பசுமை வழிச்சாலை: பாதம்கூட படவில்லை! புதிய அரசு பள்ளி இடிக்கப்படுகிறது மாணவர்கள் கதறல்!

Read Time:7 Minute, 54 Second

பொதுமக்கள் 15 வருடங்கள் போராடி, இடம் கொடுத்து, ரூ.1 கோடியே 65 லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய பள்ளி கட்டிடம் சென்னை – சேலம் பசுமை வழிச்சாலைக்காக இடிக்கப்படுகிறது.

பசுமை வழிச்சாலை அமைக்கும் பணிக்கு நிலம் அளவீடு செய்து முட்டுக்கல் நடும் பணிகளில் அதிகாரிகள் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறார்கள். கிராமங்களுக்கு செல்லும் அதிகாரிகள் ‘திபுதிபு’வெனத் விளை நிலங்களுக்குள் சென்று நிலத்தை அளவுக்கும் போது சாமி விட்டுவிடுங்கள்! என்று கண்ணீர் விட்டு அழும் காட்சியும், காதை கிழிக்கும் கதறல் சத்தமும் நெஞ்சை உடைக்கிறது. சாப்பாடு போட்டது சாமி! பெற்ற தாய்க்கு மேலாக மதிக்கும் நிலத்தில் தார் ஊற்றி பசுமையையும், தாய்மையும் அழிப்பதை எண்ணி அவர்கள், எங்களை புதைத்துவிட்டு நிலத்தை எடுங்கள்! என்று கதறி அழுகிறார்கள். தற்கொலைக்கும் முயற்சி செய்கிறார்கள். மறுபுறம் அதிகாரிகள் தங்களுடைய பணியை போலீஸ் பாதுகாப்புடன் மேற்கொண்டு வருகிறது.

தருமபுரி மாவட்டத்தில் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், லட்சுமாபுரம் பகுதியில் மலைவாழ் மக்களின் குழந்தைகள் படிக்கும் அரசு உயர்நிலைப் பள்ளி கட்டிடம் பசுமை வழிச்சாலைக்காக இடிபடும் நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளி கட்டிடம் அளக்கப்படுவது தொடர்பாக தகவல் அறிந்ததும், மலைவாழ் மக்களும், மாணவ- மாணவிகளும் பள்ளிக்கூடத்தை விட்டுவிடுங்கள் என்று கெஞ்சினார்கள், கண்ணீர் விட்டு அழுதார்கள். இளைஞர்கள் பள்ளியை இடிக்க அனுமதிக்க மாட்டோம் என பள்ளியை சுற்றிவந்தபடி இருந்தனர். லட்சுமாபுரம் பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை உள்ளது. 250 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.

  • 15 ஆண்டு போராட்டத்திற்கு பின், கடந்த 2016-17-ம் ஆண்டு அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டத்தின் கீழ், நபார்டு உதவியுடன் ரூ. 1.65 கோடி செலவில் 25 வகுப்பறை கொண்டு புதிய பள்ளி கட்டிடம் கட்டப்பட்டது.
  • சில மாதங்களுக்கு முன் முதல்-அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது. பழைய கட்டிடத்தில் படிக்கும் மாணவ, மாணவிகள் 250 பேர் இன்னும் புதிய பள்ளிக்கு செல்லவில்லை.
  • பொதுமக்கள் பள்ளி அமைந்துள்ள இடத்தை விலைக்கு வாங்கி அரசிடம் ஒப்படைத்துள்ளனர்.

பள்ளியில் படிப்பவர்கள் பெரும்பாலோனர்கள் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின வகுப்பை சேர்ந்தவர்கள். விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்களின் குழந்தைகள் படித்து வருகிறார்கள். குறிப்பாக சின்னமஞ்சவாடி, பெரியமஞ்சவாடி, நடுப்பட்டி, காளிப்பேட்டை, கோம்பூர் மற்றும் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த பழங்குடியின மாணவ-மாணவிகள் தான் அதிக அளவில் படித்து வருகிறார்கள். பள்ளி ஏற்கனவே பழமையான கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. மிகவும் பழமையான கட்டிடத்தில் மாணவர்கள் படித்து வந்ததால், பழங்குடியின மக்கள் புதிய அரசு பள்ளி கட்டிடம் கேட்டு அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். பொதுமக்களின் 15 வருட கால போராடி புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

பள்ளி கட்டிடம் இடிக்கப்படும் செய்தி குறித்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் பேசுகையில், புதிய கட்டிடம் கட்டித்தர கடந்த 15 வருடங்களாக நாங்கள் போராடி வந்தோம். பின்னர் நாங்களே தற்போது பள்ளி அமைந்துள்ள இடத்தை விலைக்கு வாங்கி அரசிடம் ஒப்படைத்தோம். ரூ.1 கோடியே 65 லட்சம் செலவில் பள்ளி கட்டிடம் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கட்டப்பட்டது. 2 தளங்கள் உள்ள இந்த கட்டிடத்தில் 25 அறைகள் உள்ளன. புதிய கட்டிடத்துக்கு மாணவ-மாணவிகள் இன்னும் செல்லவில்லை. அதற்குள் இந்த புதிய கட்டிடம் இடிக்கப்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. புதிய பள்ளி கட்டிடத்தை இடிக்காமல் மாற்று வழியில் பசுமை வழிச்சாலை அமைக்க வேண்டும் அல்லது இன்னொரு இடத்தில் உடனடியாக பள்ளி கட்டிடத்தை கட்டி மாணவ- மாணவிகள் தொடர்ந்து பள்ளியில் படிக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.

ராமலிங்கபுரம் அரசு பள்ளி

சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டணம் அருகே ராமலிங்கபுரத்தில் பசுமைவழிச் சாலைக்காக அங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளி பகுதியில் அளவீடு செய்து முட்டுக்கல் நடப்பட்டது. பள்ளிக்கூடமும், மாரியம்மன் கோவிலும் இடிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளதால் கிராமமக்கள் பெரும் வேதனையை அடைந்துள்ளனர். மாரியம்மன் கோவிலையும், பள்ளிக்கூடத்தையும் விட்டுவிட்டு வேறு வழியில் நிலத்தை அளவீடு செய்து சாலையை கொண்டு செல்லுங்கள் என்று கிராம பெரியவர்கள், கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்தார்கள்.

ராமலிங்கபுர அரசு உயர்நிலைப்பள்ளியில் 250 மாணவ-மாணவிகள் படிக்கிறார்கள். 12 ஆசிரியர்கள் வேலை செய்கிறார்கள். இந்த பள்ளி கடந்த 1964-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. மக்களே தங்களது பணத்தை போட்டு நிலத்தை வாங்கி பள்ளியை கட்டியுள்ளனர். தற்போது அந்த பள்ளி இடிக்கப்படுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது.

ராமலிங்கபுரம் கிராமம் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் சேலம்-சென்னை இடையே நான்குவழிச் சாலை அமைக்கப்பட்டபோது உருக்குலைக்கப்பட்டது. இப்போது அங்கு எட்டுவழிச் சாலைக்காக மீண்டும் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

கிராமத்தில் புதிதாகக் கட்டப்பட இருக்கும் பள்ளிக்குச் செல்ல மாணவர்கள் 4 கி.மீ. தொலைவு நடக்க வேண்டும். ஆனால் இதுபற்றியெல்லாம் சிந்திக்கும் நிலையில் யாரும் கிடையாது.
விவசாயம் மற்றும் சுற்றுசூழலில் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தயுள்ள திட்டத்திற்கு எதிராக பொதுமக்கள், விலங்குகள் நல ஆர்வலர்கள், சுற்றுசூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். விவசாயிகளின் நிலங்கள் மட்டும் அழியவில்லை, அந்நிலத்தை சார்ந்த விவசாய பொருளாதாரம், வேலைவாய்ப்பு, கால்நடை வளர்ப்பு என பெரும் பாதிப்பை சந்திக்கிறது. இதுமட்டுமின்றி வீடுகளும், கோவில்களும், பள்ளிகளும் பசுமை வழிச்சாலைக்காக இடிக்கப்படுகிறது. கோவிலாக மதிக்கும் பள்ளிகளை இடிக்கப்படுவதை அறிந்த மாணவர்களும் கண்ணீர் விட்டு அழுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *