உயிர்குடிக்கும் வாட்ஸ்-அப் வதந்தி!

Read Time:10 Minute, 4 Second
Page Visited: 51
உயிர்குடிக்கும் வாட்ஸ்-அப் வதந்தி!

குழந்தைகள் கடத்தும் கும்பல் சுற்றி திரிவதாக ‘வாட்ஸ்-அப்’ மூலம் பரவும் வதந்தியால் இந்தியா முழுவதும் அப்பாவி மக்கள் உயிரிழக்கும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது.

குழந்தை கடத்தும் கும்பல் ஒன்று தீவிரமாக செயல்பட்டு வருகிறது, இதனால் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும், குழந்தைகள் பலர் தொடர்ந்து காணாமல் போய் வருவதாகவும் பொய்யான தகவல்கள் வாட்ஸ்–அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவுகிறது. வதந்தியால் சந்தேக நபர்களை காட்டுமிராண்டித்தனமாக தாக்கும் சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றது. பரப்பப்படும் போலியான தகவல்கள் உண்மையானதா? என்பதை யோசிக்காமல் அப்பாவி மக்கள் கொடூரமான முறையில் கும்பலால் தாக்கப்படும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது.

5 பேர் அடித்துக்கொலை

கொடூரத்தின் உச்சமாக மராட்டிய மாநிலம் துலே மாவட்டம் ரெயின்படா கிராமத்திற்கு சிலர் சென்றுள்ளனர். அவர்கள் பஸ்சில் இருந்து இறங்கியதும் கிராமத்தை சேர்ந்த சிறுமியிடம் பேச்சு கொடுக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது அவர்கள் சிறுமியை கடத்த முயற்சிப்பதாக கருதி கிராம மக்கள் கொடூரமான முறையில் தாக்குதலை நடத்தினர். பொதுமக்கள் தாக்குதலில் 5 பேர் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பலியாகினர். இதுதொடர்பாக விசாரணையை மேற்கொள்ளும் போலீஸ் 20க்கும் மேற்பட்டோரை பிடித்து விசாரித்து வருகிறது. இதற்கிடையே அங்கு நடந்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகியது. வீடியோவில், பொதுமக்கள் ஆவேசத்துடன் சிலரை அடித்து தரையில் இழுத்து செல்வதும், அவர்கள் வலி தாங்காமல் கதறுவதும் போன்ற காட்சிகள் காணப்பட்டன.தமிழகத்தில் இருவர் கொலை

குழந்தைகள் கடத்தும் கும்பல் என்ற வதந்தியால் அப்பாவிகளை கொடூரமாக தாக்குவதில் தமிழகமும் தப்பவில்லை.

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதியில் கடந்த மே மாதம் 9-ம் தேதி சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபரை, குழந்தை கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர் எனக் கருதி அப்பகுதி இளைஞர்கள் கொடூரமாக அடித்து கொன்றனர். இதேபோன்று திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலை, அத்திமூரில் குழந்தைகளை கடத்த வந்த கும்பல் என நினைத்து கோவிலுக்கு வந்த சென்னை பக்தர்களை கிராம மக்கள் கொடூரமான முறையில் தாக்கினர். அன்பின் மிகுதியால் அப்பகுதியை சேர்ந்த குழந்தைக்கு சாக்லெட் கொடுத்ததால் இந்த கொடூரம் அரங்கேறியது. இதில் 65 வயது பெண் ருக்மணியை பெண் என்று பாராமல் பலரும் தாக்கியதில் ரத்த வெள்ளத்தில் விழுந்து உயிரிழந்தார். 4 பேர் படுகாயமடைந்தனர். எந்தஒரு விசாரணையும், யோசனையும் இன்றி மக்கள் காட்டிமிராண்டித்தனமாக தாக்கியிருந்தது தெரியவந்தது.

வட மாநில கும்பல் குழந்தைகளை கடத்த முயற்சி செய்கிறது என்ற வதந்தியால் திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றது.

இதனையடுத்து குழந்தைகள் கடத்தல் சம்பந்தமாக வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என துண்டுப்பிரசுரம், ஒலிபெருக்கி, ‘வாட்ஸ்- அப்’ மூலமாகவும் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. யாரும் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம். அவ்வாறு பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் எச்சரித்தாலும் இதுபோன்ற தவறான தகவலகள் பரப்பப்பட்டு வருகிறது. பொதுமக்களும் குழந்தை கடத்தல் தொடர்பான தகவல் அதிகாரப்பூர்வமானதா? இதனை அறிவித்தது யார்? எப்போது ? எங்கே ? என்ற எந்த கேள்வியும் இன்றி அப்பாவிகளை கொடூரமான முறையில் தாக்கி வருகிறார்கள்.ஊடகங்கள் மறைக்கும் செய்தியை வெளியிடுவதாக கூறிக்கொண்டு, வெளி நாட்டிலோ, வேறு மாநிலத்திலோ நடந்த தகவலை தமிழகத்தில் நடப்பது போன்று பொய்யாக குறிப்பிட்டு பரவும் தகவலை உறுதி செய்யாமல் பகிர்ந்து வருகிறார்கள்.

குழந்தைகள் கடத்தப்படுவதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பி பொதுமக்களிடேயே அச்சத்தை ஏற்படுத்துவோர் மீது குண்டர் சட்டம் பாயும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் பரவி இருந்த இந்த சந்தேகத்தீயானது தற்போது சென்னையிலும் பரவ தொடங்கியுள்ளது.

குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் என்று நினைத்து சென்னை தேனாம்பேட்டையில் ஒடிசா மாநில வாலிபர்கள் இருவரை பொதுமக்கள் பயங்கரமாக தாக்குதல் நடத்தி காயப்படுத்திவிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக வருத்தம் தெரிவித்த சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் இடையே வதந்திகள் பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

நாம் செய்ய வேண்டியது என்ன?

இந்த சந்தேக தாக்குதலை தடுக்க காவல்துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வந்தாலும் பொதுமக்களின் பொறுப்பு மிகையானது.

  • சமூக வலைதளங்கள் மூலம் குழந்தைகளை கடத்துவதாக வரும் தகவல்களை நம்ப வேண்டாம்.
  • வட இந்திய இளைஞர்கள் குழந்தை கடத்துவதாக வீண் வதந்தியை குறுசெய்தியாவோ அல்லது சமுக வலைதளத்திலோ பரப்புவதை தவிர்க்க வேண்டும்.
  • நம்முடைய நண்பர்கள், உறவினர்கள் இதுபோன்ற வதந்தி செய்திகளை பரப்பினால் அவர்களுக்கு உண்மையான நிலையை எடுத்துரைக்க வேண்டும்.
  • சந்தோகத்திற்குரிய நபர்களை கண்டால் பொதுமக்கள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தாமல் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
  • குழந்தைக் கடத்தல்காரர்கள் என்று ஆவேசமாக யாரையும் துன்புறுத்த வேண்டாம். சந்தேகப்படும்படி யாரும் இருந்தால் அவர்களைப் பிடித்து காவல்துறையில் ஒப்படைக்க வேண்டும்.
16 பேர் உயிரிழப்பு

இந்தியா முழுவதும் குழந்தை கடத்தல் கும்பல் என்ற வாட்ஸ்-அப் வதந்தியால் இரண்டு மாதங்களில் 16 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். ஆந்திர பிரதேசம், திரிபுரா, மராட்டியம், குஜராத், சத்தீஷ்கார், உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், அசாம், கர்நாடகா, தெலுங்கானா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இந்த கொடூரமான சம்பவங்கள் நடைபெற்று உள்ளது. உயிரிழப்பு ஏற்படாத கொடூரமான சம்பவங்களும் வதந்தியால் நேரிட்டுள்ளது. சமுக வலைதள வதந்தியால் சந்தேகத்துக்கு இடமான நபர்களை அடித்து உதைப்பதை வாடிக்கையாகவே மாற்றிக்கொள்ளும் விபரீத நிலை ஏற்பட்டுள்ளது. சமுக வலைதள வதந்தி இன்று தொடர் கொலையாளி உள்ளது.

குழந்தை கடத்தல் கும்பல் என்ற ஒற்றை வதந்தி செய்தியால் அப்பாவிகளின் உயிரை எடுப்பதை எந்த விதத்தில் நியாயப்படுத்த முடியும்? யார் உயிரை எடுப்பதற்கு அதிகாரம் வழங்கியது? என்ற கேள்வியே எழுகிறது. அப்பாவி உயிரிழப்பிற்கு காரணமாகவும், குற்றவாளியாகவும் இருக்க வேண்டுமா? என்பதை ஒவ்வொருவரும் யோசிக்க வேண்டும். உலகைவிட்டு செல்லும் உயிர், குற்றத்தை உணர்வதால் மட்டும் திரும்பாது. அப்படி ஒரு துரதிஷ்டவசமான சம்பவத்தை நாம்தான் கட்டுப்படுத்த வேண்டும்.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *