இந்திய ரூபாயை ரொக்கப் பணமாக கையில் வைக்காதீர்! பூடான் ரிசர்வ் வங்கி எச்சரிக்கை

Read Time:3 Minute, 18 Second

புதுடெல்லி,

இந்திய ரூபாயை ரொக்கப் பணமாக கையில் வைக்காதீர் என பூடான் நாட்டு மக்களை அந்நாட்டு மத்திய வங்கி எச்சரித்துள்ளது.

இந்தியாவின் அண்டைய நாடுகளான நேபாளம் மற்றும் பூடானில் இந்திய ரூபாய் நோட்டுகள் எந்த தடையுமின்றி பயன்படுத்தப்படுகிறது.

கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி நாடு முழுவதும் உயர் மதிப்புடைய ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுகள் மதிப்பிழப்பதாக மத்திய அரசு அறிவித்தது. கருப்புப்பணத்தை ஒழிக்கும் விதமாக மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் நேபாளம் மற்றும் பூடானில் குழப்பமான நிலை ஏற்பட்டது. பொதுமக்கள் ரூபாய் நோட்டுக்களை மாற்ற முடியாத தவித்தார்கள். இந்திய ரூபாயை மாற்ற முடியாத நிலை ஏற்பட்டது. வங்கிகளில் ரூபாய் நோட்டுகளை பெரும் போராட்டத்திற்கு பின்னர் டெபாசிட் செய்தார்கள். இந்த அனுபவம் காரணமாக இந்திய ரூபாயை ரொக்கப் பணமாக கையில் வைக்காதீர் என பூடான் நாட்டு மக்களை அந்நாட்டு மத்திய வங்கி எச்சரித்துள்ளது.
பூடான் மத்திய வங்கியான ராயல் மானிட்டரி அத்தாரிட்டி (ஆர்எம்ஏ) “இந்திய ரூபாய் நோட்டுக்களை கையில் வைத்திருப்பதற்கு பதிலாக பொதுமக்கள் தங்களுடைய வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்துவிடுங்கள்,” என எச்சரிக்கை விடுத்துள்ளது.

ராயல் மானிட்டரி அத்தாரிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய ரூபாயை ரொக்கமாக கையில் வைத்து செலவு செய்வதையும் சேமித்து வைப்பதையும் தவிர்த்துவிடுங்கள். 2016-ம் ஆண்டு இந்திய அரசு மேற்கொண்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கை போன்று மீண்டும் எதிர்காலங்களில் ஏதேனும் கொண்டுவரப்பட்டால், மக்கள் கையில் வைத்திருக்கும் இந்திய ரூபாய்க்கு பூடான் ரிசர்வ் வங்கி பொறுப்பேற்காது. இந்திய அரசின் 500 ரூபாய் நோட்டுகளில் கள்ளநோட்டுகள் அதிகமாக புழங்கும் காரணத்தினால் 500 ரூபாய் நோட்டுகளை வாங்கும் போது மிகுந்த கவனத்துடன் செயல்படுங்கள். இந்திய 500 ரூபாய் நோட்டுகளை ரூ.25 ஆயிரத்துக்கு மேல் அதிகமாக வெளியே எடுத்து செலவு செய்ய வேண்டாம், சேமிக்கவும் வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே இந்திய ரிசர்வ் வங்கி ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்போகிறதா? என்பது தெரியவில்லை. இந்திய ரூபாயை நோட்டுக்கள் தொடர்பாக பூடான் வங்கியின் அறிக்கை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும் என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *