ஸ்டெர்லைட் ஆலையை மூடியிருக்கக் கூடாது! சாமியார் பாபா ராம்தேவை ஓடவிட்ட நெட்டிசன்கள்

Read Time:5 Minute, 31 Second

புதுடெல்லி,

உலகளவிலுள்ள சதிகாரர்களால் போராட்டம் தூண்டிவிடப்பட்டு ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது என்ற சாமியார் பாபா ராம்தேவை நெட்டிசன்கள் ஓடவிட்டுள்ளனர்.

‘சர்வதேச மோசடியாளருடன், இந்திய மோசடியாளார் சந்திப்பு’

ராம்தேவிற்கு எதிராக அவருடைய டுவிட்டரிலே பதில் கொடுக்கப்பட்டு வருகிறது.

தூத்துக்குடியில் செயல்பட்ட ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை விரிவாக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தும், ஆலையில் இருந்து வெளியேறும் புகை, கழிவுநீரால் சுற்றுச்சூழல், நிலத்தடிநீர் பாதிக்கப்படுவதைக் கண்டித்தும் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரியும் பொதுமக்கள் நீண்ட காலம் போராடினார்கள். கடந்த மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மக்களின் போராட்டம் விஸ்தரித்தது. பல்வேறு தரப்பில் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது. இதில் 100வது நாளான மே 22ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகைப் போராட்டம் நடத்தச் சென்றபோது போலீஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு. இதில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர், 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இச்சம்பவத்திற்கு இந்தியா மட்டுமின்றி உலகளவில் எதிர்ப்புகளும், கண்டனும் எழுந்தது. இதனையடுத்து ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு உள்ளது. போராட்டத்தின் போது உயிரிழப்புகளால் மக்களின் மனதில் காயம் ஆறாத நிலையில் இதுதொடர்பான வழக்குகள் ஐகோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது. மறுபுறம் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்க வேண்டும் என்ற ஸ்டெர்லைட் செயல்படுகிறது.

இந்நிலையில் பிரபல சாமியார் பாபா ராம்தேவ், லண்டனில் ஸ்டெர்லைட் ஆலையின் உரிமையாளர் அனில் அகர்வாலை சந்தித்து பேசியுள்ளார். சந்திப்பு தொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்ட செய்தியில் “லண்டன் பயணத்தின்போது அனில் அகர்வாலை சந்தித்து பேசினேன். லட்சக்கணக்காண வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியின் மூலம் தேசத்தை கட்டமைப்பதில் அவருடைய பங்களிப்பிற்கு மதிப்பளிக்கிறேன். தென் இந்தியாவில் உள்ள வேதாந்தா ஆலைக்கு எதிராக அப்பாவி மக்கள் மூலம் உலகளவிலுள்ள சதிகாரர்கள் கிளர்ச்சியை ஏற்படுத்தி உள்ளனர். தொழிற்சாலைகள்தான் தேசத்தினுடைய வளர்ச்சிக்கு கோயில்கள். அவைகளை மூடக்கூடாது,” என பதிவிட்டுள்ளார். பாபா ராம்தேவின் இந்த டுவிட்டர் பதிவிற்கு பதிலடிகள் கொடுக்கப்பட்டு வருகிறது.

செந்தில் சந்திரசேகர்: “ஆலையை குஜராத் அல்லது உத்தரபிரதேசத்திற்கு கொண்டு செல்லுங்கள். பொதுமக்களின் சடலத்தின் மீது வளர்ச்சி எதுவும் செய்ய வேண்டாம், தமிழ்நாட்டை விடுங்கள். உங்களுடைய செயல் மக்களுடைய வாழ்வாதாரத்தை உயராமல் தேசம் வளர்ச்சி என்பது, இனிப்பு என எழுதிய காகிதத்தை இனிப்பு சுவைக்காக சாப்பிடுவது போன்றுள்ளது,”என விமர்சனம் செய்துள்ளார்.

செந்தில் குமார்: “ஒரு பெருநிறுவனம் மற்றொரு பெருநிறுவனத்திற்கு ஆதரவு தெரிவிப்பது ஆச்சரியம் அளிக்கவில்லை!” 1993ம் ஆண்டு ரத்னகிரியில் ஆலைக்கான கட்டுமானத்திற்கு தடை விதிக்கப்பட்டது. இப்போது நீங்கள் ஏற்கனவே திட்டமிட்டப்படி ஆலையை மராட்டத்திற்கு திரும்ப கொண்டு சென்றால் அதனை வரவேற்கிறோம் என பதிவிட்டுள்ளார்.

சத்யா: ஸ்டெர்லைட் ஆலை அரசின் அனைத்து விதிமுறைகளையும் மீறியுள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா? ஆலையை குஜராத்திற்கு கொண்டு சென்றால் மிக்க மகிழ்ச்சி, இந்த ஆலை செல்வதன் காரணமாக ஏற்படும் வேலை இழப்பை பற்றி நாங்கள் கவலைப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

வீரமங்கை ராணி வேலு நாச்சியார்: “ஆலையை உங்களுடைய மாநிலத்திற்கு கொண்டு சென்றுவிடுங்கள். கடவுளே கூறினாலும் ஆலை எங்கள் மாநிலத்தில் வேண்டாம். குஜராத் மற்றும் கேரள மாநிலங்களில் இந்த ஆலை ஏன் அனுமதிக்கப்படவில்லை? 1993ல் மராட்டியத்தில் அனுமதிக்கப்படவில்லை என்பது உங்களுக்கு தெரியுமா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

சர்வதேச ஏமாற்று பேர்வழியை சந்தித்த இந்திய ஏமாற்று பேர்வழி என பாபா ராம்தேவை கடுமையாக விமர்சனம் செய்து, கேள்விகளுடன், பதிலடி கொடுத்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *