பா.ஜனதா தலைவர் அமித்ஷாவை இயக்குனராக கொண்ட ஆமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியில் 2016-ம் ஆண்டு பணமதிப்பு நீக்கம் அமலில் இருந்தபோது 5 நாட்களில் ரூ.745 கோடி செல்லாத நோட்டுகள் டெபாசிட் செய்யப்பட்டது தொடர்பான செய்தி பக்கங்களை டைம்ஸ் நவ், நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், நியூஸ்18.காம், ஃபர்ஸ்ட் போஸ்ட் ஜூன் 21-ம் தேதி நீக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியை நீக்கியது தொடர்பாக இதுவரையில் செய்தி இணையதளங்களின் ஆசிரியர்கள் தரப்பில் விளக்கம் அளிக்கப்படவில்லை என தி வையர் செய்தி வெளியிட்டுள்ளது.
இதில் நியூஸ்18.காம் மற்றும் ஃபர்ஸ்ட் போஸ்ட் செய்தி இணையதளங்கள் ரிலையன்ஸ் நிறுவனத்தால் நடத்தப்படுகிறது.
தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் மும்பையை சேர்ந்த மனோரஞ்சன் ராய் என்பவர் பணமதிப்பு நீக்க காலத்தின்போது வங்கிகளில் எவ்வளவு செல்லாத நோட்டுகள் பெறப்பட்டன என்று கேள்வி கேட்டு இருந்தார். அதற்கு ‘நபார்டு’ வங்கியின் தலைமை பொது மேலாளரும், மேல்முறையீட்டு ஆணையருமான எஸ்.சரவணவேல் பதில் அளித்தது தொடர்பாக ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் செய்திவெளியிட்டு இருந்தது. அதாவது, ஆமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியில் அதிக அளவாக ரூ.745 கோடியே 59 லட்சம் செல்லாத நோட்டுகள் பெறப்பட்டுள்ளன. ஐந்தே நாட்களில் இந்த நோட்டுகள் வந்துள்ளன என பதில் தெரிவிக்கப்பட்டது.
அமித்ஷா ஆமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியில் பல ஆண்டுகளாக இயக்குனராக இருந்து வருகிறார். 2000-ம் ஆண்டு, அவ்வங்கியின் சேர்மனாகவும் இருந்துள்ளார்.
கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியில் செய்யப்பட்ட ஒட்டுமொத்த டெபாசிட் ரூ.5 ஆயிரத்து 50 கோடியாகும். வங்கியில் நிகர லாபம் ரூ.14.31 கோடியாகும்.
மேலும் விவரங்களுக்கு அமித் ஷாவை இயக்குனராக கொண்ட வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட்! இச்செய்திதான் இணையதளங்களில் எடுத்துவிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக டைம்ஸ் நவ்,நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், நியூஸ்18.காம் மற்றும் ஃபர்ஸ்ட் போஸ்ட் செய்தி ஆசிரியர்களிடம் தி வையர் கேள்வி ஏழுப்பியுள்ளது.
பா.ஜனதா தலைவர்களை விமர்சனம் செய்யும் செய்திகளை செய்தி இணையதளங்கள் நீக்கிவிடுவது இது முதல்முறை கிடையாது என கூறியுள்ள தி வையர் முன்னர் நடந்த சம்பவங்களையும் பட்டியலிட்டுள்ளது. 2017 ஜூலையில் டைம்ஸ் ஆப் இந்தியாவின் அகமதாபாத் பதிப்பகத்தில் “5 வருடங்களில் பா.ஜனதா தலைவர் அமித் ஷாவின் சொத்து 300 சதவிதம் உயர்ந்துள்ளது” என செய்தி வெளியிட்டுள்ளது, ஆனால் இச்செய்தி வெளியான சில மணி நேரங்களில் இணையதளத்தில் இருந்து நீக்கியது.
ஜவுளி மற்றும் செய்தி வெளியீட்டு துறை அமைச்சர் ஸ்ம்ரிதி இராணி தனது இளநிலை கல்வியை முடிக்கவில்லை என வாக்குமூலம் அளித்ததாக குறிப்பிடப்பட்டிருந்த கட்டுரையை 2017 ஜுலை 9 அன்று டிஎன்ஏ (DNA) வின் அச்சு பிரதியில் மற்றும் ஔட்லுக் (Outlook) ஹிந்தி இணையதளத்தில் வெளியான செய்தியையும் எந்த விளக்கமும் கொடுக்கப்படாமல் நீக்கப்பட்டன.
இதைப்போல் அடுத்த சில மாதங்களில் 2017 செப்டம்பர் 14ஆம் தேதி டைம்ஸ் ஆப் இந்தியாவின் ஜெய்ப்பூர் பதிப்பக இணையதளத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் “பிரதான் மந்திரி பாசல் பீமா யோஜன” பயிர் காப்பீடு திட்டத்தை விமர்ச்சித்து வெளியான செய்தியை அடுத்த சில மணி நேரங்களில் இணையதளத்தில் இருந்து நீக்கியது.
உலக பத்திரிகை சுதந்திரம் குறித்த அறிக்கையும் கூட டைம்ஸ் ஆஃப் இந்தியா மற்றும் எகனாமிக்ஸ் டைம்ஸ் இணையதளங்களிலிருந்து மே மாதம் நீக்கப்பட்டது. இது குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் ஆசிரியர் பிரசாத் சன்யாலிடம் கேட்ட போது அது ஆசிரியரின் உரிமை என விளக்கமளித்திருந்தார் என தி வையர் குறிப்பிட்டுள்ளது.