டெல்லியில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கே அதிகாரம் உச்சநீதிமன்றம் தீர்ப்பு

Read Time:6 Minute, 3 Second

டெல்லியில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கே அதிகாரம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பை வழங்கியுள்ளது.

யூனியன் பிரதேசமான டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருந்தும், மத்திய அரசால் நியமனம் செய்யப்படும் துணை நிலை ஆளுநரிடம்தான் அதிகாரம் குவிந்திருந்தது. இதனால் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும், துணை நிலை ஆளுநருக்கும் இடையே கடும் மோதல் நேரிட்டது. “அமைச்சரவையின் முடிவுகளை டெல்லி துணை ஆளுநர் செயல்படுத்த விடுவது கிடையாது, ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்குகிறார்,” என்று ஆம் ஆத்மி அரசு குற்றம் சாட்டியது.

இதனையடுத்து டெல்லியில் யாருக்கு உண்மையான அதிகாரம்? என்பதை விளக்கக்கோரி ஆம் ஆத்மி அரசு டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடியது. 2016 ஆகஸ்ட் 4-ல் தீர்ப்பு வழங்கிய உயர் நீதிமன்றம், அரசியலமைப்புச் சட்டப்படி டெல்லியில் துணை நிலை ஆளுநர்தான் நிர்வாகத்தின் தலைவர் என்றது. உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக ஆம் ஆத்மி அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ஏ.கே.சிக்ரி, ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய். சந்திரசூட், அசோக்பூஷன் ஆகியோர் கொண்ட அமர்வு முன் நடந்தது.
இருதரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் தீர்ப்பு கடந்த ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. இன்று இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் டெல்லியில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கே அதிகாரம் என அதிரடியான தீர்ப்பை வழங்கியது.

உச்சநீதிமன்றம் கூறியது என்ன?

1. துணை நிலை ஆளுநர் டெல்லியின் நிர்வாகத் தலைவராக இருப்பதால், அமைச்சரவையில் எடுக்கப்பட்ட அனைத்து முடிவுகளும் அவரிடம் தெரிவிக்கப்பட வேண்டும். ஆனால் அவரிடம் அனுமதி வாங்கவேண்டும் என்ற அவசியம் கிடையாது.

2) தற்போதைய அரசியலமைப்பு சாசனப்படி தேசிய தலைநகர் பகுதியாக இருக்கும் டெல்லிக்கு தனி மாநில அந்தஸ்து (ஆம் ஆத்மியின் கோரிக்கையை நிராகரித்தது) வழங்க முடியாது.

3) துணை நிலை ஆளுநர் மாநிலத்தில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு மதிப்பளிக்க வேண்டும். அவர் அமைச்சரவை குழுவுடன் இணக்கமாக செயல்பட வேண்டுமே தவிர எதிர்க்க கூடாது. கருத்து வேறுபாடு தொடர்பாக ஆலோசனை செய்யப்பட வேண்டிய அவசியம் நேரிட்டால், அதனை மேற்கொள்ள வேண்டும். துணை நிலை ஆளுநர் அமைச்சரவையின் ஆலோசனையுடன் தான் செயல்பட முடியும்.

4) “அதிகார எல்லையை மீறி எவ்விதமான சுயமான முடிவையும் எடுக்கும் அதிகாரம் துணை நிலை ஆளுநருக்கு கிடையாது.”

5) துணைநிலை ஆளுநர் தன்னுடைய சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும் என்று முடிவெடுக்கும் வரையில் அமைச்சரவையின் ஆலோசனையையும், உதவிகளையும் அவர் ஏற்றுதான் ஆகவேண்டும். கருத்துக்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். விதிவிலக்கான சூழ்நிலைகளில் மட்டுமே சிறப்பு அதிகாரங்கள் அவசியமாகும், வழக்கமானதாக இருக்க கூடாது.
6) விதிவிலக்கான வழக்குகளில் மட்டுமே தன்னுடைய பரிந்துரையை குடியரசு தலைவரிடம் துணை நிலை ஆளுநர் வழங்க வேண்டும். ஆனால் எல்லா விவகாரத்தையும் குடியரசு தலைவரிடம் கொண்டுச் செல்லக்கூடாது.

7) மக்களால் தேர்வுசெய்யப்பட்ட அரசாங்கத்திற்கு மரியாதையை கொடுக்க வேண்டும். அதிகாரத்தில் உள்ளவர்களும், அரசியலமைப்புச் செயலாளர்களும் நிர்வாக மற்றும் மக்கள் நலனுக்குமானவர்கள் என்பதை உணர வேண்டும்.

8) நிர்வாகம் சீராக செயல்படுவதற்கு உயர் பதவிகளில் இருக்கும் நபர்கள் தங்களுடைய கடமைகளை உண்மையுடன் நிறைவேற்ற வேண்டும்.

9) அரசியல் சாசனத்தை மதிக்கும் வகையில் அனைவரின் செயல்பாடும் இருக்க வேண்டும். மத்திய – மாநில அரசுகள் கூட்டாட்சி தத்துவப்படி செயல்பட வேண்டும். மக்கள் பிரதிநிதிகள் மக்களின் கேள்விக்கு பதில் கூற கடமைப்பட்டவர்கள். டெல்லியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது.
10) காவல்துறை, நிலம், சட்டம் ஒழுங்கு ஆகியவற்றை தவிர மற்ற துறைகளில் முழுமையாக முடிவெடுக்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு. மக்கள் நல திட்டங்கள் தாமதமானால் துணை நிலை ஆளுநருக்கும், டெல்லி அரசுக்கும் பொறுப்பு உண்டு.

என்று உச்சநீதிமன்றம் கூறியது.

ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி

உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், ‘‘டெல்லி மக்களுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது. ஜனநாயகத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது’’ எனக் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *