கிரிஹலட்சுமி வார இதழ் வழக்கு விவகாரத்தில் ஆபாசம் என்பது பார்ப்பவர் கண்களில் மட்டுமே என்றுகூறி வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஜனவரி மாதம் கேரளாவில் அம்ரிதா என்ற பெண் குழந்தைக்கு பால் கொடுக்கும் காட்சியை புகைப்படம் எடுத்து, அவருடைய கணவர் பிஜு பேஸ்புக் சமூக வலைதளத்தில் பதிவிட்டார். வெளிப்படையாக குழந்தைக்கு பால் கொடுப்பதில் கொண்டுள்ள அவமானத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்று அவர்கள் பதிவிட்டார்கள். பிஜு பதிவிட்ட தகவல் சமூக வலைதளங்களில் எதிர்வினையை சந்தித்தது.
இதனையடுத்து தம்பதியின் விழிப்புணர்வு பிரசாரத்தில் மலையாள வார இதழ் கிரிஹலட்சுமி தன்னையும் தைரியத்துடன் இணைத்துக்கொண்டது.
விளைவாக கிரிஹலட்சுமி மார்ச் மாத இதழில் பொது இடத்தில் தாய்ப்பால் கொடுப்பது குறித்து விழிப்புணர்வை உண்டாகும் வகையில் செய்தியை வெளியிட்டது. வார இதழின் அட்டைப் படத்தில் மலையாள எழுத்தாளரும், மாடலுமான ஜிலு ஜோசப் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுவது போல் போஸ் கொடுத்த காட்சி இடம்பெற்று இருந்தது. அதற்கு கீழே, ‘உற்று பார்க்காதீர்கள்; நாங்கள் தாய்ப்பால் அளிக்க வேண்டும்’ என்ற வாசகமும் இடம்பெற்றிருந்தது. வார இதழில் அம்ரிதா தன்னுடைய குழந்தைக்கு பால் கொடுக்கும் காட்சியும் இடம்பெற்று இருந்தது.
மார்பகத்தை மறைக்காமல் குழந்தைக்கு பால் கொடுக்கும் காட்சி தொடர்பாக சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை கிளப்பியது.
ஒருதரப்பினர் பத்திரிக்கையின் நடவடிக்கையையும், போஸ் கொடுத்த மாடல் ஜிலு ஜோசப்பையும் பாராட்டினார்கள். மறு தரப்பினர் இது ஆபாச பிரசாரம் என்று விமர்சனம் செய்தார்கள். இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் பெரும் விவாதமே தொடங்கியது. ஒரு தாய் தனது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது போன்ற படம், இந்திய பத்திரிகையின் அட்டையில் இடம் பிடித்தது இதுதான் முதல்முறை.
தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை பறைசாற்றும் விதத்திலும், தாய்ப்பால் கொடுக்கும் பெண்களை தப்பான கண்ணோட்டத்தில் பார்க்க கூடாது என்பதை வலியுறுத்துவதற்காகவும் பெண் எழுத்தாளர் ஜிலு ஜோசப் போஸ் கொடுத்துள்ளார் என தெரிவிக்கப்பட்டது.
கிரிஹலட்சுமியின் ஆசிரியர் பேசுகையில், “நாங்கள் பொது இடத்தில் தாய்ப்பால் கொடுப்பது குறித்து விழிப்புணர்வை உண்டாக்குவதற்காகதான் இந்த படத்தை பிரசுரித்தோம்” என்றார்.
ஜிலு ஜோசப் பேசுகையில், எனக்கு திருமணமும் ஆகவில்லை, குழந்தையும் கிடையாது, எனக்கு கிரிஹலட்சுமி வார இதழ் கொடுத்த பணியை மேற்கொள்வதில் தயக்கமும் இல்லை. எந்தஒரு தவறும் செய்யவில்லை என்று எனக்கு தெரியும். எல்லாப் பெண்களும் தங்களுடைய தாய்மையை கொண்டாட வேண்டும். மார்பகத்தை மறைக்காமல் குழந்தைக்கு பால் கொடுக்கும் வகையில் புகைப்படம் எடுக்க எனக்கு எந்தஒரு தயக்கமும் கிடையாது என்றார். மேலும், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது தங்களை மறைத்துக்கொள்ளும் பெண்களுக்கு மதிப்பளிக்கிறேன். தாய்மார்கள் பொது இடத்தில் இருந்தாலும், குழந்தைகளுக்கு உணவளிக்க எந்தஒரு கவலையும் அடையவேண்டாம் என்ற தகவலை கொண்டுச் செல்லவே முடிவுசெய்தோம் என வெளிப்படையாக கூறினார்.
கிரிஹலட்சுமி இதழுக்கு அம்ரிதா கொடுத்த பேட்டியில்,
“நான் குழந்தை பெற்று மருத்துவமனையில் இருந்த போதும் வெளிப்படையாகவே என்னுடைய குழந்தைக்கு பால் கொடுத்தேன்.
இதனை தவிர்க்குமாறு பலரும் என்னிடம் கேட்டுக்கொண்டார்கள். வெளிப்படையாக குழந்தைக்கு பால் கொடுத்தால், குழந்தைக்கு பால் இல்லாமல் செல்லும் என்றும் கூறினார்கள். இன்றும் பழைய மூடநம்பிக்கைகள், இளம் தலைமுறையினரால் பரப்பப்படுகிறது. சிலர் என் மீது துண்டை வீசி, அதனை நான் அகற்றுகிறேனா? என்றெல்லாம் சோதனையிட்டார்கள்,” என்று கூறியிருந்தார்.
இதற்கிடையே மாடலிங்கும், பெண் எழுத்தாளருமான ஜிலு ஜோசப்பும் மீதும், பத்திரிக்கைக்கு எதிராகவும் வழக்கு தொடரப்பட்டது. ஃபெலிக்ஸ் எம்.ஏ. என்பவர் தாக்கல் செய்த மனுவில் முக்கியமாக இதழின் அட்டைப்படம் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் (போஸ்கோ) சட்டத்தின் விதிகள், சிறார் நீதிசட்டம் பிரிவு 45-ஐ மீறுகிறது என குறிப்பிட்டார். வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் கேரள உயர்நீதிமன்றம், ஆபாசம் என்பது பார்ப்பவர் கண்களில் மட்டுமே உள்ளது என்ற அதிரடி தீர்ப்பை கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
ராஜா ரவிவர்மாவின் ஓவியங்களை பார்க்கும் கண்களைக் கொண்டுதான், இந்த புகைப்படத்தையும் பார்க்கிறோம்
தலைமை நீதிபதி ஆண்டனி டொமினிக் மற்றும் டோமா சேஷாத்ரி நாயுடு ஆகியோர் அடங்கிய பெஞ்ச், நாங்கள் எதையும் தவறாக பார்க்கவில்லை. எங்களால் முடிந்த முயற்சியில் அட்டைப்படுத்தல் அல்லது அதில் இடம்பெற்று இருந்த வாசகத்தில் எந்தஒரு ஆபாசத்தையும் நாங்கள் கண்டுபிடிக்கவில்லை. ராஜா ரவிவர்மாவின் ஓவியங்களை பார்க்கும் கண்களைக் கொண்டுதான், இந்த புகைப்படத்தையும் பார்க்கிறோம். அழகு பார்ப்பவர்களின் கண்களில் உள்ளது போன்றுதான், ஆபாசமும் பார்ப்பவர்களின் கண்களில்தான் உள்ளது,” என்று கூறியது.