சென்னையில் வெற்றிப்பெறாத பிளாஸ்டிக் மறுசுழற்சி திட்டம்… நம்முடைய பொறுப்பு என்ன?

Read Time:7 Minute, 43 Second

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி தமிழக அரசு மக்காத பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கவோ, பயன்படுத்தவோ 2019 ஜனவரி முதல் தடை விதிக்கப்படுவதாக அறிவித்து உள்ளது. தமிழக அரசின் அறிவிப்பிற்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டு குவிந்து வருகிறது. பிளாஸ்டிக் பிரச்சனையில் தமிழக அரசு எப்போதும் முன்னோடியாக இருந்தது என்பதை மறுக்க முடியாது. அரசினால் மட்டும் பிளாஸ்டிக்கினால் ஏற்படும் தீங்கினை ஒழித்துவிட முடியாது, பொதுமக்களின் பங்கு மிகவும் மகத்தானது, அதிமுக்கியத்துவம் வாய்ந்தது.

மக்காத பிளாஸ்டிக் பொருட்கள் தயாரித்தல், விற்பனைக்கு மாநில அரசு தடை விதிப்பது வரவேற்கத்தக்கது. இருப்பினும் இப்போது குவிந்து உள்ள பிளாஸ்டிக் பைகள் மற்றும் கழிவுகளுக்கான தீர்வு என்ன?. பிளாஸ்டிக் கழிவுகள் சுற்றுச்சுழலை மாசுபடுத்தாமல் மறுசுழற்சி செய்வது முக்கியத்துவம் பெற்றது. மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் சூழல் மாறுபாடு அமைச்சகம், பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகள் 2016-ன்படி தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளில் முக்கிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதாவது மக்களிடம் இருந்து மக்காத குப்பைகள், மட்கும் குப்பைகள் தரம்பிரித்து வாங்குவது. மாநகராட்சிகளில் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு சாலைகள் போடப்படும் என்ற மற்றொரு பயனும் முன்நிறுத்தப்பட்டது.

2017 அக்டோபர் 2-ஆம் தேதி முதல் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் புதன்கிழமை மட்டும் மக்காத குப்பைகளையும், பிற நாட்களில் மட்கும் குப்பைகளையும் பெறும் பணி நடைமுறைப்படுத்தப்பட்டது. சேகரிக்கப்படும் குப்பைகளை தரம் பிரித்து மட்கும் குப்பைகளை அந்தந்தப் பகுதிகளிலேயே இயற்கை உரமாக்கவும், மக்காத குப்பைகளை அதற்கென உள்ள வணிகர்களிடம் மறுசுழற்சிக்கு அளித்தும், மெல்லிய பிளாஸ்டிக் போன்ற கழிவுகள் சிறு துகள்களாக்கப்பட்டு பிளாஸ்டிக் சாலை பணிக்கும் பயன்படுத்தப்பட உள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.
சென்னையில் திட்டம் தொடங்கப்பட்டதும் 83,000 கிலோ மக்காத குப்பைகள் சேகரிக்கப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டது.

2017 திட்டத்தின்படி பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சேகரிக்கும் பிளாஸ்டிக் மற்றும் மறுசுழற்சிக் கழிவுகளை புதன்கிழமைகளில் குப்பை சேகரிக்க வரும் துப்புரவுப் பணியாளரிடம் வழங்க வேண்டும். மறுசுழற்சிக் கழிவுகள், பால் கவர், எண்ணெய் கவர், பேப்பர் அட்டைகள், பிளாஸ்டிக் கழிவுகள் ஆகியவற்றை வாரம் ஒருமுறை ஒவ்வொரு புதன்கிழமையும் கூடையில் சேகரித்து நகராட்சி துப்புரவுப் பணியாளரிடம் ஒப்படைக்க வேண்டும். இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆனால் மிகவும் முக்கியமான இத்திட்டம் வெற்றியடைந்ததா? என்பதுதான் கேள்வியாகும். இத்திட்டம் வெற்றியடையவில்லை என்பதே நாளிதழ் செய்தியாக உள்ளது.

பொதுமக்கள் மத்தியில் பிளாஸ்டிக் கழிவுகளை பெறுவது தொடர்பாக போதிய விழிப்புணர்வு இல்லை. இவ்விவகாரம் தொடர்பாக பொதுமக்கள் தரப்பிலும், மாநகராட்சி தரப்பிலும் மாறி, மாறி குற்றம் சாட்டப்பட்டாலும் விழிப்புணர்வு இல்லை, விழிப்புணர்வு செய்யப்படவில்லை என்பதே முக்கியமானது. பொதுமக்கள் மத்தியில் பிளாஸ்டிக் மறுசுழற்சி முறைக்கு விருப்பமின்மை இருக்கிறது என்று மாநகாரட்சி அதிகாரிகள் குறிப்பிடுகிறார்கள் என தி இந்து செய்தி வெளியிட்டு உள்ளது. வீடுகளில் சேரும் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து, மாநகராட்சிக்கு உதவி செய்ய வேண்டும் என்ற முக்கியமான பொறுப்பு நம்மிடம் உள்ளது என்பதை நாம் அனைவரும் உணரவேண்டும்.

சென்னை மணலியில் மட்டும் 100 சதவிதம் வீடு, வீடாக சென்று கழிவுகள் பெறப்படுகிறது என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த புதன்கிழமை மட்டும் சென்னையின் 15 மண்டலங்களில் இருந்து, 480 டன் பிளாஸ்டிக் கழிவுகள் பெறப்பட்டு உள்ளது. சென்னையில் மட்டும் ஒவ்வொரு நாளும் 5,000 டன்கள் கழிவுகள் சேருகிறது. சிறு முயற்சியில் 17 லட்சம் குடும்பத்தாரில் 20 சதவிதம்  மட்டும் பிளாஸ்டிக் பொருட்களை பிரித்து வாங்கும் திட்டத்திற்குள் வந்து உள்ளது. பிளாஸ்டிக் கழிவுகளை தனியாக பெறுவதன் மூலம் பெருங்குடி மற்றும் கொடுங்கையூரில் கொட்டப்படும் குப்பையின் அளவு குறைய வாய்ப்பு உள்ளது, இவ்வருடம் 100 சதவிதம் இத்திட்டத்தில் வெற்றி பெறுவோம் என மாநகராட்சி அதிகாரிகள் கூறியுள்ளனர் என தி இந்து செய்தியில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இன்றும் கடைக்கு செல்லும் போது யாரும் கையில் பையை கொண்டு செல்வது கிடையாது. கடையில் குப்பையை கொட்டுவதற்கு என்றே தாய்மார்கள் பிளாஸ்டிக் பைகளை வாங்கும் நிலையே உள்ளது. அதனால் ஏற்படும் விளைவுகள் தொடர்பாக விழிப்புணர்வு இருந்தாலும் அதே தவறைதான் மீண்டும், மீண்டும் செய்கிறார்கள். தூய்மையான சுற்றுசூழலுக்கு அரசாங்கம் மட்டும் செயல்பட்டால் போதாது, நாமும் செயல்பட வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களை தூய்மை பணியாளர்களே வாங்குகிறார்கள், மற்றும் குப்பையில் இருந்து அவர்களே பிரிக்கிறார்கள். பொதுமக்கள் பிளாஸ்டிக் பைகளை குப்பையுடன் குப்பையாக மிகவும் மோசமாக, துர்நாற்றம் வீசும் வகையில் வைத்து குப்பைத்தொட்டியில் வீசுகிறார்கள், நாங்கள் வாங்க சென்றாலும் இதே நிலைதான் என தூய்மை பணியாளர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள். சானிட்டரி நாப்கின்களையும் பிற கழிவுகளையும் பிளாஸ்டிக் குப்பைப் பைகளில் பலர் சேர்த்து விடுகின்றனர் எனவும் குறிப்பிடுகிறார்கள்.

இனி பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்போம், பிளாஸ்டிக் கழிவுகளை தனியாக சேகரித்து தூய்மை பணியாளர்களிடம் வழங்குவோம் என்பதை உறுதிசெய்வோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *