பென்ஸ் காருக்கும், பாலுக்கும் ஒரேமாதிரி வரிவிதிப்பு முடியாது – பிரதமர் மோடி

Read Time:7 Minute, 25 Second

நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமலுக்கு வந்து ஒரு ஆண்டு நிறைவடைகிறது. கடந்த ஆண்டு ஜுலை1-ம் தேதி அமலுக்கு வந்தது. ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையில் மத்தியில் ஆளும் பா.ஜனதா புகழ்ந்து வருகிறது, காங்கிரஸ் விமர்சனம் செய்து வருகிறது.

இந்நிலையில் சுயராஜ்யம் இணையதளத்துக்கு பேட்டியளித்து பேசிய பிரதமர் மோடி, நாடு முழுவதும் ஒரே மாதிரியாக ஜிஎஸ்டி வரி விதிப்பு என்ற காங்கிரஸின் கோரிக்கை சாத்தியமில்லை. பென்ஸ் காருக்கும், பாலுக்கும் ஒரேமாதிரி வரிவிதிப்பு முடியாது என குறிப்பிட்டார்.

பிரதமர் மோடி பேசுகையில், பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்து வரிமுறையில் வரலாற்று மாற்றங்களை செய்துள்ளது. சரக்கு மற்றும் சேவை வரியை அறிமுகம் செய்து ஒரு ஆண்டை நிறைவடையும் நிலையில், மறைமுக வரி செலுத்துவோர் எண்ணிக்கை 70 சதவீதம் உயர்ந்துள்ளது. சோதனைச் சாவடிகள் அகற்றப்பட்டுள்ளது. 17 வரிகள், 23 கூடுதல்வரிகள் இணைக்கப்பட்டு ஒரேவரியாக மாற்றப்பட்டுள்ளன. உற்பத்தி வரி, சேவை வரி, வாட் வரி போன்றவை நீக்கப்பட்டு எளிமையான மறைமுகவரி அமல்படுத்தப்பட்டுள்ளது. இன்ஸ்பெக்டர் ராஜ்ஜியத்தை ஒழித்திருக்கிறோம்.
மாநில அரசுக்கள், வணிகர்கள் மற்றும் பிறர் தரப்பில் கொடுக்கப்பட்ட கருத்துக்களை கொண்டு வரிவிதிப்பு முறை சீரமைக்கப்பட்டு உள்ளது.

ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையில் ஒரே மாதிரியான வரி விதிப்பு என்பது சொல்வதற்கு எளிமையானதாக இருக்கும். ஆனால் உணவுப்பொருட்களுக்கு ஜீரோ வரிவிதிப்பு என்பதை கொண்டிருக்க முடியாது.

பென்ஸ் காருக்கும், பாலுக்கும் ஒரேமாதிரி வரி இருக்க முடியுமா?

காங்கிரஸ் கட்சியில் உள்ள நண்பர்கள் ஜிஎஸ்டி வரியில் ஒரு மாதிரியான வரிவிதிப்பு வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறார்கள். அதை ஏற்கிறோம். மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பாலுக்கும், பணக்காரர்கள் பயன்படுத்தும் மெர்சடீஸ் பென்ஸ் காருக்கும் ஒரேமாதிரியான வரிவிதிக்க முடியுமா? ஜிஎஸ்டி வரியில் உணவுப்பொருட்கள் பலவற்றுக்கு வரியின்றி, சிலவற்றுக்கு 5 சதவீதமும், சில பொருட்களுக்கு 18 சதவீதமும் விதித்துள்ளோம். அனைத்து உணவுப்பொருட்களுக்கும் ஒரேமாதிரியான வரி விதிக்கவில்லை.

சுதந்திரம் பெற்றதில் இருந்து 66 லட்சம் வரிசெலுத்துவோர்தான் இருந்தனர். ஆனால், ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்டதை அடுத்து 48 லட்சம் நிறுவனங்கள் புதியதாக இணைந்து உள்ளது. இதுவரை 350 கோடி இன்வாய்ஸ், 11 கோடி ரிட்டன்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கையைப் பார்த்தால், ஜிஎஸ்டி வரி குழப்பமானதாக தெரிகிறதா? நாடு முழுவதும் மாநிலங்களின் எல்லையில் இருந்த சோதனை சாவடிகள் அகற்றப்பட்டுள்ளது. அங்கு வாகனங்கள் வரிசையாக நிற்கத்தேவையில்லை. இதனால், லாரி ஓட்டுநர்களின் நேரம் மிச்சமாக்கப்பட்டுள்ளது. பொருட்களை உரியநேரத்தில் கொண்டு சேர்க்க முடியும், நாட்டின் உற்பத்தியும் அதிகரித்துள்ளது.
400 வகையான பொருட்களின் வரியை குறைத்து உள்ளோம். 150 வகையான பொருட்களுக்கு வரியை நீக்கியுள்ளோம். இதனால், அன்றாடம் மக்கள் பயன்படுத்தும் பலபொருட்களின் விலை குறைந்துள்ளது என கூறியுள்ளார்.

தொழில்நுட்பத்தின் உதவியோடு இன்ஸ்பெக்டர் ராஜ்ஜியத்தை ஒழிக்க ஜிஎஸ்டி கட்டமைக்கப்பட்டு உள்ளது. பணத்தை திரும்ப செலுத்துவதில் இருந்து எல்லாம் ஆன்-லைன் மூலமாகவே நடக்கிறது எனவும் குறிப்பிட்டார் பிரதமர் மோடி.

காங்கிரஸ் விமர்சனம்

இதற்கிடையே ஜிஎஸ்டி சாதாரண மக்கள் மீதான வரி சுமையை உயர்த்தியுள்ளது என காங்கிரஸ் சாடியுள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவர், முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜிஎஸ்டியின் வடிவம், கட்டமைப்பு, வரி விகிதம், அமல்படுத்தப்பட்ட விதம் ஆகியவை குறையை கொண்டிருந்தது, இது தொழில் அதிபர்கள், வியாபாரிகள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் சாதாரண மக்கள் மத்தியில் ஜிஎஸ்டி என்பது மோசமான வார்த்தையாகியுள்ளது. ஜிஎஸ்டியால் மகிழ்ச்சியாக இருப்பதாக கருதப்படும் ஒரே பிரிவு, அசாதாரணமான அதிகாரங்களை பெற்றிருக்கும் வரி நிர்வாகம் மட்டுமே. ஜிஎஸ்டி சாதாரண மக்கள் மீதான வரி சுமையை உயர்த்தியுள்ளது; உறுதியளிக்கப்பட்டது போன்று வரிச்சுமை குறைக்கப்படவில்லை.
பல்வேறு காரணிகளில் தலைமை பொருளாதார ஆலோசகரின் அறிவுரையை நிராகரித்து ஜிஎஸ்டி மசோதா தாக்கல் செய்யப்பட்டது என கூறினார். மேலும், ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கைகள் ஒரு கோடிக்கும் அதிகமான வேலை வாய்ப்புகளை பறித்துள்ளது எனவும் குற்றம் சாட்டினார்.

ஜிஎஸ்டி வருமானம் அதிகரிப்பு

கடந்த ஜூன் மாதத்துக்கான சரக்கு – சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாயானது, அதற்கு முந்தைய மாதத்தைக் காட்டிலும் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஜிஎஸ்டி சட்டம் அமல்படுத்தப்பட்ட பின்னர் தொடர்ச்சியாக மாதந்தோறும் ஜிஎஸ்டி வரி வருவாய்க் கணக்கை வர்த்தகர்களும், தொழில் துறையினரும் தாக்கல் செய்து வருகின்றனர். அந்த வரிசையில் ஜூன் மாதத்துக்கான வரி வருவாயும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் ரூ. 95,610 கோடிக்கு இதுவரை வரி வருவாய் தாக்கலானதாகக் கூறப்படுகிறது. இதுவே மே மாத வருமானம் 94,016 கோடி ரூபாயாக இருந்தது.

2017 – 18 (மார்ச் வரையில்) 9 மாதங்களில் ஜிஎஸ்டி வருமானத்தின் சராசரி 89,885 கோடி ரூபாயாக இருந்து வருகிறது, ஜூன் மாதம் சராசரியை தாண்டியே வருவாய் கிடைத்து உள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் 1 லட்சம் கொடியை தாண்டியிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *