அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 30 பொருட்களுக்கு இந்தியா அதிரடியாக கூடுதல் வரிவிதிப்பை விதித்துள்ளது.
அமெரிக்காவில் டொனால்டு டிரம்ப் ஆட்சிக்கு வந்தபின்னர் அதிரடி நடவடிக்கையை முன்னெடுத்து வருகிறார். டிரம்ப் நிர்வாகம், கனடா, மெக்சிகோ நாடுகளில் தவிர மற்ற நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் முக்கிய பொருட்களுக்கான வரி விகிதத்தை கடுமையாக உயர்த்தி வருகிறது. வர்த்தகம் தொடர்பான அவருடைய நகர்வில் முதலில் சிக்கியது சீனா. வல்லரசு நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே நிலவி வந்த பனிப்போர், இப்போது வர்த்தகப் போராகி உள்ளது.
அமெரிக்கா விதித்த வரியை ஈடு செய்யும் வகையில் அதேபாணியில் சீனாவும், அமெரிக்க பொருட்களுக்கு வரியை அதிகரித்து வருகிறது.
இப்போது இவ்வரிசையில் இந்தியாவும் இணைந்துள்ளது. அண்மையில் அமெரிக்காவின் டிரம்ப் அரசு இறக்குமதி செய்யும் உருக்கு மற்றும் அலுமினிய பொருட்கள் மீதான வரியை 241 மில்லியன் டாலர்கள் அளவிற்கு (சுமார் ரூ.1,600 கோடி) அதிகரித்தது. இது, இந்தியாவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் நிலையை உருவாக்கியது. இதனை ஈடுசெய்யும் வகையில் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரிவிதிப்பை அதிகரிக்க இந்திய அரசு முடிவு செய்தது. அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மோட்டார் சைக்கிள், இரும்பு மற்றும் உருக்கு பொருட்கள், போரிக் அமிலம், பாதாம்கள், வால்னட்கள், ஆப்பிள்கள் என 30 வித பொருட்களுக்கு கூடுதல் சுங்கவரியை விதிக்க முடிவு செய்தது. 800 சிசிக்கு அதிகமான எஞ்ஜின் திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களுக்கு வரி விதிப்பு 50%ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது, மற்ற பொருட்கள் மீதான வரிவிதிப்பு 20-25% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு எடுத்துள்ள சுங்க வரி உயர்வு பற்றிய தகவலை பட்டியலாக உலக வர்த்தக அமைப்பிடம் தாக்கல் செய்து உள்ளது.
1994–ம் ஆண்டு உலக நாடுகள் இடையே செய்து கொள்ளப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தின்படி உலகளாவிய வர்த்தகம் தொடர்பாக எடுக்கப்படும் முடிவுகள் உலக வர்த்தக அமைப்பிடம் தெரிவிக்கப்படவேண்டும், அதன்படி இந்தியா தன்னுடைய பட்டியலை தாக்கல் செய்தது. அலுமினியம், ஸ்டீல் பொருட்களுக்கான இந்திய ஏற்றுமதி தீர்வை உயர்வினால் அமெரிக்கா கிட்டத்தட்ட 241 மில்லியன் டாலர்கள் கூடுதல் வருவாய் ஈட்டுகிறது, அந்த இழப்பை சரிகட்டவே தற்போது 30 அமெரிக்கப் பொருட்கள் மீது வரிக்கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த கூடுதல் வரிவிதிப்பு ஜூன் மாதம் 21-ம் தேதியிலிருந்து அமலுக்கு வருகிறது.
மத்திய வர்த்தக துறை மந்திரி சுரேஷ் பிரபு வெள்ளிக்கிழமை அமெரிக்காவில் இருந்து திரும்பிய நிலையில் இந்திய தரப்பு நடவடிக்கை செய்தி வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் இருந்து திரும்பிய சுரேஷ் பிரபு, அமெரிக்கா மேற்கொண்டு நடவடிக்கையை முன்னெடுக்க உள்ளது என்றால், பேச்சுவார்த்தைக்கு சம்மதித்து இருக்காது, நாமும் அதனை செய்யமாட்டோம். உடனடியாக பதிலடி நடவடிக்கையை மேற்கொள்வதற்கு முன்னதாக நாங்கள் பேச்சுவார்த்தையை நடத்தி அதன்மூலம் தீர்வு காண முடிவு செய்து உள்ளோம் என்று கூறியிருந்தார். ஆனால் உலக வர்த்தக அமைப்பில் பரிந்துரை அறிக்கையை சுரேஷ் பிரபு அமெரிக்கா பேச்சுவார்த்தைக்கு முன்னதாகவே 13-ம் தேதியே சமர்பிக்கப்பட்டு உள்ளது. இப்போதைய நிலையில் இந்தியா மற்றும் அமெரிக்காவிற்கும் இடையில் ஏற்பட்டுள்ள இவ்விவகாரத்தை வர்த்தகப்போராக பார்க்ககூடாது எனவும் வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.