அமித் ஷாவை இயக்குனராக கொண்ட வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட்!

Read Time:7 Minute, 40 Second

பா.ஜனதா தலைவர் அமித்ஷாவை இயக்குனராக கொண்ட ஆமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியில் 2016-ம் ஆண்டு பணமதிப்பு நீக்கம் அமலில் இருந்தபோது 5 நாட்களில் ரூ.745 கோடி செல்லாத நோட்டுகள் டெபாசிட் செய்யப்பட்டது என்று ஆர்.டி.ஐ. பதிலில் தெரியவந்துள்ளது.

மோடி அரசு கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக, பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது. நோட்டுகளை நவம்பர் 10-ந் தேதி முதல், டிசம்பர் 30-ந் தேதிவரை வங்கி கணக்கில் செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டது. முதலில், மாவட்ட கூட்டுறவு வங்கிகளும் இந்த நோட்டுகளை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் கருப்பு பணம் போடப்படும் என்ற சந்தேகத்தால், 5 நாட்களில், அதாவது நவம்பர் 14-ந் தேதியுடன் இந்த அனுமதி நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் பணமதிப்பு நீக்க காலத்தின்போது வங்கிகளில் எவ்வளவு செல்லாத நோட்டுகள் பெறப்பட்டன என்பது தொடர்பாக ஆர்.டி.ஐ. சட்டத்தின் கீழ் மும்பையை சேர்ந்த மனோரஞ்சன் ராய் எழுப்பிய கேள்விக்கு ‘நபார்டு’ வங்கியின் தலைமை பொது மேலாளரும், மேல்முறையீட்டு ஆணையருமான எஸ்.சரவணவேல் பதில் அளித்தார். மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் ஆமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியில் அதிக அளவாக 5 நாட்களில் ரூ.745 கோடியே 59 லட்சம் செல்லாத நோட்டுகள் பெறப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த நிதியாண்டு 2016 – 2017-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியில் செய்யப்பட்ட ஒட்டுமொத்த டெபாசிட் ரூ.5 ஆயிரத்து 50 கோடியாகும். வங்கியில் நிகர லாபம் ரூ.14.31 கோடியாகும்.

இதைத்தொடருந்து குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட் மாவட்ட கூட்டுறவு வங்கியில் ரூ.693.19 கோடி செல்லாத ரூ.500, ரூ.1000 நோட்டுகள் டெபாசிட் செய்யப்பட்டுள்ளன. இவ்வங்கியின் தலைவர் ஜெயேஷ்பாய் விதால்பாய் ராதாதய்யா குஜராத் கேபினெட் அமைச்சரவையில் இடம் பெற்று இருந்தார். ராஜ்கோட் பா.ஜனதாவின் முக்கிய தொகுதியாக இருந்து வருகிறது.

குஜராத் மாநில கூட்டுறவு வங்கியே வெறும் ரூ.1 கோடியே 11 லட்சம் செல்லாத நோட்டுகளை பெற்றிருக்கும்போது, 2 மாவட்ட கூட்டுறவு வங்கிகளும் அதை விட பலமடங்கு அதிகமாக டெபாசிட் பெற்றிருப்பது விவாதப்பொருள் ஆகியுள்ளது.

பணமதிப்பு நீக்கம் குறித்து விசாரணைக்கு காங்கிரஸ் வலியுறுத்தல்

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தலைமைச் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, மோடி அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கைதான் நாட்டிலேயே மிகப்பெரிய ஊழலாகும். ஏராளமான கறுப்புப்பணம் வெள்ளையாக பா.ஜனதாவினரால் மாற்றப்பட்டது.

கடந்த 2016-ம் ஆண்டு பணமதிப்பு நீக்கத்துக்குப்பின் 5 நாட்களில் குஜராத்தின் 11 வங்கிகளில் பா.ஜனதாவினர் ரூ.3 ஆயிரத்து 118 கோடி செல்லாத ரூ.500, ரூ.1000 நோட்டுகளை டெபாசிட் செய்துள்ளனர். பணமதிப்பு நீக்கம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படுவது அவசியமானது.

பெரும்பாலான பணம் கூட்டுறவு வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. அந்தக் கூட்டுறவு வங்கிகளின் தலைவர்கள் மற்றும் இயக்குனர்கள் பா.ஜனதாவை சேர்ந்த முக்கியப்புள்ளிகள் ஆவர்.

இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியும், அமித் ஷாவும் தாமாக முன்வந்து குஜராத்தில் 11 கூட்டுறவு வங்கிகளில் ரூ.3,118 கோடி செல்லாத நோட்டு எப்படி டெபாசிட் செய்யப்பட்டது என்பதை விளக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.


ராகுல் காந்தி விமர்சனம்

இதற்கிடையே ராகுல் காந்தி வெளியிட்ட டுவிட் செய்தியில், அமித்ஷா ஜி உங்களுக்கு வாழ்த்துக்கள், பழைய நோட்டை புதிய நோட்டாக மாற்றுவதில் உங்களுடைய வங்கி முதலிடம் பிடித்துள்ளது. 5 நாட்களில் ரூ.745 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. மில்லியன் கணக்கான இந்தியர்களின் வாழ்க்கை ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கையால் அழிக்கப்பட்ட, உங்களுடைய சாதனைக்கு மரியாதை அளிக்கிறேன் என பதிவிட்டுள்ளார். அதிகமாக மதிப்பிழப்பு செய்யப்பட்ட நோட்டுகளை பெற்ற வங்கியின் இயக்குநர். பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அடுத்து 81 சதவிதம் வருமானம் உயர்ந்த கட்சியின் தலைவர் என்ற வாசகங்கள் இடம்பெற்ற பா.ஜனதா தலைவர் அமித்ஷாவின் புகைப்படத்தையும் வெளியிட்டார்.

நாபார்டு வங்கி விளக்கம்

இவ்விவகாரம் பெரும் சர்ச்சையாகிய நிலையில் அகமதாபாத் கூட்டுறவு வங்கியில் முறைகேடாக டெபாசிட் எதுவும் செய்யப்படவில்லை என நாபார்டு வங்கி விளக்கமளித்துள்ளது.

5 நாட்களில் 1.60 லட்சம் கணக்குதாரர்கள் மூலம் ரூ.746 கோடி டெபாசிட் வந்தது உண்மைதான்.

நாபார்டு வங்கியின் விளக்கத்தில், அகமதாபாத் கூட்டுறவு வங்கியில் ஒட்டுமொத்த கணக்குதாரர்களில் 9.37 சதவீதம் வாடிக்கையாளர்களே செல்லாத ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றினார்கள். 98.94 சதவீதம் கணக்குதாரர்கள் ரூ.2.5 லட்சத்துக்கு குறைவாகவே டெபாசிட் செய்தனர். டெபாசிட்கள் அனைத்தும் விதிமுறையின்படியே நடந்தது.

குஜராத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் செய்யப்பட்ட டெபாசிட்களைக் காட்டிலும், மராட்டிய கூட்டுறவு வங்கிகளில் செய்யப்பட்ட டெபாசிட்தான் அதிகமாகும். நாட்டில் உள்ள மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் அகமதாபாத் கூட்டுறவு வங்கி முதல் 10 இடங்களில் இடம் பெற்றுள்ளது. அகமதாபாத் கூட்டுறவு வங்கியில் வர்த்தக அளவு என்பது ரூ.9 ஆயிரம் கோடியாகும். சமீபத்தில் இந்த வங்கிக்குச் சிறப்பாக செயல்பட்டதற்காக விருதும் வழங்கப்பட்டுள்ளது.

One thought on “அமித் ஷாவை இயக்குனராக கொண்ட வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *