காவிரி விவகாரம்: அடம்பிடிக்கும் கர்நாடகா, மீண்டும் உச்சநீதிமன்றம் செல்கிறது

Read Time:6 Minute, 48 Second

ஜூலை முதல் வாரத்தில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் நடைபெற உள்ளநிலையில், கர்நாடகம் மீண்டும் உச்சநீதிமன்றம் செல்ல முடிவு செய்துள்ளது.

காவிரி நதிநீர் பங்கீடு வழக்கில் கடந்த பிப்ரவரி 16-ம் தேதி உச்ச நீதிமன்றம் இறுதித்தீர்ப்பு வழங்கியது.

கர்நாடகத்துக்கு ஏற்கனவே இருந்த அளவில் 14 டிஎம்சி உயர்த்தி 284.75 டிஎம்சி நீரும், தமிழகத்துக்கு 419 டிஎம்சி என்ற அளவில் இருந்து 404.2 டிஎம்சியாகவும் குறைக்கப்பட்டது. கேரளாவுக்கு 30 டிஎம்சி, புதுச்சேரிக்கு 7 டிஎம்சி நீரில் மாற்றம் செய்யவில்லை. காவிரி மேலாண்மை ஆணையத்தையும், காவிரி ஒழுங்காற்று குழுவையும் அமைக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

பல்வேறு தாமதங்களுக்குப் பின், மத்திய அரசு ஜூன் 1-ம் தேதி இறுதித்தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டு, காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக்குழுவை அமைத்து. 2 அமைப்புகளுக்கும் உறுப்பினர்களை நியமிக்க பிரதிநிதிகளின் பெயர்களை அனுப்புமாறு கர்நாடகா, தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. இதில் தமிழகம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் தங்களின் உறுப்பினர்களை அறிவித்த நிலையில், கர்நாடகம் மட்டும் அறிவிக்கவில்லை.

கடந்த 22-ம் தேதி காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நீர் ஒழுங்காற்று குழு ஆகியவற்றுக்கு தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களை மத்திய அரசு நியமித்தது. காவிரி மேலாண்மை ஆணையத்துக்குத் தலைவராக மசூத் ஹூசைன் நியமிக்கப்பட்டார். காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழுவுக்கு தலைவராக நீர் மேலாண்மை அமைப்பின் தலைமை பொறியாளர் நவின் குமார் நியமிக்கப்பட்டார். மத்திய அரசின் செயலுக்கு கர்நாடக முதல்-அமைச்சர் குமாரசாமி எதிர்ப்பு தெரிவித்தார்.

இதற்கிடையே கடந்த 25-ம் தேதி குமாரசாமி பெங்களூருவில் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர் காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடக பிரதிநிதியாக நீர்வளத் துறை செயலர் ராகேஷ் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். காவிரி நீர் ஒழுங்காற்று குழுவுக்கு கர்நாடக பிரதிநிதியாக தலைமை பொறியாளர் பிரசன்னா செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து ஆணையத்தின் முதல் கூட்டம் வரும் ஜூலை 2-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.

கர்நாடகம் முடிவு

இந்நிலையில் காவிரி விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாக ஆலோசனையை மேற்கொள்ள கர்நாடகம் முடிவு செய்தது. காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் பங்கேற்பதா, புறக்கணிப்பதா, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதா என்பது குறித்து ஆலோசிக்க அனைத்துக் கட்சிகள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி பெங்களூருவில் அனைத்துக் கட்சிகள் கூட்டம் முதல்-அமைச்சார் குமாரசாமி தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் துணை முதல்-அமைச்சார் ஜி.பரமேஸ்வரா, எதிர்க்கட்சித் தலைவர் எடியூரப்பா, மத்திய அமைச்சர் சதானந்த கவுடா, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள், எம்.பி. வீரப்பமொய்லி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்று குழுவிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது என முடிவு செய்யப்பட்டது. காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கவும், மாற்றவும் பாராளுமன்றத்திற்கு உரிமை உள்ளது என தெரிவிக்கப்பட்டது.

கர்நாடகம் சொல்வது என்ன?

அனைத்துக் கட்சிகள் கூட்டத்திற்கு பின்னர் அம்மாநில நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார்.

சிவக்குமார் பேசுகையில்,

ஜூலை 2-ம் தேதி நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் கர்நாடக மாநில பிரதிநிதிகள் கலந்துக்கொள்வார்கள். அவர்கள் எங்களுடைய கருத்துக்களையும், எண்ணங்களையும் எடுத்துரைப்பார்கள். காவிரி விவகாரத்தில் கர்நாடகம் மற்றும் எங்கள் மாநில விவசாயிகளின் நலனை பாதுகாக்கும் விதமான நிலைப்பாட்டை தெரிவிப்பார்கள்.

பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் காவிரி விவகாரத்தை எழுப்ப அனைத்து எம்பிக்களுக்கும் கோரிக்கையை விடுத்தோம், அவர்களும் கட்சி பேதமின்றி ஒருமனதாக எழுப்ப ஒப்புக்கொண்டுள்ளனர்.

காவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்றுக் குழுவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு சார்பில் வழக்கு தொடரப்படும். கர்நாடக மூத்த வழக்கறிஞர்கள் பாலி எஸ் நாரிமன், மோகன் கதார்கி ஆகியோரின் கருத்துக்களை கேட்டு கர்நாடக அரசு நகரும். இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் எப்படி அணுகுவது, எந்த அடிப்படையில் அணுகுவது குறித்து அவர்கள் முடிவு செய்வார்கள்.

காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவில் கர்நாடகம் பாதிக்கப்பட்டு உள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பதற்கு முன்னதாக அதிலுள்ள ஷரத்துக்கள் தொடர்பாக பாராளுமன்றத்தில் ஆலோசிக்கப்பட வேண்டும். என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *