங்கும் பன்னாட்டு நிறுவனங்கள் விரோத செயல்களில் ஈடுபடாது? என இதுபோன்று பல கேள்விகள் எழுகிறது. அரசியல் கட்சிகளின் தேவையை பூர்த்தி செய்து காரியம் சாதிப்பதுதான் ஸ்டெர்லைட் கணக்கு.