‘பசுமையை அழிக்கும் சாலை’ சென்னை – சேலம் பசுமைவழிச் சாலை – ஒருபார்வை!

Read Time:9 Minute, 35 Second

காடுகள், மலைகள், விளைநிலங்கள், வனப்பகுதிகள் போன்ற இயற்கை வளங்களை அளித்து 8 வழி பசுமைவழிச் சாலை அமைக்கப்படுவதற்கு விவசாயிகள் மற்றும் சுற்றுசூழல் ஆர்வலர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது.

  • இந்தியாவில் அமையும் 2-வது பசுமைவழிச் சாலை சென்னை – சேலம் இடையிலான விரைவுச் சாலையாகும். ஏற்கெனவே மராட்டிய மாநிலத்தில் மும்பை முதல் புனே வரையில் தேசிய பசுமை வழிச் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இப்போது சென்னை – சேலம் சாலை ஒரு சில இடங்களில் 8 வழிச்சாலையாகவும், சில இடங்களில் 6 வழிச்சாலையாகவும் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. மதிப்பீடு ரூ.10 ஆயிரம் கோடியாகும்.
  • இப்போது சென்னையில் இருந்து சேலம் செல்ல 3 வழிகள் உள்ளன. சென்னை, செங்கல்பட்டு, திண்டிவனம், விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி, ஆத்தூர் வழியாக சேலம் செல்லாம். சென்னையில் இருந்து பூந்தமல்லி, வேலூர், வாணியம்பாடி, திருப்பத்தூர், ஊத்தங்கரை, அரூர் வழியாக சேலம் செல்லலாம். சென்னையில் இருந்து பூந்தமல்லி, வேலூர், வாணியம்பாடி, பர்கூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி வழியாகவும் சேலம் செல்லலாம்.
  • சென்னை -சேலம் இடையிலான பயணத் தூரம் தற்போது சென்னை- சேலம் இடையே 340 கிலோமீட்டர் தூரமாக உள்ளது. பசுமை விரைவு சாலை 277 கிலோமீட்டர் தூரம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த பசுமை சாலை அமைக்கப்படுவதால், சென்னை -சேலம் இடையிலான பயணத் தூரமும், நேரமும் வெகுவாகக் குறையும். அதாவது, சேலத்தில் இருந்து சென்னைக்கு 3 மணி நேரத்தில் பயணம் செய்யும் வகையில் சாலை வசதிகள் மேம்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • பசுமைவழிச் சாலை சென்னை, காஞ்சீபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி வழியாக சேலம் செல்கிறது. சென்னை முதல் அரூர் வரையிலான தேசிய பசுமைச் சாலை 179 -பி எனவும், அரூர் முதல் சேலம் வரையிலான பசுமைச் சாலை 179 -ஏ என்றும் குறிப்பிடப்படவுள்ளது. இந்தச் சாலையானது காஞ்சிபுரம் மாவட்டத்தில் 59 கி.மீ., தூரமும், திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு, வந்தவாசி, போளூர், ஆரணி, செங்கம் பகுதியில் 122 கி.மீ., தொலைவும் அமைய உள்ளது. இதேபோன்று, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2 கி.மீ., தூரமும், தருமபுரி மாவட்டத்தில் தீர்த்தமலை, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி வழியாக 53 கி.மீ., தொலைவும், சேலம் மாவட்டத்தில் 38 கி.மீ., தூரமும் அமைய உள்ளது.

  • பசுமைவழிச் சாலை அமைக்கும் பணியால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் செங்கல்பட்டு வனக்கோட்டத்தில் சிறுவஞ்சூர், ஆரணியில் நம்பேடு, சாத்தனூரில் பிஞ்சுர், திருவண்ணாமலையில் சொரக்களத்தூர்,  போளூரில் அல்லமங்கலம், செங்கத்தில் முன்னாமங்கலம், ஆனந்தவாடி, ராவந்தவாடி, தீர்த்தமலையில் பூவாம்பேட்டை, பூவாம்பேட்டை பிரிவு,  அரூரில் பள்ளிப்பேட்டை, சேலம் மாவட்டத்தில் சேர்வராயன் வனக்கோட்டத்தில் உள்ள மஞ்சவாடி, சருகுமலை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் உள்ள மரங்கள் அழிக்கப்படவுள்ளதாகச் சொல்லப்படுகிறது. மொத்தம் உள்ள 274.3 கிலோமீட்டர் தொலைவில் 23 கிலோமீட்டர் தூரம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் இந்தச் சாலை அமைக்கப்பட உள்ளது.
  • பசுமைவழிச் சாலை திட்டம் 120 ஹெக்டேர் வனப்பரப்பை பாதிக்கும், அடர்காடுகளில் மீட்க முடியாத பாதிப்பை ஏற்படுத்தும். 7 ஆறுகள் வழியாகவும் சாலை செல்கிறது. இதனால் ஆயிரக்கணக்கான வனவிலங்குகள், அரிய வகை பறவைகளின் புகலிடமான வனத்தை அழித்து சாலை அமைக்கவும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
  • திட்டத்தை முன்னெடுப்பதற்கான சாத்தியம் தொடர்பான அறிக்கையின்படி 5 மாவட்டங்களில் 2,791 ஹெக்டேர் நிலங்களை கையகப்படுத்த வேண்டும். இதில் 1,229 ஹெக்டேர் திருவண்ணாமலை மாவட்டத்தில் இடம்பெறுகிறது. சாலை 159 கிராமங்கள் வழியாக விவசாய நிலங்களில் செல்கிறது. 600 முதல் 700 கிணறுகளும் பாதிப்பை சந்திக்கிறது. சுற்றுசுழல் ஆர்வலர்கள், விவசாயிகள் பசுமைவழிச் சாலை திட்டம் தொடர்பாக அச்சம் தெரிவிக்கிறார்கள். கிராம மக்களின் வாழ்வாதாரம், விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் நிலையில் மக்களை அரசு ஆலோசிக்கவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது.
  • தற்போது முதல்கட்டப் பணிகளாக, பசுமைவழிச் சாலை செல்லும் பகுதிகளில் குறுக்கிடும் கிராமச் சாலை ஓரங்களில், கான்கிரீட்டால் அளவு கல்கள் அமைக்கப்படுகிறது. விவசாய நிலங்களில் நிலத்தை அளவீடு செய்து எல்லைக்கல் (முட்டுக்கல்) நடும் பணி போலீஸ் பாதுகாப்புடன் நடக்கிறது. பசுமைவழிச் சாலை அமைப்பதற்து பல்வேறு கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படும். அதே போன்று பல்வேறு பகுதிகளில் உள்ள பலரது வீடுகளும் இடிக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது. திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த முதல் கட்ட பணியை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொடங்கி உள்ளனர்.
  • நிலங்கள் கையகப்படுத்துவதால் விவசாயம், கால்நடை வளர்ப்பு, விவசாய உற்பத்தி, விவசாயம் சார்ந்த தொழில்கள் பெரிதும் பாதிக்கப்படும். விவசாயத்தை அடிப்படையாக கொண்ட மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கும். அரசு வழங்கும் நிவாரணத் தொகை அவர்களுடைய தேவையை பூர்த்தி செய்யுமா? என்றால் கேள்விக்குறியாது. நிலங்களுக்கு அதிகாரிகள் செல்லும்போது விவசாயிகள், பெண்கள் அழுது கண்ணீர் விடுதவை பார்க்கையில் வேதனை நெஞ்சை பிளக்கிறது. தாங்கள் வளர்த்த தென்னை, மா என மரங்களை பேசும் அவர்கள், இவை அனைத்தையும் அழியவிடமாட்டோம் என்கிறார்கள். தரைமட்டமாக்கிய மலைகளை ஒருபோதும் உருவாக்க இயலாது. விவசாய நிலங்களை உருவாக்க முடியாது உழும் நிலம், கைவிட்டுப் போனால் உயிரை விட்டு விடவேண்டியதுதான் என்ன சொல்ல முடியாத துயரத்தில் வேதனையில் ஆழ்ந்துள்ளார்கள்.
  • இந்த பசுமை விரைவுச்சாலை அமைக்க சுமார் 1,900 ஹெக்டேர் நிலம் மட்டுமே கையகப்படுத்தப்படும். இதில் 400 ஹெக்டேர் நிலம் அரசு புறம்போக்கு நிலங்கள் ஆகும். வனப்பகுதிக்குள் செல்லும் போது சுரங்கம் அமைக்கப்படும். இம்மாவட்டங்களை சேர்ந்த அனைவரும் சாலையை பயன்படுத்தலாம். நாங்கள் எந்தஒரு தனியாருக்காகவும் சாலையை அமைக்கவில்லை. அனைவருக்காகவும்தான் இத்திட்டம் முன்னெடுக்கிறப்படுகிறது, திட்டத்தை முடிப்பதில் அரசு உறுதியாக உள்ளது என முதல்-அமைச்சர் பழனிசாமி சட்டசபையில் தெரிவித்தார்.

இயற்கைக்கும், வேளாண்மைக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வேளையில் இயற்கை சார்ந்து வாழும் நாம் விவசாயத்தை தொலைத்தால் எதிர்கால சந்ததியின் நிலை என்னாவது? என்று விவசாயிகள் கேள்விகளுக்கு பதில் கிடையாது. வாழ்வாதாரம் நசுக்கப்படுமோ? என்ற கேள்வியுடன் ஒவ்வொரு நாளும் வாழ்க்கையை நகர்த்தும் விவசாயிகள் ஏற்கனவே இருக்கும் சாலைகளை அகலப்படுத்த நினைப்பதை விட்டுவிட்டு மலைகளை விவசாய நிலங்களை அழிப்பது நியாமா? என்ற கேள்வியையும் எழுப்புகிறார்கள். வளர்ச்சியென்ற பெயரில் அழிவை சந்திக்கும் நிலையில் சுற்றுசூழலை பாதுகாப்போம் என்ற விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.

தொழில் வளர்ச்சியென்ற பெயரில் மனிதன் முதல் அனைத்து ஜீவராசிகளும் உயிர்வாழ அடிப்படையாக இருக்கும் சுற்றுசூழலை அளிப்பதை நியாயப்படுத்த முடியாது. விவசாயிகளை பொருத்தமட்டில் பசுமைவழிச் சாலை பசுமையை அழிக்கும் சாலை மட்டுமே!

One thought on “‘பசுமையை அழிக்கும் சாலை’ சென்னை – சேலம் பசுமைவழிச் சாலை – ஒருபார்வை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *