விஜய்யின் தளபதி-62 ‘சர்கார்’ ஆனது; ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் சர்ச்சையில் சிக்கியது !!!

Read Time:5 Minute, 8 Second

ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள விஜய்யின் தளபதி-62 படத்தின் தலைப்பு ‘சர்கார்’ என அறிவிக்கப்பட்டுள்ளது.

தளபதி 62 படத்தின் டைட்டில் மற்றும் முதல் போஸ்டர் அவரது பிறந்த தினமான ஜூன் 22-ம் தேதியையொட்டி வெளியிடுப்படும் என்று சன்பிக்சா்ஸ் நிறுவனம் அறிவித்தது. அதன்படி மாலை 6 மணிக்கு  படத்தின் தலைப்பு தெரிவிக்கப்பட்டது, பா்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.

‘துப்பாக்கி’ மற்றும் ‘கத்தி’ படங்களைத் தொடர்ந்து நடிகர் விஜய் மூன்றாவது முறையாக, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்த்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இந்தக் கதையை சூப்பர் ஸ்டாருக்காக எழுதி அதை அவரிடம் கூறி பாராட்டுக்களைப் பெற்ற கதையாகும்.

துப்பாக்கி, கத்தி ஆகிய வெற்றிப் படங்களைத் தொடர்ந்து மூன்றாம் முறையாக முருகதாஸ், விஜய் இருவரும் இணைவதால் ரசிகா்கள் படத்தை பெரிதும் எதிர்ப்பார்க்கிறார்கள். இந்தப் படத்தில் விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ், ராதா ரவி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். படத்தில் ராதாரவி அரசியல்வாதியாக நடித்துள்ளார்.விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் ‘பைரவா’ படத்தைத் தொடர்ந்து இருவரும் இரண்டாவது முறையாக இந்தப் படத்தில் இணைந்துள்ளனர்.
`சர்கார்’ படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டரில் நடிகர் விஜய் தாடியுடன் இடம்பெற்றுள்ளார்.  கறுப்பு நிற உடையில் கூலிங் கிளாஸ்,  சால்ட் & பெப்பர் தாடி, காதில் கடுக்கன், கையில் ஒரு லைட்டருடன், வாயில் கறுப்பு சிகரெட்டை புகைப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. இதுவரையில் இல்லாத அளவு மிகவும் ஸ்டைலாக, அட்டகாசம் செய்துள்ளார் விஜய்.

ஃப்ர்ஸ்ட் லுக்  காட்சியை ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். ரசிகர்கள் தங்களுடைய மகிழ்ச்சியை பதிவு செய்து டுவிட் செய்து வருகிறார்கள். பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஏற்கனவே அதிரடி அரசியல் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தலைப்பு அதனை உறுதி செய்யும் வகையில் உள்ளது. இந்தியில் ‘சர்கார்’ என்றால்  ‘அரசு’ என்பது அர்த்தமாகும்.  ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில்   ஃப்ர்ஸ்ட் லுக் காட்சி பற்றி விமர்சனமும் எழுந்து உள்ளது.

வாக்குறுதியை மீறினார்!

இதற்கிடையே ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் காட்சியில் விஜய் சிகரெட் புகைக்கும் காட்சி விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. இனிமேல் புகை பிடிக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்ற வாக்குறுதியை விஜய் மீறியிருக்கிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கடந்த 2007-ம் ஆண்டு தமிழ்நாட்டில் நடந்த‘தமிழ்நாட்டில் புகையிலை கட்டுப்பாடு’கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அப்போதைய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், “சினிமாவில் குடிப்பதற்கும், புகை பிடிப்பதற்கும் எதிராக நாங்கள் போராடி வருகிறோம். எங்கள் போராட்டத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் புகை பிடிக்கும் காட்சியில் நடிப்பதை நிறுத்திவிட்டார். அதேபோல் விஜய்யும் புகை பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார். அப்போது அவருடைய வேண்டுகோளை ஏற்று விஜயும் இனிமேல் புகை பிடிக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று வாக்குறுதியளித்தார். ஆனால் தொடர்ச்சியாக அதுபோன்ற காட்சிகளில் நடிக்கிறார் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
2012-ம் ஆண்டு வெளியான ‘துப்பாக்கி’ படத்தின் போஸ்டரில் விஜய் சுருட்டு பிடிப்பது போன்று போஸ் கொடுத்திருப்பார்.இப்போது சர்காரில் சிகரெட் பிடிப்பது போல் போஸ் கொடுத்துள்ளார் விஜய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *