ஜம்மு காஷ்மீரில் ஆட்சி கவிழ்ந்தது; சூறையாடிவிட்டு வெளியேறுவதா? பாரதீய ஜனதாவிற்கு கேள்வி

Read Time:6 Minute, 59 Second
Page Visited: 60
ஜம்மு காஷ்மீரில் ஆட்சி கவிழ்ந்தது; சூறையாடிவிட்டு வெளியேறுவதா? பாரதீய ஜனதாவிற்கு கேள்வி

ஜம்மு காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சி – பா.ஜனதா கூட்டணி ஆட்சி முடிவுக்கு வந்தது. பயங்கரவாதம் வளர்கிறது என குற்றம் சாட்டி இப்போது எழுந்துள்ள அமைதியற்ற நிலையில் தன்னை காப்பாற்றிக்கொள்ளும் வகையில் பா.ஜனதா வெளியேறியுள்ளது.

2014 இறுதியில் ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் மக்கள் ஜனநாயக கட்சி – பா.ஜனதா கூட்டணி ஆட்சி அமைந்தது. கொள்கையின் அடிப்படையில் இருகட்சிகளுக்கும் ஒற்றுமை கிடையாது என்றாலும் கூட்டணி ஆட்சி 2015-ல் தொடங்கியது. கூட்டணிக்கான அடிப்படை புரிந்துணர்வு என்ன? என்ற கேள்வியை எழுப்பிய எதிர்க்கட்சிகள் தரப்பில் சந்தர்ப்பவாத கூட்டணி என விமர்சனம் செய்யப்பட்டது. கூட்டணி ஆட்சி அமைந்த பின்னர் இருகட்சிகளின் செயல்பாட்டில் ஒற்றுமை காணப்படவில்லை என்றாலும், ஆட்சி தொடர்ந்தது.

பயங்கரவாதத்திற்கு எதிரான வேட்டையிலும் இருகட்சிகள் இடையில் கருத்து வேற்றுமை காணப்பட்டது.

இந்நிலையில் ரமலான் மாதத்தில் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்திற்கு எதிரான ஆப்ரேஷனை மத்திய அரசு நிறுத்தியது. ஆனால், ரமலான் மாதம் முடிந்ததும் மீண்டும் ஆப்ரேஷன் தொடங்கும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதனையடுத்து விரிசல் மேலும் அதிகரித்தது. பிரிவினைவாதிகளுடன் அரசு பேச்சுவார்த்தையை முன்னெடுக்க வேண்டும் என்று மக்கள் ஜனநாயக கட்சி வலியுறுத்தியது. ஆனால் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட நேரம் முடிந்துவிட்டது முடியாது என மத்திய அரசு கூறிவிட்டது.

ரமலான் மாதத்தில் அறிவிக்கப்பட்ட சண்டை நிறுத்தத்தை நீட்டிக்க மக்கள் ஜனநாயக கட்சி வலியுறுத்தியதும் கூட்டணி முடிவுக்கு வந்தது.

மெகபூபா முப்திக்கு கொடுத்த ஆதரவை பா.ஜனதா விலக்கியது. இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்ட பா.ஜனதா தலைவர் ராம் மாதவ், பள்ளத்தாக்கு பகுதியில் பயங்கரவாதம், வன்முறை மற்றும் பயங்கரவாதமாதல் ஆகியவை அதிகரித்துள்ளது. மக்களின் அடிப்படை உரிமை மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. பத்திரிக்கையாளர் சுஜாத் புகாரி சுட்டுக்கொல்லப்பட்டது இதற்கு உதாரணமாகும். மாநிலத்தில் ஆட்சி ஆளுநர் வசம் ஒப்படைக்கப்படும் என்று கூறியுள்ளார். மக்கள் ஜனநாயக கட்சியின் மீது குற்றம் சாட்டி வெளியேறியது பா.ஜனதா.

இதனையடுத்து சிறிதும் தாமதிக்காமல் முதல்-மந்திரி மெகபூபா முப்தி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.

பலப்பிரயோகம் தீர்வாகாது

இதனையடுத்து பேசிய மெகபூபா முப்தி பேசுகையில் ‘காஷ்மீர் பிரச்சினைக்கு பலப்பிரயோகம் தீர்வாகாது’ என்று கூறினார்.

பா.ஜனதா வெளியேறியது ஒன்றும் அதிர்ச்சியளிக்கவில்லை. நான் ஆளுநரிடம் வேறு எந்த கூட்டணிக்கும் முயற்சி செய்யப்போவதில்லை என்று கூறிவிட்டேன். நான் எப்போதுமே கூறிவருவது ஒன்றுதான்,

ராணுவக் கொள்கை ஜம்மு காஷ்மீரில் ஒரு போதும் பயனளிக்காது என்பதுதான். சமரசம்தான் தீர்வு. இது பகைவர்கள் பிரதேசமல்லவே.

அதிகாரத்துக்காகக் நாங்கள் கூட்டணி அமைக்கவில்லை, இந்த கூட்டணிக்கு போர்நிறுத்தம் என்ற மிகப்பெரிய நோக்கு இருந்தது” என்றார் மெகபூபா முப்தி.

சூறையாடிவிட்டு வெளியேறுவதா?

காஷ்மீரில் அமைதியற்ற நிலை மோசமாகியுள்ள நிலையில் மக்கள் ஜனநாயக கட்சியின் மீது குற்றம் சாட்டி பா.ஜனதா வெளியேறுவதை டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சனம் செய்துள்ளார்.

‘‘மக்களின் விருப்பத்திற்கு எதிராக காஷ்மீரில் பா.ஜனதா கூட்டணி ஆட்சியை அமைத்தது. ஆனால் தற்போது காஷ்மீரை சூறையாடிவிட்டு, கூட்டணி அரசில் இருந்து வெளியேறியுள்ளது. பணமதிப்பு நீக்கத்தால், காஷ்மீரில் தீவிரவாதத்தை ஒழித்து விட்டதாக பிரச்சாரம் செய்ததே? பிறகு ஏன் கூட்டணியில் இருந்து வெளியேறினீர்கள்’’என்று கெஜ்ரிவால் கேள்வியை எழுப்பினார்.

மத்திய பா.ஜனதா அரசு பண மதிப்பிழப்பு நடவடிக்கையை பெரிதும் கொண்டாடி வருகிறது. ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்தை ஒழிக்க இது பயனாக இருந்தது என்றெல்லாம் கூறியது. இதனை குறிப்பிட்டு ஆம் ஆத்மி விமர்சனம் செய்து உள்ளது.

ஜம்மு காஷ்மீரில் பிரச்சனையை முதலில் இருந்தே மத்திய பா.ஜனதா அரசு அரசியல் பிரச்சனையாக பார்ப்பதை தவிர்த்தது என்ற குற்றச்சாட்டு இருந்து வந்தது. மத்திய பா.ஜனதாவின் நகர்வு விமர்சனம் செய்யப்பட்டது. இந்நிலையில் கூட்டணி முடிவுக்கு வந்துள்ளது. இப்போது காஷ்மீரில் நிலையை சரிசெய்ய பாதுகாப்பு படைகளை பிரயோகம் செய்வதை தவிர்த்து வேறு ஏதாவது நகர்வுக்கு அக்கட்சியிடம் திட்டம் உள்ளதா? இல்லை 2019 பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிக்கான ஒரு வியூகமாக மீண்டும் காஷ்மீரை பயன்படுத்த விரும்புகிறதா? என்ற கேள்விகள் எழுந்துள்ளது.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *