‘பன்முகத்தன்மையும், சகிப்புத்தன்மையும்தான் இந்தியாவின் ஆத்மா’ ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் பிரணாப் முகர்ஜி பேச்சு

Read Time:8 Minute, 57 Second

நாக்பூர்,

ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, மக்கள் மகிழ்ச்சியாக இருந்தால்தான் அரசன் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்று குறிப்பிட்டார்.

மராட்டிய மாநிலம், நாக்பூரில் நடக்க உள்ள ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பயிற்சி முகாம் நிறைவு விழாவில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்துக்கொள்கிறார் என அறிவிக்கப்பட்டதும் காங்கிரஸ் மத்தியில் சலசலப்பு நேரிட்டது.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், பாரதீய ஜனதா கட்சியும் வெறுப்புணர்வு கொள்கையை பின்பற்றுவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டுகிற நேரத்தில், அந்தக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் பங்கேற்று என்பது காங்கிரசுக்கு சங்கடமான நிலையை ஏற்படுத்தியது. இருப்பினும் காங்கிரஸ் தலைமை அமைதி காத்தது.
காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துக்கொள்ள வேண்டாம் என்று பிரணாப் முகர்ஜிக்கு கடிதம் எழுதினார்கள்.
நாக்பூரில் பேசுவேன்

பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் பிரணாப் முகர்ஜி, என்ன பேச வேண்டுமோ, அதனை நாக்பூர் ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் பேசுவேன் என்றார்.

பெங்காலி செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் கலந்துக்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடிதங்கள் வருவதை ஒப்புக்கொண்டார். “நான் என்ன பேச வேண்டுமோ, அதனை நாக்பூரில் பேசுவேன். எனக்கு பல்வேறு கடிதங்கள் வந்து உள்ளது, தொலைபேசி அழைப்புக்கள் வந்து உள்ளது, ஆனால் அவைகளுக்கு இதுவரையில் பதிலளிக்கவில்லை,” என்றார்.

மகள் எதிர்ப்பு

பிரணாப் முகர்ஜி ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு அவரது மகள் சர்மிஸ்தா முகர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்து டுவிட்டரில் செய்தி வெளியிட்டார்.

அதில், பிரணாப் முகர்ஜி நாக்பூர் செல்வதால் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக தவறான கதைகளை கட்டவிழ்த்து விடும். பிரிவினைவாத அமைப்பு தங்கள் கொள்கைகளை நீங்கள் (பிரணாப் முகர்ஜி) ஏற்றுக் கொண்டு விட்டதாக விஷம பிரச்சாரம் செய்யும். அதனால் தான் நீங்கள் அங்கு செல்வதை நாங்கள் எதிர்க்கிறோம். ஏற்கெனவே சில வதந்திகள் கிளம்பி விடப்பட்டது. அடுத்தடுத்த நாட்களில் வேறு சில வதந்திகளும் வரலாம். நான் பா.ஜனதாவில் சேரப்போவதாக வதந்தி கிளப்புகிறார்கள். காங்கிரஸ் கட்சியில் இருப்பதால் தான் நான் அரசியலிலேயே இருக்கிறேன். அப்படி காங்கிரஸை விட்டு வெளியேறும் சூழல் ஏற்பட்டால், நான் அரசியலை விட்டே வெளியேறி விடுவேன் என்று குறிப்பிட்டார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் “பிரணாப் முகர்ஜியிடம் இதனை நான் எதிர்பார்க்கவில்லை,” என்று டுவிட்டரில் தெரிவித்தார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் நம்பிக்கைகுரியவரான அகமது படேல் கருத்து தெரிவித்த நிலையில், பிரணாப் முகர்ஜிக்கு எதிராக டுவிட் செய்ய சோனியா உத்தரவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பிரணாப் முகர்ஜி பேச்சு

காங்கிரஸ் தலைவர்கள் எதிர்ப்பையும் மீறி முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, தலைமை விருந்தினராக கலந்துக்கொண்டார். என்ன பேச வேண்டுமோ, அதனை நாக்பூர் ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் பேசுவேன் என பிரணாப் முகர்ஜி கூறியிருந்ததால், அவருடைய பேச்சு மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் பேசிய பிரணாப் முகர்ஜி, ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் பேசிய பிரணாப் முகர்ஜி ‘பன்முகத்தன்மையும், சகிப்புத்தன்மையும்தான் இந்தியாவின் ஆத்மா’ என குறிப்பிட்டார்.

  • ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக பொது வாழ்வில் இருப்பதால் சொல்கிறேன், பன்மைத்துவம், சகிப்புத்தன்மை, பல கலாசாரங்களின் கலப்பு, பல மொழிகள், இவையெல்லாம்தான் நம் தேசத்தின் ஆன்மா.
  • இந்தியா பொருளாதார ரீதியாக வேகமாக வளர்ந்து வரலாம். ஆனால், மகிழ்ச்சி குறியீட்டு தரவரிசையில் அது கீழே உள்ளது. மக்கள் மகிழ்ச்சியாக இருந்தால்தான் அரசன் மகிழ்ச்சியாக இருக்க முடியும்.
  • நம்மிடம் ஏராளமான வேற்றுமைகள் இருந்தாலும், நாம் அனைவரும் பாரத தாயின் பிள்ளைகள்தான் என்று சிறப்பித்து குறிப்பிட்டார்.

இந்தியாவின் பார்வையில் தேசம், தேசியவாதம் மற்றும் தேசபக்தி ஆகியவற்றின் கருத்தாக்கங்கள் தொடர்பாக என்னுடைய புரிதல்களை உங்களுடன் பகிர்ந்துக்கொள்வதற்காக நான் இங்கு வந்து உள்ளேன். ஒரு தேசம் என்பது பெருவாரியான மக்கள் ஒரே மொழி, பாரம்பரியத்தை பகிர்ந்து கொள்ளுவது. தேசியவாதம் என்பது ஒருவருடைய தேசம் என்னவென்பதை வெளிப்படுத்துகிறது. தேசபக்தி என்பது தாய்நாட்டின் மீது கொண்ட பக்தியென வரையறுக்கப்படுகிறது. ஆனால் நம்முடைய சகிப்புத்தன்மையில் இருந்து நம்முடைய வலிமை உருவாகிறது.

நம்முடைய பன்முகத்தன்மைக்கு மதிப்பளிக்க வேண்டும், கொண்டாடவேண்டும். நம்முடைய (இந்தியா) தேசத்தின் அடையாளம் என்பது நீண்ட வரலாறு கொண்டது, பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் நம்பிக்கைகள் நம்மை தலைச்சிறந்தவர்களாக்கி உள்ளது, சகிப்புத்தன்மையை உருவாக்கி உள்ளது.

சகிப்புத்தன்மையின்மை மட்டுமே நம்முடைய தேசிய அடையாளத்தை நீர்க்கச்செய்யும். நம்முடைய தேசம் என்பதை மதம், மரபியல் அல்லது சகிப்புத்தன்மையின்மை என்பதன் மூலம் வரையறை செய்ய முயற்சி செய்தால், நம்முடைய அடையாளத்தை சீரழிக்கும். நம்முடைய தேசியவாதத்தை காந்திஜி பிரத்தியேகமானது அல்லது ஆக்கிரோஷமானது அல்லது அழிக்கக்கூடியது அல்ல என விளக்கிஉள்ளார். இந்தியாவின் முதல் பிரதமர் ஜவர்ஹலால் நேருவும் தேசியவாதம் என்ன என்பதை அவருடைய புத்தமான டிஸ்கவரி ஆப் இந்தியாவில் தெளிவாக விளக்கி உள்ளார்.

இந்தியாவில் இந்து, இஸ்லாமியம், சீக்கியம் மற்றும் பிற குழுக்களின் கருத்தியல் இணைப்பு என்பதில்தான் தேசியவாதம் வெளிப்படும் என்பதே என்னுடைய நம்பிக்கையாகும். ஜனநாயகம் என்பது நம்முடைய மிகவும் பொக்கிஷமான வழிக்காட்டியாகி உல்ளது. ஜனநாயகம் என்பது ஒரு பரிசு கிடையாது, புனிதமான வழிக்காட்டியாகும். இந்தியாவை சர்தார் படேல் ஒருங்கிணைத்தார், ஒற்றுமைபடுத்தினார். ஒவ்வொரு நாளும் நம்மை சுற்றிலும் வன்முறையானது அதிகரித்துவிட்டது என்பதை பார்க்கிறோம். வன்முறை என்பது இருளின் வடிவமாகும். நம்முடைய தாய்நாடு அமைதி, இணக்கம் மற்றும் மகிழ்ச்சியை கேட்கிறது என்று பேசினார் பிரணாப் முகர்ஜி.

முன்னதாக ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் ஹெட்கேவர் பிறந்த இடத்தை பார்வையிட்ட பிரணாப் முகர்ஜி, அங்கிருந்த பார்வையாளர்கள் பதிவேட்டில் “நான் இங்கு வந்திருப்பது இந்திய தாயின் தலைசிறந்த மகனுக்கு என் மரியாதையையும், அஞ்சலியையும் செலுத்ததான்” என்று எழுதி கையெழுத்திட்டு இருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *