நீட் மரணக் கயிறு: அனிதாவை தொடர்ந்து பிரதீபா, சுபஸ்ரீ, தொடரும் தற்கொலைகள்

Read Time:11 Minute, 31 Second

இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வை (நீட்) மத்திய கல்வி வாரியம் சி.பி.எஸ்.இ. நடத்தி வருகிறது.

தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கும் விதமாகவும், ‘நீட்’ தேர்வுக்கு எதிராகவும் தமிழக சட்டசபையில் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்துக்கு ஜனாதிபதி இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை.

கடந்த ஆண்டைப் பொறுத்தமட்டில், ‘நீட்’ தேர்வு மதிப்பெண் அடிப்படையில்தான், தமிழ்நாட்டிலும் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்றது.

‘நீட்’ தேர்வில் கேள்வித்தாள், சி.பி.எஸ்.இ. என்று அழைக்கப்படுகிற மத்திய கல்வி வாரிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது விமர்சனம் செய்யப்பட்டது. 1176 மதிப்பெண் எடுத்தும் நீட் தேர்வு காரணமாக மருத்துவ படிப்பில் சேர முடியாமல் போனதால் கடந்த ஆண்டு அரியலூர் மாவட்டம் குழுமூரைச் சேர்ந்த அனிதா என்ற மாணவி தற்கொலை செய்துகொண்து தமிழகத்தை உலுக்கியது.
நீட் தேர்வு மாநில கல்வித்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கு சவாலாக அமைந்து உள்ளது. அதிலும் குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுகிற நிலை இருக்கிறது. அவர்கள் மருத்துவம் பயில தடையாக உள்ளது என அரசியல் கட்சிகள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. மருத்துவ கனவுடன் படிக்கும் ஏழைக் குடும்பத்தை சேர்ந்த மாணவ, மாணவியர் அதிக மதிப்பெண் எடுத்தும் நீட் தேர்வு காரணமாக விரும்பிய மருத்துவ படிக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

சொந்த திறமையால் பெற்றோருக்கு செலவு வைக்காமல் 12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்று அரசு மருத்துவக்கல்லூரிகளில் இடம் பெற்று ஏழை மாணவர்கள் படித்ததற்கு நீட் பெரும் தடையை ஏற்படுத்தி உள்ளது. கிராமபுறங்களிலிருந்து திறமையான மாணவ, மாணவியர் நீட் தேர்வில் வெற்றிபெற்று முன்வந்தாலும் ரேங்க் அடிப்படையில் அவர்கள் தலைக்கு மேல் மற்றொரு கத்தி தொங்குகிறது. நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றால் தனியார் மருத்துவகல்லூரியில் லட்சக்கணக்கில் பணம் கட்டி படிக்கவேண்டிய நிலையில் ஏழை மாணவர்கள் மருத்துவம் படிக்காமலே ஒதுங்கிய நிலை ஏற்பட்டது.

தேர்வில், சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின்படி அதிகமான கேள்விகள் கேட்கப்படுவதால் ஆயிரக்கணக்கான மாநில வழிக் கல்வியில் பயின்ற மாணவர்கள் பாதிப்பிற்கு உள்ளாகுகிறார்கள். விலக்கு கோரி தமிழக அரசு சட்டம் கொண்டுவந்தும், மத்திய அரசு இணக்கம் காட்டவில்லை.

இதனையடுத்து வசதியுள்ள பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளை ரூ. 4 லட்சம் வரையில் செலவு செய்து சிறப்பு பயிற்சி வகுப்புகளில் சேர்த்தார்கள். பிற மாநிலங்களில் பயிற்சி வகுப்புகளை படிக்கவும் பெற்றோர்கள் செலவு செய்து அனுப்பினார்கள். இந்த ஆண்டு மே மாதம் 6-ம் தேதி பல்வேறு குளறுபடிகளுடன் நீட் தேர்வு நடைபெற்றது. தமிழக மாணவர்கள் அடுத்த மாநிலத்திற்கு அனுப்பிய அவலம் எல்லாம் நடந்தது. நீட் தேர்வில் தவறான கேள்விகள் உள்பட ஏகப்பட்ட குளறுபடிகள் இருந்தது. இந்த ஆண்டு தமிழகத்தில் இருந்து 1,14,602 தேர்வு எழுதினர். திங்கள் கிழமை முடிவு வெளியாகியது பெரும் அதிர்ச்சியாக அமைந்தது. தமிழகத்தில் இருந்து எழுதிய மாணவர்களில் 45,336 பேர் தேர்ச்சிபெற்றனர். தேர்ச்சி விகிதம் 39.55 சதவிகிதமாகும்.

இதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் படித்த 1,337 பேர் தேர்ச்சிபெற்றுள்ளனர் என்ற பள்ளிக் கல்வித்துறை தெரிவித்து உள்ளது.
கடந்த ஆண்டு தமிழக அரசு பள்ளியில் இருந்து 5 மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்தது என்ற நிலையில் இவ்வாண்டு சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் மாணவர்கள் தேர்ச்சியானது உள்ளது.

தேர்வில் தென்னிந்தியாவில் ஆந்திரப் பிரதேசத்திலிருந்து 72.54 சதவிகிதமும், தெலங்கானாவிலிருந்து 68.88 சதவிகிதம் பேரும், கேரளாவிலிருந்து 66.73 சதவிகிதம் பேரும், கர்நாடகாவிலிருந்து 63.13 சதவிகிதம் பேரும் தேர்ச்சிபெற்றனர். இதில் அதிர்ச்சியளிக்கும் செய்தி தமிழகத்தில் தேர்ச்சி விகிதம் 39.55 சிதவிகிதம் மட்டும்தான். கல்வியில் பின்தங்கியதாக சொல்லப்படும் ஜார்கண்ட், பீகார், ஒடிசா போன்ற மாநிலங்களிலிருந்து 60 சதவிகிதம் பேர் தேர்ச்சிபெற்றனர். தமிழக அரசு நீட் பயிற்சி மையம் கொண்டுவந்தாலும் போதிய வசதி கிடையாது என குற்றச்சாட்டு எழுந்தது.

பிரதீபா தற்கொலை

நீட் தேர்வால் கடந்த ஆண்டு அனிதாவை தொடர்ந்து பிரதீபா என்ற ஏழை விவசாயியின் மகளும் உயிரை மாய்த்து உள்ளார். விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த பெருவளூர் கிராமைத்தை சேர்ந்த பிரதீபா நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் கடந்த 4-ம் தேதி மனமுடைந்து வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். இதற்கு பின்னர் வெளியாகிய தகவல்தான் நெஞ்சை உடைய செய்யும் வகையில் அமைந்தது.

3 ஆண்டுகளாக போராடியும் நீட் தேர்வில் வெற்றி பெற்று அரசு கல்லூரியில் சீட் பெற முடியாமல் போனதால் இந்த முடிவுக்கு அவர் வந்து உள்ளார். சிறுவயதிலிருந்தே மருத்துவம் படிக்கவேண்டும் என்ற கனவோடு படித்த பிரதீபா 10-வகுப்பில் 490 மதிப்பெண் எடுத்து அசத்தினார். இவரது படிப்பு திறமையை பார்த்த மாவட்ட ஆட்சியர் அவர் மேலும் நன்றாக படிக்க ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-1, பிளஸ்-2 படிக்க உதவி செய்தார். அந்த உதவியை வீணாக்காமல் கடந்த ஆண்டு பிளஸ்டூ தேர்வில் 1,125 மதிப்பெண் எடுத்தார்.

2015-16 கல்வியாண்டில் கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளியில் படித்த மாணவி பிரதீபா ப்ளஸ் 2 முடித்து 1125 மதிப்பெண்கள் பெற்றார். மருத்துவம் பயில்வதற்காக 2016-ம் ஆண்டு முயற்சித்தபோது, தனியார் மருத்துவக் கல்லூரியில் ரூ.5 லட்சம் கேட்டதால், அதற்கு வசதியின்றி மருத்துவம் சேரமுடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து 2017-ம் ஆண்டு முயற்சித்தபோது நீட் தேர்வை எதிர்கொள்ளவேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால், அதை எதிர்கொண்டு 155 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அப்போதும் அவருக்கு தனியார் மருத்துவக் கல்லூரியில் மட்டுமே இடம் கிடைத்துள்ளது. அப்போதும் லட்சங்கள் கட்டி தனியார் மருத்துவகல்லூரியில் படிக்க வேண்டுமென்பதால் மருத்துவ கல்லூரியில் அவர் சேர்வது தள்ளிப்போனது. இதனையடுத்து அரசு மருத்துவக் கல்லூரியில் தான் பயிலவேண்டும் என்ற முனைப்புடன் நீட் தேர்வுக்காக தன்னை தயார்படுத்திக்கொண்டு, தேர்வை எதிர்கொண்டுள்ளார். ஆனால் 39 மதிப்பெண்கள் மட்டுமே பெற்று தோல்வியை சந்தித்தார். மருத்துவ கனவு இந்த ஆண்டும் தகர்ந்ததை எண்ணி மனம் உடைந்து பிரதீபா தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

மனம் உடைந்த பிரதீபா இனியும் பெற்றோருக்கு பாரமாக இருக்க விரும்பாமல் தற்கொலை செய்ய முடிவெடுத்து வீட்டிலிருந்த எலி மருந்தை சாப்பிட்டு உயிரை மாய்த்துக்கொண்டார். என் மேல நீங்கள் வைத்த நம்பிக்கையை என்னால் காப்பாற்ற முடியவில்லை. என்னிடம் தோல்வியை தாங்கும் சக்தி கிடையாது. எத்தனை முறை தோல்வியை தாங்குவேன் என கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். கடிதம்:-
முன்னதாக தமிழ் மொழியில் தவறாக மொழி பெயர்க்கப்பட்ட வினாக்களுக்கு மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்று கடிதம் எழுதியிருந்தார்.

சுபஸ்ரீ

பிரதீபா தற்கொலை தொடர்ந்து திருச்சியை சேர்ந்த மாணவி சுபஸ்ரீ தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சி, வேதனையை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி உத்தமர்கோவில் திருவள்ளுவர் அவென்யூ பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி சுபஸ்ரீ தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டு உள்ளார். சுபஸ்ரீயின் தந்தை கண்ணன் அரசுப் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். சுபஸ்ரீ (17) துறையூர் சௌடாம்பிகா பள்ளியில் பிளஸ் 2 படித்த சுபஸ்ரீ 907 மதிப்பெண் எடுத்திருந்தார். நீட் தேர்வு முடிவில் சுபஸ்ரீ குறைந்த மதிப்பெண்கள் மட்டுமே எடுத்து உள்ளார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட சுபஸ்ரீ நேற்று இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டு உள்ளார்.

2-வது ஆண்டாக நீட் தேர்வினால், மாணவிகள் தொடர்ந்து தற்கொலை முடிவை எடுப்பது பெற்றோர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வு முடிவினால் மாணவ, மாணவிகள் யாரும் தற்கொலை முடிவுக்கு போக வேண்டாம், எதிர்காலத்தை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். நீட் விவகாரத்தில் தமிழக அரசு தேவையான நடவடிக்கையை துரிதமாக முன்னெடுக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *