பசுமைவழிச் சாலை: காட்டில் களைவெட்டி சம்பாதித்தது; எங்கே செல்வோம்? விவசாயிகள் கண்ணீர்

Read Time:5 Minute, 54 Second

சென்னை – சேலம் பசுமைவழிச் சாலைக்கு விவசாயிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. முதல்கட்டப் பணிகளாக, பசுமைவழிச் சாலைக்கு நிலம் அளக்கப்பட்டு கான்கிரீட்டால் அளவு கல்கள் அமைக்கப்படுகிறது. விவசாய நிலங்களில் நிலத்தை அளவீடு செய்து எல்லைக்கல் (முட்டுக்கல்) நடும் பணி போலீஸ் பாதுகாப்புடன் நடக்கிறது. பல்வேறு கிராமங்களில் நில அளவை அதிகாரிகளுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்துகிறார்கள். விவசாயிகள் தங்களுடைய வீடுகளில் கருப்பு கொடியையும் கட்டியுள்ளார். விவசாயிகள் கைது செய்யப்படுவதும், விடுதலை செய்யப்படுவதும் தொடர் கதையாக உள்ளது.

பசுமையாக இருக்கும் வயல்வெளிகள் தார் சலையாகும் என நினைத்து விவசாயிகள் அழும் காட்சியை பார்க்க முடியாத நிலையே உள்ளது. வீட்டில் உள்ள பசுக்களுக்கு தீவனத்திற்கு எங்கு செல்வோம் என கண்ணீர் விடுகிறார்கள்.

சேலம் மாவட்டம் ஆச்சாங்குட்டப்பட்டி கிராம மக்களின் விவசாய நிலமும் பசுமைவழிச் சாலைக்காக கையகப்படுத்தப்படுகிறது. நில அளவை அதிகாரிகள், போலீசுடன் சென்ற போது விவசாயிகள் கண்ணீர் விட்டு அழுதார்கள். நிலத்தை பறிகொடுக்கும் பெண் ஒருவர் பேசுகையில், எங்கள் அப்பா, அம்மா யாரும் சம்பாதித்தது கிடையாது, கஷ்டப்பட்டு, காடு, காடாக சென்று களைவெட்டி சம்பாதித்தது,” என்று வேதனையில் தன்னுடைய நிலையை சொல்லி அழுகிறார். மற்றொரு மூதாட்டி பேசுகையில், எங்களுடைய குழந்தைகளை வாழ்வதற்கு எங்கு அழைத்து செல்வோம்? என கேள்வியை எழுப்புகிறார். பேசாமல் எங்களுக்கு விஷத்தை கொடுத்துவிடுங்கள் என கண்ணீர் விடுகிறார்கள்.
போலீசாருடன் இரு குழந்தைகளுடன் பேசும் முதியவர், “நிலத்தை எடுப்பதற்கு பதிலாக எங்களுக்கு விஷம் வாங்கி கொடுத்துவிடுங்கள். உயர் அதிகாரியின் காலில் விழவும் தயாராக உள்ளோம். முதலில் இந்த குழந்தைகளுக்கு விஷம் கொடுங்கள், நாங்களும் குடித்துவிடுகிறோம். இனி உலகில் வாழ்ந்து என்ன செய்யப்போகிறோம். 40 சென்ட் நிலம் இருக்கிறது, அதனை இப்போது இழக்கிறோம். பேச கலெக்டர் அலுவலகம் அழைப்பீர்கள், என்ன நடக்கும்?. விருப்பம் இருந்தா இரு, இல்லையென்றால் சாவு என்பீர்கள் அவ்வளவுதானே,” என்கிறார்.

கிராமத்தை சேர்ந்த பெண் மோகனப்பிரியா பிபிசியிடம் பேசுகையில், “கடன் வாங்கி, போர் போட்டு, மாடுகளை வாங்கி, அதன் மூலம் கிடைக்கும் பாலை கொண்டுதான் எங்களுடைய வாழ்க்கை செல்கிறது. என்னுடைய வீட்டுக்காரர் வேலைக்கு செல்லவில்லை, மாடுகளை பார்த்துக்கொள்கிறர். மாடுகளை வைத்துதான் வாழ்க்கை செல்கிறது. தோட்டத்தில் நெல் நட்டும், மாட்டிற்கு புல் வளர்த்தும்தான் எங்களுடைய வாழ்க்கை செல்கிறது. இப்போது எங்களைவிட்டு இதுவெல்லாம் சென்றால் என்றால் நாங்கள் என்ன செய்வது?. கிணறும் போகிறது, போரும் போகிறது. எங்களிடம் எதுவும் கிடையாது, வீடு, காடும் கிடையாது. ஆடு, மாட்டை வைத்துக்கொண்டு வைத்துக்கொண்டு தனியாக நிற்கிறோம். எங்களுக்கு இப்போது எந்த வழியும் கிடையாது,” என வேதனையுடன் கூறுகிறார்.
கிராமத்தில் போலீசாருடன் பேசும் பொதுமக்கள் எங்களால் அரசை எதிர்த்து எதுவும் செய்ய முடியாது என கூறுகிறார்கள். அப்போது விவசாயி ஒருவர் பேசுகையில், விவசாயம் அடியோடு அழிந்துவிட்டது, இப்போது விவசாயியையும் அழிந்துவிட்டான் என கண்ணீர் விட்டு அழுதார்.

எங்களுடைய நிலத்தின் நடுவே சாலைக்கு இடம் எடுக்கப்படுகிறது. இந்த புறம் ஒரு 10 சென்ட் மறுபுறம் 10 சென்ட் மட்டும் உள்ளது. இந்த நிலத்தை வைத்து ஒன்னும் செய்ய முடியாது. அதையும் அவர்களிடமே கொடுத்துவிட வேண்டியதுதான். 10 சென்ட் நிலத்தை வைத்து நாங்கள் 4 பேர் எப்படி வாழ்வது. எங்களுடைய ஆடு மற்றும் மாடுகளை வைத்துக்கொண்டு எங்கே செல்வோம். எல்லாத்தையும் விற்பனை செய்துவிட்டு போக வேண்டியதுதான். இழப்பீடு எதுவும் கிடையாது, ரூ. 8 லட்சத்தை வைத்துக்கொண்டு ஒரு பிளாட் கூட வாங்க முடியாது. அடித்து பிடுங்குகிறார்கள், அதிகார துஷ்பிரயோகம் செய்கிறார்கள் என வேதனை தெரிவிக்கிறார் விவசாயி.

Source வீடியோ:- https://www.bbc.com/tamil/india-44543917

பிற செய்திகள்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *