கொலையாளி வேதாந்தா இந்தியாவைவிட்டே வெளியேற வேண்டும்… ஒடிசாவிலும் எதிர்ப்பு

Read Time:11 Minute, 49 Second

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை அடுத்து வேதாந்தாவிற்கு இரண்டாவது சவாலாக ஒடிசாவில் பழங்குடியின மக்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியேறும் வேதிக் கழிவுகளாலும், மாசடைந்த காற்றாலும் தங்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுவதாக சுற்றுவட்டார கிராம மக்கள் பல ஆண்டுகளாக குற்றம் சாட்டி வருகின்றனர். ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என வலியுறுத்தி, கடந்த 100 நாட்களுக்கும் மேலாக தூத்துக்குடி சுற்றுவட்டார கிராம மக்கள் போராடி வந்தனர். கடந்த 22-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவகத்தை நோக்கி பொதுமக்கள் பேரணியாகச் சென்றனர். அப்போது, போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் 13 பேர் பலியாகினர். இதனையடுத்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான அரசாணையை தமிழக அரசு பிறப்பித்தது.

ஒடிசா மாநிலம் லாங்கிகரில் உள்ள வேதாந்தாவின் அலுமினிய சுத்திகரிப்பு ஆலையை மூட வேண்டும் என பழங்குடியினர் மற்றும் சுற்றுசூழல் ஆர்வலர்கள் போர்க்கொடியை உயர்த்தியுள்ளனர்.

ஒடிசா மாநிலம் நியாம்கிரி மலைப்பகுதியில் பாக்ஸைட் தாதுவை வெட்டியெடுக்க வேதாந்தா மேற்கொண்ட முயற்சியை ஏற்கனவே
டோங்கரியா கோண்டு பழங்குடியினர், சுற்றுசுழல் ஆர்வலர்கள் தடுத்து நிறுத்தினார்கள். தொழிலதிபர் அனில் அகர்வாலுக்கு சொந்தமான வேதாந்தா ரிசோர்சஸ் நிறுவனம் பாக்ஸைட் தாதுவை வெட்டியெடுத்து லாங்கிகரில் உள்ள தனது அலுமினிய சுத்திகரிப்பு ஆலையில் சுத்திகரிக்க வேதாந்தா திட்டமிட்டிருந்தது. இதுதொடர்பான வழக்கு விசாரணையில் சுப்ரீம் கோர்ட்டு கிராம சபையின் முடிவுக்கு விட்டது. பாக்ஸைட் தாதுவை வெட்டியெடுக்க உள்ளூர் கிராம சபை அனுமதி மறுத்தது.
கிராமசபையின் கருத்தை மாநில அரசு மத்திய அரசுக்கு தெரிவித்தது. இதனடிப்படையில் சுற்றுச் சூழல் அமைச்சகம் அனுமதி மறுத்தது. பாக்ஸைட் சுரங்க விவகாரத்தில் வேதாந்தா முயற்சி 2013-ல் முடிவுக்கு வந்தது.

இப்போது பழங்குடியின மக்கள் அலுமினிய சுத்திகரிப்பு ஆலையை மூட வேண்டும் என்ற கோரிக்கையை முன்னெடுத்து உள்ளார்கள்.

தூத்துக்குடியில் உயிரிழந்த தியாகிகளுக்கு அஞ்சலி

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி மக்கள் போராட்டம் நடத்தியது ஒடிசா மாநில பழங்குடியின மக்களுக்கு புதிய உத்வேகத்தை கொடுத்து உள்ளது. அவர்கள் இப்போது அலுமினிய சுத்திகரிப்பு ஆலையை மூடவேண்டும் என்ற ஸ்திரமான நிலையை முன்னெடுத்து உள்ளனர். ஆலையை விரிவாக்கம் செய்ய ஸ்டெர்லைட் முயற்சிசெய்து வரும் நிலையில் அங்கு எதிர்ப்பு வலுத்து உள்ளது. லாங்கிகரில் உள்ள அலுமினிய சுத்திகரிப்பு ஆலைக்கு எதிராக ஜூன் 5-ம் தேதி உள்ளூர் மக்கள் பேரணியை மேற்கொண்டு உள்ளனர். நூற்றுக்கணக்கான பழங்குடியினர் கலந்துக்கொண்ட பேரணியில் பழங்குடியின தலைவர் லாடோ சிகாகா பேசினார்.

பழங்குடியின சமுதாயத்தை சேர்ந்த ஆண்கள் பாணியில் அவரது தோள் மீது கோடாரியை சுமந்துக்கொண்டு அவர் பேசுகையில்,

நியாம்கிரிக்காக நம்முடைய ரத்தத்தை நாம் சிந்துவோம், நாம் நியாம்கிரிக்காக உயிரிழக்கவும் தயாராக இருக்க வேண்டும்.

வேதாந்தாவால் சிலருக்கு மட்டும் வேலைவாய்ப்பை கொடுக்க முடியும், ஆனால் நியாம் ராஜா (பழங்குடியின இயற்கை தெய்வம்) நமக்கு தேவையான அனைத்தையும் கொடுக்கிறார். இறுதிவரையில் நம்முடைய போராட்டத்தை தொடர வேண்டும், தொடர்ச்சியாக போராட்டம் நடத்த வேண்டும், என உரையாற்றினார்.

அவருக்கு பின்னால் இருந்த போஸ்டரில் “சுற்றுசூழலை மாசுப்படுத்தும் மற்றும் கொலையாளி நிறுவனம் ஸ்டெர்லைட்டை இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும். தூத்துக்குடியில் உயிரிழந்த தியாகிகளுக்கு அஞ்சலி,” என்ற வாசகம் இடம்பெற்று இருந்தது.
சுரங்கம் அமையும் – வேதாந்தா

ஒடிசா அலுமினியம் சுத்திகரிப்பு ஆலைக்கு உள்ளூர் மூலப்பொருட்கள் கிடையாது. பெரும்பாலும் பிரேசில், ஜெனிவா இறக்குமதி செய்யப்படுகிறது. ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் இருந்தும் 275 கிலோ மீட்டர் தொலைவு ரெயிலில் எடுத்துச் செல்லப்படுகிறது.

டோங்கரியா கோண்டு பழங்குடியினர் மற்றும் பிற பழங்குடியினர் என அங்கு 16,000 பழங்குடியினர் வசிக்கலாம் என மதிப்பிடப்படுகிறது. அவர்களுடைய மொத்த அச்சமும் வேதாந்தா நிறுவனம் நியாம்கிரி மலையில் இருந்து பாக்ஸைடை எடுக்கும் திட்டத்தை மீண்டும் முன்னெடுக்கலாம் என்பதிலே உள்ளது. மலை சரிவுகளில் விவசாயம் செய்யும் டோங்கரியா மக்களுக்கு அவர்களுடைய ஆண் கடவுள் நியாம் ராஜாவின் வழித்தோன்றல்கள் என்றும், அவர்கள் வசிக்கும் மலையில் அவர்களுக்கு பிரத்யேக உரிமைகள் உள்ளது என்று நம்புகிறார்கள்.

வேதாந்தாவிற்கு எதிராக பழங்குடியின மக்கள் போராடுவதை ஜேம்ஸ் கேமரூனின் ஆஸ்கார் வென்ற “அவதார்” படத்துடன் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஒப்பிடுகிறார்கள். இயற்கையை நேசிக்கும், வணங்கும் மக்களுக்கான படமாக அமைந்த அவதார் படத்தில் மலைப்பகுதியில் உள்ள வளத்தை சுரண்ட அங்கிருக்கும் ஜீவராசிகளை மனிதன் அழிக்க துடிக்கும் காட்சியையும், ஜீவராசிகளின் போராட்டமும் வலுவாக காட்சிப்படுத்தப்பட்டது.

ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு வேதாந்தா நிறுவனத்தின் அதிகாரி பேசுகையில் நியாம்கிரி மலையில் சுரங்கம் அமைப்பது என்பது நீண்ட நாள் நோக்கம் என்பதை உறுதிசெய்து உள்ளார். அவர் பேசுகையில், “தொழிலில் பிரச்சனையை எதிர்க்கொள்ளதான் வேண்டியது இருக்கும். காட்டுப்பகுதியில் ஆலை அமைக்கப்பட்டதின் நோக்கமே பாக்ஸைடை எளிதில் பெற வேண்டும் என்பதற்காக மட்டும்தான்,” என கூறியுள்ளார். சிலநாட்களில் பாக்ஸைட் சுரங்கம் இங்கும் அமையும். டோங்கரியா பழங்குடியின மக்கள் வாய்ப்புகளை நாடுகிறார்கள், அவர்களில் ஒருபிரிவினர் முக்கியமான நகர்வில் இணைய விரும்புகிறார்கள் எனவும் குறிப்பிட்டு உள்ளார். இந்தியாவில் உள்ள மொத்த பாக்ஸைடில் 70 சதவிதம் ஒடிசாவில்தான் உள்ளது, இது உலகில் 5-வது அதிகமான அளவாகும்.

ஒடிசாவில் பாக்ஸைட் சுரங்கங்கள் அமைப்பது தொடர்பாக எந்தஒரு ஏலத்திலும் வேதாந்தா கலந்துக்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நியாம்கிரியில் இருந்து வளங்களை பெறமுடியும் என்று இன்னும் நிறுவனம் நம்புகிறதா? என்ற கேள்விக்கு வேதாந்தா பதிலளிக்கவில்லை என ராய்டர்ஸ் தெரிவித்து உள்ளது. நியாம்கிரி மலைப்பகுதியில் மட்டும் 88 மில்லியன் டன் பாக்ஸைட் உள்ளதாக மதிப்பிடப்பட்டு உள்ளது, இது வேதாந்தா நிறுவனத்திற்கு 17 ஆண்டுகளுக்கான மூலப்பொருட்களை பூர்த்தி செய்யக்கூடியது என கூறப்படுகிறது. இப்போது ஆலை ஆண்டுக்கு 5 மில்லியன் டன் மூலப்பொருட்களை நுகர்கிறது. ஒரு டன் அலுமினியத்திற்கு ஆலை 3 டன்கள் பாக்ஸைடை பெறுகிறது.

எத்தனை பேரை அவர்களால் கொல்ல முடியும்?

வேதாந்தா நிறுவனம் ஆண்டுக்கு 6 மில்லியன் டன்களை உற்பத்தி செய்யும் வகையில் ஆலையை விரிவாக்கம் செய்வதற்கு சுற்றுசுழல் மற்றும் பிற அனுமதிகளை பெற்று உள்ளது எனவும் அந்நிறுவன அதிகாரி கூறிஉள்ளார், அவருடைய பெயரை தெரிவிக்க விரும்பவில்லை.
கடந்த நிதியாண்டில் அலுமினிய சுத்திகரிப்பு ஆலை 1.2 மில்லியன் டன் அலுமினியத்தை உற்பத்தி செய்து உள்ளது, அதனுடைய தற்போதைய திறன் 2 மில்லியன் டன்கள். ஆலைக்கு எதிராக மக்கள் போராட்டம் மேற்கொள்ளும் நிலையில் இதுதொடர்பாக மத்திய சுற்றுசூழல் அமைச்சக செய்தித் தொடர்பாளர் பேச மறுத்துவிட்டார் எனவும் செய்தியில் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆலை லாங்கிரியில் மாசுபாடை ஏற்படுத்துகிறது என குற்றம் சாட்டப்படுகிறது. ஆலை விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பசுமை தீர்ப்பாயத்திலும் போராடப்படுகிறது.

ஆனால் ஆலையினால் மாசுபாடு எதுவும் கிடையாது என வேதாந்தா நிர்வாகம் மறுப்பு தெரிவிக்கிறது. மறுபுறம் ஆலையினால் இப்பிராந்தியத்தில் பல்வேறு நலத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகிறது எனவும் அரசு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் பழங்குடியின மக்கள் ஆலைக்கு கடும் எதிர்ப்பை தெரிவிக்கிறார்கள், 5-ம் தேதி போராட்டத்தில் கலந்துக்கொண்ட பெண் ஒருவர் பேசுகையில்,

தூத்துக்குடியில் பொதுமக்கள் கொல்லப்பட்டது தொடர்பான செய்தியை ரேடியோவில் கேட்டதும், போராட்டத்தில் கலந்துக்கொள்ள காட்டுவழியாக 5 கிலோ மீட்டர் நடந்தே வந்தேன்,” என கூறியுள்ளார். “அவர்கள் ஆலையை விரிவாக்கம் செய்யவும் அனுமதிக்க மாட்டோம், நியாம்கிரியில் சுரங்கம் அமைக்கவும் விட மாட்டோம், எத்தனை பேரை அவர்களால் கொல்ல முடியும்?” என திரிஞ்சு குருசுகா கேள்வி எழுப்பி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *