‘பணத்துக்காக இந்துத்துவா பிரசாரத்திற்கு ஒப்புக்கொண்ட ஊடகங்கள்’ கோப்ராபோஸ்ட் ஸ்டிங் ஆபரேஷன்!

Read Time:12 Minute, 44 Second

2019 பாராளுமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில் பணத்துக்காக இந்துத்துவா பிரசாரத்திற்கு மிகப்பெரிய பத்திரிக்கைகள், தொலைக்காட்சி ஊடகங்களைச் சேர்ந்த முதலாளிகளும், மேல்மட்ட அதிகாரிகளும் சம்மதம் தெரிவித்தது கோப்ராபோஸ்ட் புலனாய்வு இணயதளம் நடத்திய ஸ்டிங் ஆப்ரேஷன் மூலம் தெரியவந்துள்ளது.

புலனாய்வில் தடம் பதித்த கோப்ராபோஸ்ட் இணைதளம் இப்போது இந்தியாவின் ஊடகங்களை இலக்காக்கியுள்ளது.

கோப்ராபோஸ்ட் இந்த ஆப்ரேஷனுக்கு ‘ஆப்பரேஷன் 136’ (operation 136) என்று பெயரிட்டுள்ளது. கடந்த 2017-ம் உலக ஊடக சுதந்திரக் குறியீட்டில் இந்தியா 136-ஆவது இடம் பிடித்ததை குறிப்பிட்டு இந்த புலனாய்வுக்கு ‘ஆப்பரேஷன் 136 என்று பெயரிட்டுள்ளது.

இந்தியாவில் செயல்படும் மிகப்பெரிய பத்திரிக்கைகள், தொலைக்காட்சி ஊடகங்களைச் சேர்ந்த முதலாளிகளும், மேல்மட்ட அதிகாரிகளும் பணத்திற்காக ‘இந்துத்துவ’ செய்திகளை வெளியிட சம்மதம் தெரிவித்ததாக மறைமுகமாக எடுக்கப்பட்ட வீடியோக்கள் மூலம் கோப்ராபோஸ்ட் வெளிப்படுத்தியுள்ளது.
கோப்ராபோஸ்ட் புலனாய்வு இணையதளத்தின் செய்தியாளர் புஷ்ப ஷர்மா இந்த ஆப்ரேஷனை பல மாதங்களாக நடத்தியுள்ளார். புஷ்ப ஷர்மா “ஆச்சார்யா அடல்” என்ற புனைபெயரில் ‘சங்கதம்’ என்ற பெயரிடப்படாத அமைப்பின் ஊழியராகவும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நெருங்கிய தொடர்புடையவராகவும் தன்னை காண்பித்திக்கொண்டு பல ஊடகங்களை தொடர்புக் கொண்டு புலனாய்வை மேற்கொண்டு உள்ளார். மெயின்ஸ்டீரிம் மீடியாக்கள் மற்றும் பிராந்திய மீடியாக்களின் முதலாளிகள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளிடம் இந்துத்துவ செய்திகளை வெளியிட பேரம் பேசும் காட்சிகளை மறைமுகமாக வீடியோ எடுத்து வெளிப்படுத்தியுள்ளார்.

இந்துத்துவா பிரசாரத்திற்கு மட்டுமின்றி பா.ஜனதாவிற்கு எதிரான கட்சிகளுக்கு எதிராக பிரசாரம் மேற்கொள்ளவும் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.

காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சிகளுக்கு எதிராக எதிர்மறை பிரசாரத்திற்கும் மீடியாக்களிடம் கேட்டுகொள்ளப்பட்டுள்ளது. ஊடகங்களிடம் பேசும் ஆச்சார்யா அடல் 2019 பாராளுமன்றத் தேர்தலை மையமாக கொண்டு இப்பிரசாரத்தை மேற்கொள்ள கேட்கிறார். இப்பிரசாரத்திற்காக சில கோடிகள் முதல் 500 கோடிகள் வரையில் தருவதற்கு தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார், இதற்கு முக்கிய ஊடகங்கள் சம்மதம் தெரிவித்துள்ளது. ஊடகங்கள் பணத்திற்காக பிரசாரம் செய்ய தயார் என கூறும் 40-க்கும் அதிகமான வீடியோக்களை வெளியிட்டுள்ளது கோப்ராபோஸ்ட்.

* ராமர் – அயோத்தியா போன்றவை சர்ச்சைக்குரியவை என்பதால் கிருஷ்னா, பகவத் கீதை மூலம் இந்துத்துவ கொள்கையை பரப்ப வேண்டும்.

* காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி ஆகியோருக்கு எதிரான செய்திகளை பரப்ப வேண்டும்.

* 2019 பாராளுமன்றத் தேர்தலை முன்னெட்டு டிசம்பர் மாதம் தொடக்கம் முதல் 6 மாத காலம் இப்பிரச்சாரத்தை ஊடகங்கள் முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் ஆச்சார்யா முன்வைக்கிறார்.
டைம்ஸ் ஆஃப் இந்தியா, இந்தியா டுடே, ஹிந்துஸ்தான் டைம்ஸ், ஜீ நியுஸ், நெட்வோக் 18, ஸ்டார் இந்தியா, ஏபிபி நியூஸ், பாரத் சமாஜார், டைனிக் ஜக்ரான், ரேடியோ ஒன், சுவர்னா நியுஸ், ரெட் FM, லோக்மத், ஏபிஎன் ஆந்திரா ஜோதி, டிவி 5, தினமலர், ரேடியோ ஒன், பிக் எப்.எம்., கே நியுஸ், இந்தியா வாய்ஸ், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், MVTV மற்றும் ஓப்பன் இதழ் உள்ளிட்டவை பிரசாரத்திற்கு தயார் என தெரிவித்தன என கோப்ராபோஸ்ட் செய்திவெளியிட்டுள்ளது. பெங்காலி பத்திரிக்கை (Bartaman மற்றும் Dainik Sambad.) இரண்டு மட்டும் ஊடக தர்மத்தைமீறி செய்தி வெளியிட முடியாது என கூறி வெளியேற்றியுள்ளது.

கோப்ராபோஸ்ட் புலனாய்வில் உலகில் அதிகமான வாசகர்களை கொண்ட பத்திரிக்கையான டைம்ஸ் ஆப் இந்தியா சிக்கியுள்ளது. இதில் மற்றொரு முக்கியமான தகவல் என்னவென்றால் அந்நிறுவனம் தொகையை அப்படியே பணமாக கொடுப்பீர்களா? இல்லை கருப்பு பணமாக கொடுப்பீர்களா? என்று கேள்வி எழுப்புவதுதான். மோடி அரசு ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கையை மேற்கொண்ட போது, கருப்பு பணத்திற்கு எதிரான நடவடிக்கையென பாராட்டியது. அதீத ஆதரவை கொடுத்தது. இப்போது அந்நிறுவனத்தில் இருந்தே கருப்பு பணமா கொடுப்பீர்களா? என்று கேட்கப்பட்டுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது.

டைம்ஸ் குழுமத்தின் உரிமையாளர் வினீத் ஜெயின், டைம்ஸ் குழுமத்தின் தலைமை அதிகாரி சஞ்சீவ் ஷா இருவரும் ஆச்சார்ய அடலிடம் பேரம் பேசும் காட்சிகள் உரையாடல் தொகுப்பு வீடியோவாக கோப்ராபோஸ் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கிருஷ்னர் – பகவத் கீதை போன்ற நிகழ்ச்சிகளுக்கும், விளம்பரத்திற்கும் தன்னால் 500 கோடி வரை தர முடியும், இந்நிகழ்ச்சிகள் இந்துத்துவ அரசியலுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்று ஆச்சார்யா கூறுகிறார்.

பேரத்தின் போது டைம்ஸ் குழுமத்தை சேர்ந்தவர்கள் பிரசாரத்திற்கு தயார் என தெரிவிக்கையில், பணம் எப்படி தரப்படும்? நேரடியாகவா அல்லது கருப்பு பணமா? என கேள்வி எழுப்புகிறார்கள். அப்போது ஆச்சார்யா இதற்கான முதல்கட்ட நிதி பணமாக வழங்கப்படும் என்கிறார். ஆனால், வினீத் ஜெயின் மற்றும் சஞ்சய் நாங்கள் பணம் மூலமாக டீல் ஏதுவும் செய்வது கிடையாது என்று கூறுகிறார்கள். பின்னர் எந்த வழியில் பணம் வழங்கப்படும் என்பது தொடர்பாக யோசிக்கிறார்கள். அப்போது குறுக்கீடும் வீனித் இவ்விவகாரத்தில் மற்றொரு நபர் தலையீடு என கேட்கிறார். பணத்தை மற்றொரு தொழில் அதிபரிடம் கொடுங்கள், அவர்கள் எங்களுக்கு செக்காக கொடுக்கட்டும் என கேட்கிறார். அப்போது அம்பானி மற்றும் அதானி உள்ளிட்டோர் பெயர் அடிபடுகிறது.

ஆனால் “நிருபரின் நோக்கத்தை புரிந்து கொண்டு அவரது உண்மையான முகத்தை காணவே நாங்கள் அப்படி செய்தோம். எங்கள் குழுமத்தில் எல்லாம் சட்டப்படியே நடக்கிறது” என டைம்ஸ் குழுமத்தின் பிரதிநிதி மிருத்துஞ்சய் கட்டாரியா மறுப்பு தெரிவித்துள்ளார் என தி வையர் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் மற்றொரு மிகப்பெரிய ஊடகமான ஹிந்துஸ்தான் டைம்ஸ் மற்றும் இந்தியா டுடே அதிகாரிகளும் ஆதரவு அளிப்போம் என கூறியுள்ளனர் என கோப்ராபோஸ்ட் குறிப்பிட்டுள்ளது.

கோப்ராபோஸ்ட் புலனாய்வில் தமிழகத்தில் முக்கியமாக தினமலர் மற்றும் சன் குழுமம் பெயர்கள் சிக்கியுள்ளது. தினமலர் பத்திரிகையின் தொழில் மற்றும் தொழில்நுட்ப இயக்குனர் லட்சுமிபதி ஆதிமூலம் உடன் பேசிய காட்சியையும் வெளியிட்டுள்ளது. இந்துத்துவா பிரசாரத்திற்கு சம்மதம் தெரிவித்ததாக வீடியோ மற்றும் தகவல்களை கோப்ராபோஸ்ட் வெளியிட்டுள்ளது. தென் இந்தியாவின் மிகப்பெரிய குரூப்பாக இருக்கும் சன் குரூப்ஸ் இந்துத்துவா பிரசாரத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளது. ஆச்சர்யா சென்னையில் உள்ள சன் குரூப் அலுவலகத்திற்கு சென்ற போது நெட்வோர்க்கின் விற்பனைப்பிரிவு நிர்வாகி அலெக்ஸ் ஜார்ஜிடம் பேசியுள்ளார்.

இந்துத்துவா பிரசாரத்திற்கு கேட்டப்போது “பகவத் கீதாவின் தீவிர ஆதரவாளர்,”என்று கூறுகிறார் அலெக்ஸ் ஜார்ஜ். தினகரனின் தலைமை நிர்வாக அதிகாரி ராஜேஷ் கண்ணனிடமும் ஆச்சார்யா பேசியுள்ளார். கண்ணன் பேசுகையில், நான் பிரதமர் மோடியின் தீவிர ஆதரவாளர். பண மதிப்பிழப்பு நடவடிக்கை மிகப்பெரிய வெற்றியை பெற்றது, சில சூழ்நிலைகள் அதன் வழியில் செல்கிறது,”என்று குறிப்பிட்டுள்ளார். தென் இந்தியாவில் பிராந்திய மொழிகளில் கொடிக்கட்டி பறக்கும் சன் குழுமத்தின் அதிகாரிகள் வீடியோவில் பேசும் காட்சிகள் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. குறிப்பாக கர்நாடக மாநிலத்தில் தேர்தல் நடைபெறும் போது இந்துத்துவாவிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதற்கு சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூத்த பத்திரிக்கையாளர்கள் பலம்வாய்ந்த அரசியல் புரோக்கர்களாகியுள்ளனர் என விமர்சனம் செய்யும் கோப்ராபோஸ்ட், விசாரணையின் மூலம் இந்திய மீடியாக்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு, அதன் முரண்பாடான தோற்றம், இந்துத்துவா கொள்கை என்படி வேரூனிறியுள்ளது என்பதை எடுத்துக் காட்டுகிறது. மீடியாக்களின் உரிமையாளர்கள் அதிகாரத்தில் உள்ள கட்சிகளுக்கு தங்களுடைய விசுவாசத்தை அப்பட்டமாக ஒப்புக் கொள்கிறார்கள். அவர்களுடன் இணைந்துக் கொள்ளவும் ஆர்வமாக உள்ளனர் என்பது தெரிகிறது. உண்மைகளைத் திரித்தும், வதந்திகளைச் செய்தியாக்குவதும் இந்திய ஊடகத்தின் கை வந்த கலை.

இதனை உத்தரபிரதேச மாநிலம் காசஞ்ச் சம்பவத்தில் கண்டுக்கொண்டோம். இப்போது, புலனாய்வின் மூலம் மீண்டும் ஒருமுறை நிரூபணமாகி உள்ளது. ஜனநாயகத்தின் நான்காவது தூண் செல்லரித்து போயுள்ளதையும் இப்புலனாய்வு நமக்கு தெரியப் படுத்தியுள்ளது. மேலும், இந்திய ஊடகம் விற்பனைக்கு தயாராக உள்ளது” என கூறியுள்ளது.

கோப்ராபோஸ்ட் புலனாய்வு தகவல்களுக்கு சில செய்தி நிறுவனங்கள் தரப்பில் எதிர்ப்பு/மறுப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது. செய்தி நிறுவனங்கள் கோப்ராபோஸ்ட் மற்றும் இதுதொடர்பாக செய்தி வெளியிட்ட பிற இணையதள செய்தி நிறுவனங்கள் மீது வழக்கு தொடர்ந்துள்ளது. மேலும் கோப்ராபோஸ்ட் புலனாய்வில் சிக்கிய அதிகாரிகள், செய்திப்பிரிவை சேர்ந்தவர்கள், அதுதொடர்பாக அவர்கள் முடிவெடுக்கவும் முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளன. கோப்ராபோஸ்ட் புலனாய்வு தொடர்பான செய்திகள் மெயின்ஸ்டீரிம் மீடியாக்களில் வெளியிடப்படவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *