1975 எமர்ஜென்சியைவிட மோசமான சூழ்நிலை நிலவுகிறது யஷ்வந்த் சின்ஹா விளாசல்

Read Time:7 Minute, 50 Second

புதுடெல்லி,

இந்தியாவில் மோடி தலைமையிலான ஆட்சியில் 1975 எமர்ஜென்சியைவிட மோசமான சூழ்நிலை நிலவுகிறது என்று முன்னாள் பா.ஜனதா தலைவர் யஷ்வந்த் சின்ஹா விமர்சனம் செய்துள்ளார்.

1975ம் ஆண்டு ஜூன் 25ந் தேதி, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, நாடு முழுவதும் நெருக்கடி நிலையை பிரகடனம் செய்தார். அதன் நினைவு நாளை பா.ஜனதா கருப்பு நாளாக அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி மத்திய மந்திரி அருண் ஜெட்லி எழுதிய கட்டுரை கடும் விமர்சனத்திற்கு உள்ளனது. அருண் ஜெட்லி முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை, ஜெர்மனி சர்வாதிகாரி ஹிட்லருடன் ஒப்பிட்டார்.

அருண் ஜெட்லி எழுதிய கட்டுரையில், எமர்ஜென்சியின் போது எதிர்க்கட்சி தலைவர்கள் சிறையிடப்பட்டார்கள். பத்திரிக்கை சுதந்திரம் நசுக்கப்பட்டது. கட்டாயமாக கருத்தடை செய்யப்பட்டது. இதேபோன்று 1933ல் நாஜி ஜெர்மனியிலும் நடந்தது. ஹிட்லரும், இந்திரா காந்தியும் அரசியலமைப்பை ரத்து செய்தார்கள். அவர்கள், ஜனநாயகத்தை சர்வாதிகாரமாக மாற்றுவதற்கு குடியரசு அரசியலமைப்பை பயன்படுத்தினார்கள் என பட்டியலிட்டார்.
அரசியல் சாசன சட்டப்பிரிவு 352ன் கீழ் அவசரநிலைப் பிரகடனம் மேற்கொண்ட இந்திரா காந்தி, இதில் அடிப்படை உரிமைகளுக்கான 359ம் பிரிவை முடக்கினார், செயலிழக்கச் செய்தார். இதுபோன்று ஹிட்லரும் ஜெர்மனி அரசியல் சட்டம் 48ம் பிரிவை சுட்டிக்காட்டி, மக்களைப் பாதுகாப்பது என்ற பெயரில் சர்வாதிகாரச் செயல்களை நியாயப்படுத்தினார் எனவும் குறிப்பிட்டார்.

காங்கிரஸ் பதிலடி

அருண் ஜெட்லியின் கருத்தை விமர்சனம் செய்த காங்கிரஸ் ஒப்பீடு மிகவும் மோசமானது என கண்டனம் தெரிவித்துள்ளது.

அருண் ஜெட்லிக்கு பதிலடி கொடுத்துள்ள காங்கிரஸ் தலைவர் ஆனந்த் சர்மா டுவிட்டரில் வெளியிட்ட தகவலில், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவருடைய காலத்தில் மிகப்பெரிய தலைவராக இருந்தார். ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்ட பிரபலமான பிரதமர். அருண் ஜெட்லி இந்திரா காந்தியை ஹிட்லருடன் ஒப்பிடுவது அபத்தமானது, மூர்க்கத்தனமானது. வரலாற்றை திரிப்பதாகும். இந்திரா காந்தியின் அரசை அரசியலமைப்பற்ற முறையிலும், ஜனநாயகமற்ற முறையிலும் குலைக்க முயற்சிசெய்யப்பட்டது. எமர்ஜென்சி சரியான பாதையில் இருந்து விலகலாகும், இந்திரா காந்தியும் இதற்கு வருத்தம் தெரிவித்தார். அருண் ஜெட்லி மறதியால் பாதிக்கப்பட்டுள்ளார்.
சர்வாதிகாரிகள் ஒருபோதும் தேர்தலை நடத்தவில்லை. இந்திரா காந்தி நெருக்கடி நிலையை விலக்கிய பின்னர் சுதந்திரமான தேர்தல்களையும் நடத்தினார். தேர்தலில் தோல்வியை தழுவினார். அதனையும் ஏற்றுக்கொண்டார். ஹிட்லரை பற்றியே அருண் ஜெட்லி நினைப்பது புரிந்துக்கொள்ளக்கூடியது. அவர் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜனதா பள்ளியில் இருந்து வந்தவர். அவர்கள் ஹிட்லரையும், சர்வாதிகாரத்தையும் கொண்டாடுபவர்கள். இதுதொடர்பான விவாதம் 1980ம் ஆண்டை முடித்து வைக்கப்பட்டது. இந்திய மக்கள் அவரை பெரும்வாரியான மெஜாரிட்டியுடன் ஆட்சியில் அமர்த்தினார்கள். அவருடைய எதிராளிகளை குப்பையில் எறிந்தார்கள் என தெரிவித்தார்.

மேலும் ஜனநாயகம் விவகாரத்தில் மத்திய பா.ஜனதா அரசை விமர்சனம் செய்த ஆனந்த் சர்மா, இந்திரா காந்தியின் பங்களிப்பு, துணிச்சல் மற்றும் தியாகத்தை இத்தேசத்தின் வரலாறு குறிப்பிடுகிறது. வங்காளதேச விடுதலை இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் எந்தஒரு ராணுவத்திற்கும் கிடைக்காத வெற்றி, அதனை மறக்க முடியாது. இந்தியா அணு ஆயுத வல்லமை கொண்ட நாடாகியது, விண்வெளியிலும் தடம் பதித்தது. இந்திரா காந்தியின் வீரமரணத்தை பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். அவமதிக்கவோ, சிறுமைப்படுத்தவோ முடியாது. இந்திய மக்கள் அவரை ஹீரோவாகவே நினைவில் கொள்வார்கள் எனவும் குறிப்பிட்டார். இவ்விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் மற்றும் பா.ஜனதாவினர் இடையே வார்த்தை மோதல் நேரிட்டுள்ளது.

மோசமான சூழ்நிலை

இந்நிலையில் பா.ஜனதாவில் இருந்து விலகிய முன்னாள் மத்திய நிதிமந்திரி யஷ்வந்த் சின்ஹா என்டிடிவி ஆங்கில தொலைக்காட்சிக்கு பேட்டியளித்து பேசுகையில், 1975ல் காங்கிரஸ் அரசால் நாட்டில் அமல்படுத்தப்பட்ட எமர்ஜென்சியைவிட மோசமான சூழ்நிலைதான் இப்போது நிலவுகிறது. 43 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திரா காந்தியால் பிரகடனம் செய்யப்பட்ட எமர்ஜென்சி 2 ஆண்டுகளில் நீக்கப்பட்டது. இப்போதைய தலைமுறையினர் அதனை புதுப்பித்து பார்ப்பது கிடையாது. அவர்களுக்கு அது வரலாறு மட்டும்தான்.
எமர்ஜென்சியை பிரகடனம் படுத்திய காரணத்திற்காக 1977ல் நடந்த தேர்தலில் தோல்வியை தழுவினார் இந்திரா காந்தி. இப்போது இது வரலாற்றின் பகுதியாக மாறிவிட்டதால், அது குறித்து விவாதிக்க முடியாது. இப்போது பாரதீய ஜனதா ஆட்சியில் நாட்டில் நிலவும் சூழல் எமர்ஜென்சியை காட்டிலும் மோசமாக இருக்கிறது. வரலாற்றில் எப்போதோ நடந்த சம்பவத்தை பா.ஜனதாவினர் சர்ச்சையாக்கி வருகிறார்கள். இது தேர்தலை குறிவைத்துதான். 1975 எமர்ஜென்சியைப் போல், இப்போது எதிர்க்கட்சித் தலைவர்கள் சிறைக்குள் வைக்கப்படவில்லை, இருப்பினும் மோசமான சூழ்நிலைதான் உள்ளது.

மக்கள் மிகவும் பயந்து உள்ளார்கள். அவர்கள் பேசுவதற்கு அச்சம் கொள்கிறார்கள். இதில் மத்திய அமைச்சர்களுக்கு கூட விதிவிலக்கு கிடையாது. இது இந்திரா காந்தியால் பிரகடனம் செய்யப்பட்ட எமர்ஜென்சியைவிட மோசமானதாக இருக்கிறது.

இப்போது உள்ள பா.ஜனதா அரசில் பல்வேறு பத்திரிக்கையாளர்கள் நெருக்கடியை சந்திக்கிறார்கள், அவர்கள் பத்திரிக்கை நிறுவனம் மூலம் வெளியே அனுப்பப்பட்டுள்ளனர். இன்று நிலையானது மிகவும் மோசம் அடைந்துள்ளது. மீடியாக்கள் முழுவதுமாக மக்களுக்குத் தவறானவற்றை சித்தரிக்கும் தோற்றத்தை உண்டாக்குகின்றன. முற்றிலும் அடிபணிய செய்யப்பட்டு அவர்கள் ஏற்படுத்திய கோட்டில் நிற்க செய்யப்பட்டு உள்ளது,” என்று விமர்சனம் செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *