டெல்லியில் 16,500 மரங்களை வெட்டுவதற்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை

Read Time:6 Minute, 23 Second

புதுடெல்லி,

புதுடெல்லியில் மத்திய அரசு ஊழியர்களுக்கு வீட்டுவசதியை மேம்படுத்தும் திட்டத்திற்கு 16,500 மரங்களை வெட்டுவதற்கு மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார்கள். இதுதொடர்பான வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் ஜூலை 4 வரையில் மரங்களை வெட்ட இடைக்காலத் தடை விதித்துள்ளது.

தெற்கு டெல்லியில் மத்திய அரசு ஊழியர்களுக்காக குடியிருப்பு கட்டவும், ஒரு வணிக வளாகம் கட்டவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. காலனிகள் மறுசீரமைப்பு செய்யப்படுகிறது. இத்திட்டத்திற்கு மத்திய சுற்றுசுழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியது. தெற்கு டெல்லியில் உள்ள 7 காலனிகளில் உள்ள 16,500 மரங்களை வெட்டுவதற்கு டெல்லி அரசின் சுற்றுசூழல் மற்றும் வனத்துறை தரப்பில் ஒப்புதல் வழங்கப்பட்டது. மத்திய நகர்புற மற்றும் வீட்டுவசதி விவகாரங்கள் துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி 14,031 மரங்கள் வெட்டுப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஒரு மரம் வெட்டப்படுவதற்கு 10 மரக்கன்றுகள் நடப்படும் என அரசு தெரிவித்தது.
டெல்லியில் ஏற்கனவே மாசுபாடு அதிகரித்து பொதுமக்கள் பெரிதும் தவிப்புக்கு உள்ளாவும் வேலையில் மரங்களை வெட்டும் திட்டம் அவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மரத்தை காப்போம் என்ற போராட்டத்தை முன்னெடுக்க தள்ளப்பட்டார்கள். இதற்கிடையே மரங்களை வெட்டும் பணியும் தொடங்கியது. இதனையடுத்து டெல்லியில் பொதுமக்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் தரப்பில் மரங்களை பாதுகாப்போம் என போராட்டம் தொடங்கியது. பொதுமக்கள் பெரிய மரங்களை சுற்றி நின்று கைகளை கோர்த்து எதிர்ப்பு மற்றும் விழிப்புணர்வு கோஷங்களை எழுபினார்கள்.

சமூக வலைதளங்களிலும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது, வன்முறையில்லா போராட்டத்தை முன்னெடுக்க ஆதரவு தெரிவிக்கப்பட்டது.

“ ஒரு செடி வளர பல வருடங்கள் ஆகும், மரங்களை வெட்டி அதற்கு ஈடாக மரக்கன்றுகளை நடுவதை அனுமதிக்க முடியாது,” என பொதுமக்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

உயர்நீதிமன்றத்தில் வழக்கு

16,000-த்திற்கும் அதிகமான மரங்களை வெட்டி முன்னெடுக்கப்படும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மருத்துவர் கவு‌ஷல் கந்த் மிஸ்ரா என்பவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கு விசாரணை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வினோத் கோயல், ரேகா பள்ளி ஆகியோரை கொண்ட விடுமுறை கால அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. விசாரணை நடத்திய உயர்நீதிமன்றம், “மரங்களை வெட்டுவதற்கு பசுமை தீர்ப்பாயம் அனுமதி வழங்கியது?” என கேள்வியை எழுப்பியது. குடியிருப்பு கட்டுவதற்காக தற்போது டெல்லியில் இருந்து இவ்வளவு அதிக மரங்களை வெட்ட முடியுமா? என்ற கேள்வியை தேசிய கட்டிட கட்டுமான கழகத்திடம் (என்பிசிசி) எழுப்பியது. உயர்நீதிமன்றம் மரங்களை வெட்டுவதற்கு ஜூலை 4-ம் தேதி வரையில் இடைக்காலத் தடை விதித்தது.
எந்தவொரு திட்டத்திற்கும் மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதி அளிக்கும் போது பசுமை தீர்ப்பாயம் விசாரிக்க அதிகாரம் உள்ளது என தேசிய கட்டிட கட்டுமான கழகம் உயர்நீதிமன்றத்தில் குறிப்பிட்டது. ஜூலை 4–ந் தேதி வரையில் ‘தெற்கு டெல்லியில் மரங்களை வெட்டமாட்டோம்’ என உறுதியத்தது. டெல்லி அரசின் மரங்கள் ஆணையம் மரங்களை வெட்டுவதற்கு அனுமதி அளித்தது என தெரிவிக்கப்பட்டதும், அம்முடிவுக்கு எதிராக பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர மனுதாரருக்கு ஐகோர்ட்டு அனுமதியை வழங்கியது. வழக்கில் மரங்கள் ஆணையத்தையும் ஒரு தரப்பாக சேர்த்த உயர்நீதிமன்றம் விசாரணையை ஒத்திவைத்தது.

மரங்களை வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட வழக்குகளை ஜூலை 4-ம் தேதி உயர்நீதிமன்றமும், ஜூலை 2-ம் தேதி தேசிய பசுமைத் தீர்ப்பாயமும் விசாரிக்கிறது.

ஆம் ஆத்மி, பா.ஜனதா மோதல்

இவ்விவகாரத்தில் மத்தியில் ஆளும் பா.ஜனதா மற்றும் டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி இடையே அரசியல் மோதலாகியது. டெல்லி மாநில சுற்றுசுழல் மற்றும் வனத்துறை மந்திரி இம்ரான் ஹுசைன் பேசுகையில், இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தோம். மரங்கள் அழிப்பை குறைக்க அல்லது வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்ய முடியுமா? என்பதை சோதனையிட கேட்டுக்கொண்டதாக குறிப்பிட்டார்.
ஆம் ஆத்மி கட்சியின் செய்தித் தொடர்பாளர் பரத்வாஜ் பேசுகையில், இத்திட்டத்திற்கு மத்திய சுற்றுசூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் கடந்த 2017 நவம்பரில் அனுமதியை வழங்கியது, இறுதி அனுமதி டெல்லி ஆளுநர் அணில் பைஜாலால் கொடுக்கப்பட்டது என்றார்.

ஆனால் மாநில பா.ஜனதா, ஆம் ஆத்மி அரசு அனுமதி வழங்கிவிட்டு இப்போது அரசியல் செய்கிறது என குற்றம் சாட்டியுள்ளது.

மரங்களை வெட்டுவதற்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்ததை வரவேற்றுள்ள பொதுமக்கள், நிரந்தர தடையை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *