டெல்லி உத்தரவு புதுச்சேரிக்கு பொருந்தாது!

Read Time:3 Minute, 24 Second

துணை நிலை ஆளுநர் அதிகாரம் விவகாரத்தில் டெல்லிக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு புதுச்சேரிக்கு பொருந்தாது.

யூனியன் பிரதேசமான டெல்லியில் அதிகாரம் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கா? இல்லை மத்திய அரசால் நியமனம் செய்யப்பட்ட துணை நிலை ஆளுநருக்கா? என்ற வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், டெல்லி அரசின் ஆலோசனையுடன் தான் துணை நிலை ஆளுநர் செயல்பட முடியும் என்று தீர்ப்பு வழங்கியது. டெல்லியில் அதிகாரம் தொடர்பாக மோதல் நேரிட்டது போன்று புதுச்சேரியிலும் முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் துணை நிலை ஆளுநர் கிரண் பேடி இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது.

உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதும் நாராயணசாமி பேசுகையில், தீர்ப்பு புதுச்சேரி 100-க்கு 110 சதவீதம் பொருந்தும். துணைநிலை ஆளுநருக்கு முடிவெடுக்க தனிப்பட்ட அதிகாரம் இல்லை என்பதை இந்திய அரசியலமைப்புச் சட்டம் தெளிவாக கூறியுள்ளது. முழு அதிகாரமும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே உள்ளது. இவை அனைத்தும் கடந்த இரண்டு ஆண்டுகளாக துணைநிலை ஆளுநர், பிரதமர், உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியும் எந்தத் தரப்பிலும் சரியான பதிலும் நடவடிக்கையும் இல்லை. இந்த சூழ்நிலையில் இது வரவேற்கத்தக்க தீர்ப்பு. புதுச்சேரி மாநிலத்திற்கும் இது பொருந்தும் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பை யார் மீறினாலும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நான் தான் முதலில் தொடர்வேன். இந்தத் தீர்ப்பு மக்களே முக்கியம், மக்களாட்சி தத்துவத்திற்கே முன்னுரிமை என்பதை சுட்டிக்காட்டுகிறது,” என்றார்.

புதுச்சேரிக்கு பொருந்தாது!

இந்நிலையில் துணை நிலை ஆளுநர் விவகாரத்தில் டெல்லியுடன் புதுச்சேரியை ஒப்பிட முடியாது என்று உச்சநீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நபர்கள் கொண்ட அரசியலமைப்பு பெஞ்ச் புதுச்சேரி நிர்வாகம் செய்யப்படும் அரசியலமைப்பு பிரிவு 239ஏ-ஐ ஆய்வு செய்துள்ளது. யூனியன் பிரதேசங்களான அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகள், டாமன் மற்றும் டையூ, தாத்ரா மற்றும் நாகர் ஹாவேலி, லட்சத்தீவு மற்றும் சண்டிகார் ஆகியவற்றில் இருந்தும் புதுச்சேரி வேறுபடுகிறது. புதுச்சேரி அரசியலைப்புச் சட்டம் பிரிவு 239ஏ-ன் கீழ் உள்ள பரிந்துரைகளின்படி நிர்வகிக்கப்படுகிறது. ஆனால் டெல்லி பிரிவு 239ஏஏ-யின் கீழ் உள்ள பரிந்துரைகளின்படி நிர்வாகம் செய்யப்படுகிறது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *