இந்தியாவிற்கு அமெரிக்கா மிரட்டல்! வர்த்தக போரை தீவிரப்படுத்தும் அமெரிக்கா

Read Time:9 Minute, 4 Second

ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று இந்தியாவிற்கு அமெரிக்கா மிரட்டல் விடுத்தது.

கடந்த 2015-ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தலைமையிலான அந்நாட்டு அரசு ரஷியா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, ஜெர்மனி ஆகிய வல்லரசு நாடுகளுடன் இணைந்து ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொண்டது. ஒப்பந்தப்படி, அணுசக்தியை ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்துவோம் என்று ஈரான் உறுதியளித்தது. அதற்கு பதிலாக, ஈரான் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளை விலக்கிக் கொள்ளப்பட்டன. ஆனால், அமெரிக்காவில் டொனால்டு டிரம்ப் ஆட்சி அமைந்த பின்னர் அதிரடியான மாற்றம் ஏற்பட்டது. அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக டொனால்டு டிரம்ப் அரசு மே மாதம் அறிவித்தது.

மேலும், ஈரான் மீது முன்பைவிட அதிகமாக பொருளாதாரத் தடைகளை விதிக்க இருப்பதாகவும் குறிப்பிட்டது. அதனைத் தொடர்ந்து ஈரான் மீது பொருளாதர தடைகளை அமெரிக்கா விதித்து வருகிறது. இதனால், ஈரான் மீண்டும் சர்வதேச அளவில் பொருளாதாரரீதியாக தனிமைப்படுத்தப்பட இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அமெரிக்கா மிரட்டல்

இந்நிலையில் நவம்பர் 4-ம் தேதிக்கு பிறகு ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று இந்தியா, சீனா உள்ளிட்ட நட்பு நாடுகளுக்கு அமெரிக்கா மிரட்டல் விடுத்துள்ளது. இவ்விவகாரத்தில் எந்தஒரு நாட்டிற்கும் சலுகை என்பது கிடையாது, தெக்ரானுடன் எந்தஒரு பரிவர்த்தனையை மேற்கொண்டாலும் பொருளாதார தடையை விதிக்க நேரிடும் எனவும் அமெரிக்கா கூறியுள்ளது.
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், “இந்தியா, சீனா உள்பட ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் அனைத்து நாடுகளுக்கும் உடனடியாக நிறுத்திக் கொள்ளுமாறு ஏற்கெனவே கேட்டுக்கொண்டோம். கச்சா எண்ணெய் வாங்குவதை கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தி, நவம்பர் மாதத்திற்குள் முழுமையாக நிறுத்த வேண்டும்.

இவ்விவகாரத்தில் எந்தஒரு எதிர்க்கேள்வியுமின்றி அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பதை தெரிவித்துவிட்டோம்.

அந்நாட்டு பிரதிநிதிகள் உடனான சந்திப்பின்போது ஏற்கனவே இதனை வலியுறுத்திவிட்டோம். இனிமேல் நடைபெறவுள்ள இருதரப்பு சந்திப்புகளின் போதும் வலியுறுத்துவோம். எங்களுடைய நடவடிக்கைக்கு பெரும்பாலான நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

எங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்காத நாடுகள் மீது பொருளாதார தடைகள் விதிக்கவும் தயங்க மாட்டோம். வரத்தக ரீதியாக அந்த நாடுகளை முடக்குவதை தவிர வேறு வழியில்லை,” என்று கூறியுள்ளனர். ஈரானுக்கு பெரும் நெருக்கடியை கொடுக்கும் வகையில் பிற நாடுகளை அமெரிக்கா மிரட்டுகிறது.

இந்தியாவின் இறக்குமதி எவ்வளவு?

ஈராக், சவுதி அரேபியாவிற்கு அடுத்து ஈரானில் இருந்துதான் இந்தியா அதிகமான எண்ணெய் இறக்குமதி செய்கிறது.
கடந்த ஏப்ரல் 2017-ல் இருந்து ஜனவரி 2018 வரையில் (2017-18 நிதியாண்டின் முதல் 10 மாதங்கள்). இந்தியாவிற்கு ஈரான் 18.4 மில்லியன் டன்கள் கச்சா எண்ணெயை சப்ளை செய்துள்ளது.

இந்தியாவுக்கான பாதிப்பு

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள், தங்கள் வர்த்தகம், நிதி தேவையை கருத்தில் கொண்டு உற்பத்தியை குறைத்து செயற்கையாக விலையை உயர்த்துகின்றன. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. அதிக அளவு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடான இந்தியா, இதற்காக அதிக தொகையை செலவு செய்கிறது. அந்நியச் செலவாணியை இழந்து, ரூபாய் மதிப்பு சரிவையும் ஏற்படுத்தி விடுகிறது.

இந்நிலையில் அமெரிக்காவின் நடவடிக்கையால் இந்தியாவில் பெட்ரோலியப் பொருள்களின் விலை மேலும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா விதிக்கும் பொருளாதாரத் தடைகளால் ஈரானில் இருந்து இந்தியாவும் எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்படும். இதனால், வேறு நாட்டில் இருந்து கூடுதல் விலை கொடுத்து கச்சா எண்ணெய் வாங்க வேண்டியது இருக்கும். இதனால் உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை மேலும் உயரக்கூடும்.

ஈரானில் உள்ள சாப்ஹர் துறைமுகத்தை மேம்படுத்த அந்நாட்டுடன் இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்தத் துறைமுகப் பணிகள் முடிந்தால் பாகிஸ்தானை தவிர்த்துவிட்டு இந்தியாவால் மத்திய ஆசிய நாடுகளை கடல் போக்குவரத்தில் அணுக முடியும். மேலும் ஈரானுடன் இந்தியா நேரடியாக அதிக அளவில் ஏற்றுமதி, இறக்குமதியில் ஈடுபட முடியும். இதில் இந்தியா கோடிக்கணக்கான பணத்தை முதலீடு செய்துள்ளது. ஈரான் மீது மீண்டும் சர்வதேச பொருளாதாரத் தடை விதிக்கப்படுவதால் சாப்ஹர் துறைமுக ஒப்பந்தமும் எதிர்வினையை சந்திக்கும் என பார்க்கப்படுகிறது.

பேச்சுவார்த்தை

இந்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் மற்றும் பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோர் விரைவில் அமெரிக்கா செல்கின்றனர். அப்போது இந்த விவகாரம் தொடர்பாக அந்நாட்டு அமைச்சர்கள் மட்டத்தில் பேச்சவார்த்தை நடத்தக்கூடும் என தெரிகிறது.

இந்தியா மாற்று நடவடிக்கை

அமெரிக்கா, ஈரான் மீது விதித்துள்ள சில தடை நடவடிக்கைகள் ஆகஸ்ட் மாதம் 6-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இதற்கிடையே அமெரிக்காவின் நடவடிகையில் இருந்து பாதிக்கப்படாமல் ஈரானில் இருந்து எண்ணெயை தொடர்ந்து இறக்குமதி செய்ய இந்தியா நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.
2010 ஆம் ஆண்டில், இந்திய ரிசர்வ் வங்கி ஈரானுடனான பரிவர்த்தனைகளை கையாள பிராந்திய அமைப்பான ஆசிய கிளியரிங் யூனியன்யை நிறுத்திவிட்டது. பின்னர் 2012 ஜனவரியில், ஈரான் இந்தியாவின் உள்ளூர் நாணயம் ரூபாய்யை ஏற்றுக் கொள்ள சம்மதம் தெரிவித்தது, அன்றிலிருந்து பகுதியளவு தொகையை ரூபாயாகவே கொடுத்து வருகிறது. இந்நடவடிக்கையால் டாலர் பற்றாக்குறை பிரச்சினை சிக்கல் குறைந்துள்ளது.

இப்போது அமெரிக்காவின் அதிரடிக்கு மத்தியில் மொத்த தொகையையும் இந்திய ரூபாயில் கொடுக்கும் வகையில் ஈரானுடன் ஒப்பந்தம் செய்யவும் இந்தியா தயாராகி வருகிறது.

ஈரான் பதிலடி

இதற்கிடையே எண்ணெய் சந்தையில் இருந்து அவ்வளவு எளிதாக எங்களை விலக்கி வைக்க முடியாது என்று ஈரான் பதிலடி கொடுத்துள்ளது.

“அமெரிக்கா சொல்வது போன்று எங்களை அவ்வளவு எளிதாக சர்வதேச எண்ணெய் சந்தையிலிருந்து எங்களை விலக்கி வைக்க முடியாது. ஒரு நாளைக்கு சுமார் 2.5 மில்லியன் பேரல் எண்ணெய்யை உலக நாடுகளுக்கு ஈரான் ஏற்றுமதி செய்து வருகிறது. எங்களை சர்வதேச சந்தையிலிருந்து சில மாதங்களில் நீக்கிவிடலாம் என்று நினைப்பது சாத்தியமற்றது,” என்று ஈரான் எண்ணெய் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *