பாரதீய ஜனதாவை போன்று நாங்கள் ஒன்றும் பயங்கரவாத இயக்கம் கிடையாது – மம்தா அட்டாக்!

Read Time:3 Minute, 10 Second

கொல்கத்தா,

பாரதீய ஜனதா கட்சியை போன்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஒன்றும் பயங்கரவாத இயக்கம் கிடையாது என மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

மேற்கு வங்காளத்தில் இடதுசாரி தொண்டர்கள், பாரதீய ஜனதா தொண்டர்கள் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் ஆக்ரோஷமாக மோதிக்கொள்வதும், இதனால் உயிரிழப்பு ஏற்படுவதும் அங்கு தொடர்கிறது. புர்லியா பகுதியில் இரு பாரதீய ஜனதா தொண்டர்களை திரிணாமுல் காங்கிரசார் கொன்றுவிட்டார்கள் என பா.ஜனதா குற்றம் சாட்டுகிறது. இதனை கண்டித்து மாநிலம் முழுவதும் மிகப்பெரிய போராட்டம் நடத்தவும் பா.ஜனதா தயாராகி வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஜாபல்பூரில் அக்கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.
கூட்டத்தில் கலந்துக்கொண்ட அக்கட்சியின் தலைவர் திலிப் கோஷ் பேசுகையில், “திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் நம்முடன் பலம் காட்டுகிறார்கள். நம்முடைய தொண்டர்களை அச்சுறுத்துகிறார்கள். இதற்காக அவர்கள் சிறைக்கு செல்வார்கள் அல்லது நேரடியான என்கவுண்டர்களை எதிர்க்கொள்வார்கள், பா.ஜனதா தொண்டர்கள் மீது பாயும் தோட்டாக்களை எண்ணிக்கொண்டுதான் இருக்கிறோம்,” என மிரட்டும் வகையில் பேசினார். திரிணாமுல் காங்கிரசுக்கு எதிராக துப்பாக்கி எடுப்போம் என திலிப் போஷ் பேசியதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேற்கு வங்காள போலீஸ் அவர் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகிறது.

பா.ஜனதா தலைவர் திலிப் கோஷ் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய மம்தா பானர்ஜி, “நாங்கள் (திரிணாமுல் காங்கிரஸ்) ஒன்றும் பாரதீய ஜனதாவை போன்ற ஒரு பயங்கரவாத இயக்கம் கிடையாது. பா.ஜனதா, அகங்காரம் கொண்டது, சகிப்புத்தன்மையற்றது. அவர்களுக்கு இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்களை பிடிக்காது. கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் இடையே மட்டும் சண்டையை தூண்டிவிடவில்லை, இந்துக்கள் மத்தியிலும் மோதலை உருவாக்குகிறது. அவர்கள் என்கவுண்டர்களை முன்னெடுப்போம் என மிரட்டுகிறார்கள். அவர்கள் டெல்லியில் ஆட்சியில் இருப்பதால், குண்டுகளை வீசுவதுப்பற்றி பேசுகிறார்கள். இங்கு வந்து நாம்மை தொட்டுப்பாக்கட்டும் என சவால் விடுக்கிறேன், அவர்களுடைய இடத்திலே நாம் யாரென்று காட்டுவோம்” என்று கடுமையாக பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *