சமூக வலைதளங்களில் சுஷ்மா சுவராஜை கேலியாக விமர்சனம் செய்வதற்கு மக்கள் கண்டனம் தெரிவிக்கும் நிலையில், பா.ஜனதா மவுனம் காத்து வருகிறது.
இந்திய வெளியுறவுத்துறை மந்திரியாக இருக்கும் சுஷ்மா சுவராஜ், வெளிநாட்டில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள், இந்தியாவிற்கு மருத்துவ சேவையை நாடி வருபவர்கள் தங்களுடைய கோரிக்கைகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டால், அதற்கான நடவடிக்கையை எடுக்கிறார். பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு சிகிச்சைக்காக வருபவர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து உதவுகிறார். அவருடைய மனித நேயம் பலரால் பாராட்டப்படுகிறது. இதுபோன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஸ்போர்ட் கோரி விண்ணப்பித்த இந்து-முஸ்லிம் கலப்புத் திருமணத் தம்பதி அலைகழிப்பட்ட விவகாரத்தில் தலையிட்ட சுஷ்மா சுவராஜ், பாஸ்போர்ட் வழங்க் உத்தரவிட்டதோடு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.
இதனையடுத்து சுஷ்மா சுவராஜை விமர்சனம் செய்து வலதுசாரிகளின் காட்டமாக டுவிட்டரில் கருத்துக்களை பதிவு செய்தார்கள்.
சுஷ்மா சுவராஜ் டுவிட்டரில் ‘ட்ரோல்’ (இணையத்தில் பயன்படுத்தப்படும் கேலியான விமர்சனங்கள்) செய்யப்பட்டார். வலதுசாரிகள் “ஷேம் ஆன் சுஷ்மா ஸ்வராஜ்” என்றும் பதிவிட்டார்கள். ”சுஷ்மா எடுத்தது பக்கச்சார்பான முடிவு. இஸ்லாமிய சிறுநீரகத்தின் விளைவா இது” என்று விஷமத்தனமான கேள்வியும் எழுப்பட்டது.
சுஷ்மா சுவராஜ் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர். இதனை குறிப்பிட்டு இஸ்லாமிய சிறுநீரகத்தின் செயலா? என்றெல்லாம் கேள்வியை எழுப்பினார்கள்.
ருத்ர ஷர்மா என்பவர் பதிவிட்ட ட்வீட்டில், “நரேந்திர மோதியை, ட்விட்டரில் சுஷ்மா சுவராஜை பின்பற்றவில்லை. சுஷ்மா தன்னை மதச்சார்பற்ற நபராகக் காட்டிக்கொள்ள முயல்கிறார். 2019 தேர்தலில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால், போலி மதச்சார்பற்றவர்களின் உதவியுடன் பிரதமராகலாம் என நினைக்கிறார். (மண்டல பாஸ்போர்ட் அலுவலர்) விகாஸ் மிஸ்ராவுக்கு எதிரான நடவடிக்கையும், இத்திட்டத்தில் ஒன்றே” என குறிப்பிட்டார். சுஷ்மா சுவராஜின் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படமும் பரப்ப விடப்பட்டது.
இதற்கிடையே சுஷ்மா சுவராஜுக்கு ஆதரவான கருத்தும் பதிவு செய்யப்பட்டது.
வெளிநாட்டில் இருந்து சுஷ்மா சுவராஜ் திரும்பியதும், தன் மேல் பாயும் விஷ நாக்குகளை உலகம் அறியட்டும் என்று பல வசைகளை மறு டுவிட் செய்தார். ”ஜூன் 17 முதல் 23 வரை நான் வெளிநாட்டில் இருந்தேன். நான் இல்லாதபோது, என்ன நடந்தது என தெரியவில்லை. ஆனாலும், என்னைப் போற்றி சில ட்வீட்கள் வந்துள்ளன. உங்களிடம் அதனை பகிர்ந்துகொள்கிறேன்” என சுஷ்மா சுவராஜ் ட்வீட் போட்டார். இவ்விவகார சர்ச்சை தொடர்ந்து செல்கிறது.
சுஷ்மாவின் கணவர் வேதனை
இதற்கிடையே சுஷ்மா சுவராஜின் கணவருக்கு ‘டுவிட்’ செய்த முகேஷ் குப்தா என்பவர், வீட்டுக்கு வந்ததும் அடி கொடுங்கள் என பதிவிட்டு இருந்தார். இதனை சுஷ்மாவின் கணவர் சுவராஜ் கவுசல் வேதனையுடன் பதிவிட்டுள்ளார். முகேஷ் குப்தா “அவர் வீட்டு திரும்பியதும், அவரை ஏன் நீங்கள் அடிக்கக் கூடாது. இஸ்லாமியர்களை திருப்தி படுத்தும் வகையில் செயல்பட கூடாது என அறிவுரை வழங்க கூடாது. இஸ்லாமியர்கள் ஒரு போதும் பா.ஜனதாவிற்கு வாக்களிக்க மாட்டார்கள் என சுஷ்மாவிடம் சொல்லுங்கள்,” என டுவிட் செய்து இருந்தார்.
இதனை வெளியிட்டுள்ள சுவராஜ் கவுசல், உங்கள் வார்த்தைகள் எங்களுக்கு தாங்க முடியாத வேதனையை கொடுத்திருக்கின்றன என குறிப்பிட்டு சுஷ்மாவின் மனித நேய செயலை பட்டியலிட்டார்.
மக்கள் ஆதரவு/ பா.ஜனதா மவுனம்
இதற்கிடையே சுஷ்மா சுவராஜ் இதுபோன்று தவறான முறையில் ட்ரோல் செய்யப்படுவதை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? என்ற கேள்வியை டுவிட்டர்வாசிகள் முன்பு வாக்கெடுப்பாக முன்வைத்தார். அப்போது சுஷ்மா சுவராஜுக்கு ஆதரவாக மக்கள் கருத்துக்களை பதிவிட்டார்கள். 1 லட்சத்திற்கும் அதிகமானோர் வாக்களித்த வாக்கெடுப்பில் தவறான டுரோலை நாங்கள் ஆதரிக்கவில்லை என்று சுஷ்மாவிற்கு ஆதரவாக 57 சதவித பேர் வாக்களித்தார்கள். இருப்பினும் இதில் வேதனைக்குரிய விஷயமாக 40 சதவிதம் பேர் வரையில் டுரோலை ஆதரித்து இருந்தார்கள்.
சுஷ்மா சுவராஜை விமர்சனம் செய்வதற்கு காங்கிரஸ் ஏற்கனவே கண்டனத்தை பதிவு செய்துவிட்டது. ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தியும் சுஷ்மா சுவராஜுக்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்துள்ளார். சுஷ்மா சுவராஜ் ட்ரோல் செய்யப்படுவது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. இது மிகவும் மூர்க்கத்தனமானது! நம்முடைய வெளியுறவுத்துறை மந்திரிக்கே இப்படியென்றால், மற்றவர்களுடைய நிலை என்னவாகும்? என்ற கேள்வியை முன்வைத்தார் மெகபூபா முபதி.
இதுபோன்று சுஷ்மாவிற்கு ஆதரவு தெரிவித்து, அவருடைய மனித நேய செயலை பாராட்டி பதிவுகளும் டுவிட்டர்வாசிகள் தரப்பில் பதிவிடப்பட்டு வருகிறது.
ஆனால் சுஷ்மா சுவராஜுக்கு தன்னுடைய சொந்த கட்சியிடம் இருந்து ஆதரவு கரம் கிடைக்காததுதான் மிகவும் வேதனையானது.
வெளியுறவுத்துறையில் சுஷ்மா சுவராஜின் செயல்பாட்டை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பாராட்டியுள்ளார். ஆனால், அவரை சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்யப்படுவது தொடர்பாக எந்தஒரு தகவலும் அதில் இடம்பெறவில்லை. பிரதமர் மோடியும் தொடர்ந்து அமைதியையே காத்து வருகிறார். அவருடைய அமைதி தொடரும் என்றே பார்க்கப்படுகிறது. இதுபோன்ற டுவிட்டரில் ட்ரோல் செய்யப்படும் போது அவர் எந்தஒரு கண்டனமும் பதிவு செய்தது கிடையாது. அதேபோன்றும் அதனை ஆதரித்ததும் கிடையாது. மத்திய அமைச்சராக இருக்கும் ஸ்மிரிதி இரானி போன்ற பெண்கள் தொடர்ந்து ட்ரோலில் சிக்கிவருகிறார்.
சுஷ்மா சுவராஜ்க்கு அவருடைய அமைச்சரவை சகாக்களும் எந்தஒரு ஆதரவையும் தெரிவிக்கவில்லை, மிகப்பெரிய கட்சியாக இருக்கும் பா.ஜனதாவில் இருந்தும் யாரும் ஆதரவை தெரிவிக்கவில்லை. சுஷ்மா பதிலடியை கொடுக்க முயற்சி செய்தவற்கு கூட அவர்கள் தரப்பில் ஆதரவு கொடுக்கப்படவில்லை. சுஷ்மா சுவராஜின் ‘டுவிட்’ பெண்கள் டுரோல் செய்யப்படும் விவகாரத்தில் பிரதமர் மோடியின் அமைதியை கலைப்பதற்காக கூட இருக்கலாம்.