பிரதமர் மோடிக்கு பாதுகாப்பை உயர்த்த முடிவு; அமைச்சர்களும், அதிகாரிகளும் நெருங்க முடியாது!

Read Time:4 Minute, 54 Second

பிரதமராக இருக்கும் நரேந்திர மோடிக்கு பாதுகாப்பு தொடர்பான எச்சரிக்கை எழுந்துள்ளது. இதனையடுத்து மோடிக்கான பாதுகாப்பை மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிர மாநில போலீசாரால் அண்மையில் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கடிதத்தில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தற்கொலைப்படை தீவிரவாதி மூலம் படுகொலை செய்யப்பட்டது போல், பிரதமர் நரேந்திர மோடியை மாவோயிஸ்டுகள் கொலை செய்யத் திட்டமிட்டிருக்கும் தகவல் தெரியவந்தது. இதுதொடர்பான தகவல் அறிக்கை மும்பை நீதிமன்றத்தில் 7ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இச்செய்தியால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பிரதமர் மோடி சமீபத்தில் மேற்கு வங்காள மாநிலம் சென்ற போது 6 அடுக்குப் பாதுகாப்பை மீறி ஒருவர் அவருடைய பாதம் தொட்டார், இது பாதுகாப்பு முகமைகள் மத்தியில் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த இரு சம்பவங்களை அடுத்து மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், டெல்லியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், மத்திய உள்துறை செயலாளர் ராஜீவ் கவுபா மற்றும் உளவுத்துறை இயக்குநர் ராஜீவ் உள்ளிட்ட அதிகாரிகளுடன் பிரதமர் மோடிக்கு எழுந்துள்ள பாதுகாப்பு எச்சரிக்கை தொடர்பாக ஆலோசனையை மேற்கொண்டார். கூட்டத்தின் போது பிரதமர் மோடிக்கான பாதுகாப்பை அதிகரிக்க தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள பாதுகாப்பு முகமைகளுக்கு பரிந்துரையை அனுப்ப அதிகாரிகளுக்கு ராஜ்நாத் சிங் உத்தரவிட்டார்.

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ‘தி வீக்’ பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், “யார் அவருக்கு (பிரதமர் மோடி) எதிராக திட்டமிட்டனர், அந்தத் திட்டத்தின் நிலை என்ன என்பது குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது. பிரதமரின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய நான் ஏற்கெனவே குழு அமைத்திருந்தேன். அது தனது பணியை தொடர்ந்து செய்து வருகிறது. அதேநேரத்தில், மாவோயிஸ்டுகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியானதும், அவருக்கான பாதுகாப்பை நாங்கள் அதிகரித்து விட்டோம். தனக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் தொடர்பாக என்னுடன் மோடி எதுவும் பேசவில்லை. ஆனால், நாட்டின் உள்துறை அமைச்சர் என்ற முறையில், அவருக்கான பாதுகாப்பை அதிகரிக்க நான் நடவடிக்கை எடுத்தேன்,” என்று குறிப்பிட்டார்.
இந்நிலையில் பிரதமர் மோடிக்கான பாதுகாப்பை அதிஉயர் உஷார் நிலையில் வைத்திருக்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. சிறப்பு பாதுகாப்பு படையின் சோதனையின்றி அமைச்சர்களோ, அதிகாரிகளோ பிரதமரை நெருங்க அனுமதிக்க கூடாது. 2019 பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜனதாவிற்கு பிரசாரம் செய்வதில் முக்கிய நபரான பிரதமர் மோடி சாலை வழியாக பிரசாரம் செய்வதை நிறுத்தவும், அதற்குப் பதிலாக பொதுக்கூட்டங்களில் பேச செய்யுவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பை இதற்கு தீவிரப்படுத்த சிறப்பு பாதுகாப்பு படையிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய விதிமுறைகள் தொடர்பாக பிரதமரின் நெருங்கிய பாதுகாப்பு குழுவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடிக்கான பாதுகாப்பு பரிந்துரைகளை மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ளது.

மாவோயிஸ்ட்கள் ஆதிக்கம் கொண்ட சத்தீஷ்கார், ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், ஓடிசா, மேற்கு வங்காளம் மாநிலங்களில் பிரதமர் மோடி பயணம் மேற்கொள்ளும் போது அதிஉயர் உஷார் நிலையில் இருக்க வேண்டும் என்று மாநில போலீசுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *