சென்னை: உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் வெளிநாட்டவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் தனியார் மருத்துவமனைகள்

Read Time:11 Minute, 56 Second

“சென்னையில் தானம் செய்யப்படும் 4 இதயங்களில் 3 இதயங்கள் வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படுகிறது.” தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகள் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் இந்திய நோயாளிகளை புறந்தள்ளி வெளிநாட்டவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மோசடி வெளியாகி உள்ளது.

உடல் ஆரோக்கியமாக உள்ளவரோ, மரணம் அடைந்தவரோ, மூளைச் சாவடைந்து இறக்கும் தருவாயில் உள்ளவரோ தன்னுடைய உடல் உறுப்பையோ அல்லது உறுப்பின் ஒரு பகுதியையோ, அந்த உறுப்பு தேவையுள்ள ஒருவருக்கு வழங்கி அவர் உயிர்பிழைக்க உதவுவதே ‘உடல் உறுப்பு தானம்.’ ஆகும். உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்க ஆண்டுதோறும் ஏப்ரல் இறுதியில் ‘உடல் உறுப்பு தான விழா’ (National Organ Donation Awareness Week ) கடைப்பிடிக்கப்படுகிறது.

உடல் உறுப்புதானத்தில் தொடர்ச்சியாக கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தியாவிலேயே முதலிடம் பிடித்து தமிழகம் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக உள்ளது என்பது நாம் அனைவரும் பெருமைக்கொள்ளும் விஷயமாகும்.

உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வில் வடமாநிலங்களைவிட, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் அதிகரித்திருக்கிறது, இதில் தமிழகம் முக்கிய இடம் பிடிக்கிறது. இருப்பினும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காகக் காத்திருப்பவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது, தானம் செய்பவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது என்ற கவலையும் இருந்து வருகிறது. உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை இன்னும் அதிகரிக்க வேண்டும், அதற்கான ஊக்குவிப்பை முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் நிலையில், தானமாக வழங்கப்படும் உடல் உறுப்புகளும் வணிக நோக்கில் பயன்படுத்தப்படுவது தலை ஓங்கி நிற்பது மிகவும் வேதனைக்குரிய செய்தியாக உள்ளது.
இந்தியாவில் உடல் உறுப்புகளுக்காக நோயாளிகள் காத்திருக்கும் போது வெளிநாட்டவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு பரவலாக நிலவிய நிலையில் இப்போது அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது உடல் உறுப்புதானத்தில் முதலிடம் பிடித்துவரும் தமிழகத்தில் மோசடி நடைபெற்று உள்ளது. தனியார் மருத்துவமனைகள் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் இந்திய நோயாளிகளை புறந்தள்ளி வெளிநாட்டவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

உடல் உறுப்புகளுக்காக இந்தியர்கள் காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் நிலையில் வெளிநாட்டவர்கள் பயனடையும் வகையில் தமிழகத்தின் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைகள் செயல்பட்டிருப்பது என தெரிகிறது. தேசிய உறுப்பு மாற்று மற்றும் திசு மாற்று அமைப்பின் இயக்குநர் விமல் பந்தாரி, உடல் உறுப்புகள் ஒதுக்கீடு தொடர்பான வாட்ஸ் அப் குழுவில், தமிழகத்தில் உடல் உறுப்புகள் அறுவை சிகிச்சையில் மோசடி நடக்கிறது என்பதை பதிவிட்டு உள்ளார்.

“இந்தியனின் இதயம் இந்திய நோயாளிக்கு பொருந்தவில்லை ஆனால் வெளிநாட்டவருக்கு மட்டும் சரியாகப் பொருந்துகிறது என்பதை ஜீரணிப்பது கடினமாக உள்ளது. இது எப்படி சாத்தியமாகிறது… இது இந்தியர்களின் பணம் வெளிநாட்டவர்கள் பணத்துடன் பொருந்தவில்லை என்பதை காட்டுகிறது. நாம் மிகவும் பேராசை கொண்டவர்களாக உள்ளோம், ஏழை எளிய இந்திய நோயாளிகளுக்கு உதவாமல் வெளிநாட்டவருக்கு உதவுவது வருத்தமளிக்கிறது” என குறிப்பிட்டு உள்ளார்.

இந்த குழுவில் தமிழக உறுப்பு மாற்று மையத்தின் அதிகாரிகள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் அங்கீகரிக்கப்பட்ட உறுப்பினர்களும் இடம்பெற்று உள்ளனர். இந்தியாவில் உடல் உறுப்பிற்கு காத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும், பின்னர் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள், அதன்பின்னர் வெளிநாட்டு நோயாளிகள் என்று விதிமுறைகள் உத்தரவிடுகிறது. உடல் உறுப்புக்கான காத்திருப்போர் பட்டியல், உடல் உறுப்பு பெறுநரின் மருத்துவ நிலை மற்றும் பதிவு செய்த தேதியை அடிப்படையாக கொண்டு உள்ளது. முக்கியமாக
“சென்னையில் தானம் செய்யப்படும் 4 இதயங்களில் 3 இதயங்கள் வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படுகிறது,” என்று மருத்துவர் விமல் பந்தாரி கூறிஉள்ளார்.

மூளைச் சாவில் உயிரிழந்தவர்களின் உடல் உறுப்புக்கள் பொருத்தப்பட்ட வெளிநாட்டவர்கள் கார்போரெட் மருத்துவமனைகளிலே அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதனையடுத்தே விமல் பந்தாரி இத்தகவலை வெளியிட்டு உள்ளார். இதுதொடர்பாக தி இந்து விற்கு பேட்டியளித்து பேசி உள்ள விமல் பந்தாரி, “சென்னையில் வெளிநாட்டவர்களுக்கே இதயம் வழங்கப்படுவது தொடர்பான பின்னணியில் ஏதோ சதி இருக்கிறது.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின்போது முதலில் இந்தியருக்குத்தான் முக்கியத்துவம் அளிக்கப்படும். அவ்வாறு இந்தியர்கள் இல்லையென்றால், இந்திய வம்சாவளியினருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். பின்னர்தான் வெளிநாட்டவர்களுக்கு என்ற விதிமுறை உள்ளது.” என்று கூறியுள்ளார்.

மூளைச்சாவு அடைந்தவர்களிடம் தானமாக பெறப்படும் உடல் உறுப்புகள் வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது என்பதை மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சக அதிகாரிகள் கண்டுபிடித்து உள்ளார்கள். 2017-ல் தமிழகத்தில் இதய மாற்று அறுவை சிகிச்சையால் பயனடைந்தவர்களில் 25% பேரும், நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையில் பயனடைந்தவர்களில் 33% பேரும் வெளிநாட்டவர் என தெரியவந்து உள்ளது. சென்னையில் இவ்வாறு வெளிநாட்டவர்களுக்கு உடல் உறுப்புக்கள் வழங்கப்படுவதை அடுத்து, புதுடெல்லியில் சுகாதாரத்துறை டரக்டர் ஜெனரல் தலைமையில் அவசர கூட்டம் நடைபெற்று உள்ளது, அதில் வெளிநாட்டவர்களுக்கு உடல் உறுப்புகள் வழங்குவது தொடர்பாக கடுமையான விதிமுறைகள் உருவாக்கப்பட்டு உள்ளது.

கூட்டத்தில், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான கட்டணங்கள் சென்னையில் அதிகளவில் இருப்பதாகக் கணிக்கப்பட்டது. வெளிநாட்டவர் மட்டுமே செலவு செய்யக்கூடிய அளவுக்கு அந்தக் கட்டணம் இருப்பதும் கண்டறியப்பட்டது. இதனையடுத்தே, உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளில் இந்தியர்களே பயனடையும் வகையில் மாநில அரசுகள் கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது. மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சக அதிகாரிகள், இவ்விவகாரம் தொடர்பாக குழு ஒன்றை அமைத்து விசாரிக்க தமிழக உடல் உறுப்பு மாற்றுதல் ஆணையத்திற்கு அறிவுறுத்தி உள்ளனர்
புள்ளி விபரங்கள்

சென்னையில் 2017-ல் இதய மாற்று அறுவை சிகிச்சையால் பயனடைந்தவர்களில் 25% பேர் வெளிநாட்டவர்.

அதேபோல் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையில் பயனடைந்தவர்களில் 33% பேர் வெளிநாட்டவர். 2017-ல் நடைபெற்ற இதய மாற்று அறுவை சிகிச்சையில் 31 இதயங்கள் வெளிநாட்டவருக்கே பொருத்தப்பட்டுள்ளது. அதேபோல் 32 நுரையீரல் வெளிநாட்டவருக்குப் பொருத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் மருத்துவர்கள் 91 இதய மாற்று அறுவை சிகிச்சையையும், 75 நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையும், 6 இதய மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையும் மேற்கொண்டு உள்ளார்கள். ஜூன் 9-ம் தேதியின்படி 53 வெளிநாட்டவர்கள், 5,310 இந்தியர்கள் காத்திருப்போர் பட்டியலில் உள்ளார்கள்.

சேலம் மருத்துவமனை விவகாரம்

கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த மணிகண்டன் சென்னைக்குக் காரில் வந்தபோது மே 18-ம் தேதி விபத்தில் சிக்கிக் காயமடைந்தார். சேலம் விநாயக மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மணிகண்டன் மூளைச்சாவு அடைந்ததாக மே 22-ம் தேதி மருத்துவமனை நிர்வாகம் உறவினர்களிடம் தெரிவித்துள்ளது. மருத்துவ சிகிச்சை கட்டணமாக ரூ.3.25 லட்சத்தை செலுத்துமாறு கூறியுள்ளது. அதற்கு மணிகண்டன் உறவினர்கள் தங்களிடம் அவ்வளவு பணமில்லை எனத் தெரிவித்தனர்.

இதையடுத்து உடலுறுப்புத் தானம் வழங்கியதாகத் தங்களிடம் கட்டாயமாகக் கையொப்பம் வாங்கியதாகவும், உறுப்புக்களை எடுத்த பின்னரே உடலை ஒப்படைத்ததாகவும் கேரள முதல்வர் பினராய் விஜயனிடம் மணிகண்டனின் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். இதுதொடர்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதிய கேரள முதல்வர் பினராய் விஜயன், உடலுறுப்புகளை எடுத்த தனியார் மருத்துவமனை மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியிருந்தார். மணிகண்டனிடம் இருந்து எடுக்கப்பட்ட இதயமும், நுரையீரலும் சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதயம் உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவருக்கும், நுரையீரல் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்தவருக்கும் பொருத்தப்பட்டுள்ளது என பினராயி விஜயன் குறிப்பிட்டிருக்கிறார்.

இது தொடர்பாக டிஎஸ்பி தலைமையில் விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே சுகாதாரத் துறை டிரான்ஸ்டானின் (TRANSTAN) உறுப்பினர் செயலர் மருத்துவர் பி.பாலாஜியை விடுவித்தது. சொந்தக் காரணங்களுக்காக அவர் பதவியை ராஜினாமா செய்ததாக கூறப்பட்டது. இதுதொடர்பான கேள்விக்கு உடல் உறுப்புகள் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டே ஒதுக்கீடு செய்யப்படுகிறது என பாலாஜி கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *