தமிழகத்துக்கு 31 டிஎம்சி தண்ணீரை திறக்க கர்நாடகாவுக்கு காவிரி ஆணையம் உத்தரவு

Read Time:5 Minute, 42 Second

காவிரியிலிருந்து தமிழகத்திற்கு ஜூலையில் 31.24 டிஎம்சி தண்ணீரை திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.

காவிரி விவகாரத்தில் தமிழக அரசு மேற்கொண்ட தீவிர சட்டப் போராட்டத்தின் காரணமாக உச்சநீதிமன்றம் உத்தரவின் பேரில், சம்பந்தப்பட்ட மாநிலங்கள் காவிரி நீரை பகிர்ந்துகொள்வதற்காக காவிரி மேலாண்மை ஆணையத்தையும், ஒழுங்காற்று குழுவையும் மத்திய அரசு அமைத்தது.

காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு எதிராக உச்சநீதிமன்றம் செல்ல கர்நாடகம் திட்டமிட்டுள்ள நிலையில், ஆணையத்தின் முதல் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் மத்திய நீர்வள ஆணைய தலைவர் மசூத் உசேன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தமிழகம், கர்நாடகம், கேரளா மற்றும் புதுச்சேரி மாநில அதிகாரிகள் கலந்துக்கொண்டார்கள். கூட்டத்தில் காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான அனைத்து விஷயங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. சுமார் 4 மணி நேரங்கள் நடைபெற்ற கூட்டத்தில் தமிழகத்திற்கு ஜூலை மாதம் திறக்க வேண்டிய தண்ணீரை திறக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

இதனையடுத்து மசூத் உசேன் செய்தியாளர்களிடம் பேசுகையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல்கூட்டம் நல்லமுறையில் நடந்தது. நீண்ட சட்ட போராட்டத்திற்கு பிறகு காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டதில் மகிழ்ச்சி. இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணமாகும். இனிமேல் காவிரி விவகாரத்தில் சட்டபூர்வமான முடிவுகள் சரியான முறையில் எடுக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என நம்புகிறோம். காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான அனைத்து விஷயங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

ஆணையத்தின் விதிகள், செயல்பாட்டு முறைகள், கூட்டங்களுக்கான நடைமுறைகள், கட்டமைப்பு, அணைகளில் நீர் இருப்பு மற்றும் திறப்பு அளவு போன்ற காரணிகள் தொடர்பாக ஆலோசித்தோம். இந்த ஆண்டு போதுமான அளவு பருவமழை பெய்து வருகிறது. ஜூன் மாதத்திற்கு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடகாவில் போதுமான மழை பெய்துள்ள நிலையில் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவுபடி தண்ணீர் திறந்து விட்டுள்ளது.

தமிழகத்திற்கு திறக்க வேண்டிய அளவை விடவும் ஜூன் மாதத்தில் கூடுதலாக 3 டிஎம்சி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாக கர்நாடகா சார்பில் தெரிவிக்கப்பட்டு, விவரங்கள் சமர்பிக்கப்பட்டது. கர்நாடகாவின் அறிக்கையை ஆணையம் ஏற்றுக் கொண்டது. எனவே ஜூலை மாதத்துக்கு 3 டிஎம்சி தண்ணீர் போக மீதமுள்ள தண்ணீரை திறக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளோம். இந்த முடிவை கூட்டாகவே எடுத்துள்ளோம்’’ எனக் கூறினார். ஜூலையில் 31.24 டிஎம்சி தண்ணீரை திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படி ஜூலை மாதத்தில் தமிழகத்துக்கு 34 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும்.

மதிக்க வேண்டும்

காவிரியில் தண்ணீர் திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் கர்நாடகா மறுத்தது. இதுதொடர்பான கேள்விக்கு பதில் அளித்து பேசிய மசூத் உசேன், சட்டபூர்வமாக எடுக்கப்பட்ட முடிவை சம்பந்தப்பட்ட மாநிலங்கள் கட்டாயம் நிறைவேற்ற வேண்டும் என்றார்.

கர்நாடகத்தில் மழைக்காலம் நன்றாக உள்ளது. அதனால், 1 வருடத்துக்கான தீர்ப்பை ஒரே கட்டத்தில் வழங்காமல், தேவைப்படும் நேரத்தில் கூட்டம் நடத்தி அவ்வப்போது கூட்டங்கள் கூட்டி அனைவரிடமும் கேட்டறிந்து உத்தரவுகள் பிறப்பிக்கப்படும். ஆணையத்தின் உத்தரவை 4 மாநிலங்களும் மதித்து ஒத்துழைப்பு வழங்கும் என நம்புகிறோம். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி இந்த ஆணையத்துக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. உத்தரவு என்பது மதிப்பதற்காக. அதனால், எங்களது உத்தரவை மாநிலங்கள் மதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

மேலும் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு எதிராக கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என்றார். தொடக்கத்திலேயே நம்பிக்கை இழந்து பேச விரும்பவில்லை என்று குறிப்பிட்டார்.

காவிரி ஒழுங்காற்று குழு ஆணைய அடுத்த கூட்டம் வரும் 5-ம் தேதி நடைபெறும் எனவும் மசூத் உசேன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *