மத்திய அரசு எச்சரிக்கையடுத்து வதந்திகளை தடுக்க வாட்ஸ்-அப் தீவிரம்

Read Time:7 Minute, 4 Second

மத்திய அரசுக்கு பதிலளித்துள்ள வாட்ஸ்-அப், தகவல்கள் எங்கிருந்து வருகிறது, யார் அனுப்புகிறார்கள், பரப்புகிறார்கள் என்பதை கண்காணிக்கும் முறையை வகுத்து வருகிறோம் என்று கூறியுள்ளது.

சமூக வலைதளங்களில் முக்கிய இடம் வகிக்கும் வாட்ஸ் அப்பில் குழந்தைகள் கடத்தல் தொடர்பாக போலியான செய்திகள் பரப்பிவிடப்படுகின்றன. இதன் விளைவாக அப்பாவி பொதுமக்கள் கும்பல் தாக்குதலில் பாதிக்கப்படுவது தொடர்கதையாகியுள்ளது. குழந்தைகள் கடத்தல் தொடர்பாக பரவும் இந்த போலிச் செய்தியால் நடைபெற்ற கும்பல் தாக்குதலில் இந்தியாவில் இதுவரையில் 25-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். சமீபத்தில் மராட்டிய மாநிலம் துலேயில் குழந்தைகளைக் கடத்துபவர்கள் என நினைத்து 5 பேரை மக்கள் அடித்துக்கொன்றன சம்பவத்திற்கு பல்வேறு தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இவ்விவகாரத்தில் மத்திய அரசு நடவடிக்கையை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது.

வாட்ஸ்-அப்பிற்கு எச்சரிக்கை

இதனையடுத்து வன்முறையை தூண்டும் விதமான செய்திகள் பரவும் விவகாரத்தில் வாட்ஸ்-அப்பிற்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்தது.

“பொறுப்பற்ற மற்றும் வன்முறையை தூண்டும் செய்திகளை” செய்திகளை எடுத்துவிடுமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

வாட்ஸ் அப் நிறுவனத்தின் தலைமை அதிகாரிகளிடம் அதிருப்தியை தெரிவித்த மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், “வாட்ஸ்-அப் பொறுப்பிலிருந்து விலக முடியாது,” என்றது. அசாம், மராட்டியம், கர்நாடகம், திரிபுரா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்ற துரதிஷ்டவசமான கொலைகள், மிகவும் காயப்படுத்தியுள்ளது மற்றும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. போலியான மற்றும் உள்நோக்கம் கொண்ட மற்றும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையிலான செய்திகளை பரப்புவதை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கையை வாட்ஸ்-அப் நிறுவனம் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.வாட்ஸ்-அப் தீவிரம்

மத்திய அரசின் எச்சரிக்கையை ஏற்ற வாட்ஸ்-அப் நிறுவனம் விளக்கம் தெரிவிக்கையில், நிறுவனம் எடுத்துவரும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்தும், போலிச்செய்திகளையும், படங்களையும் தடுக்க எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் எடுத்துரைத்தது.

மக்கள் பாதுகாப்பு பற்றி ஆழமாக அக்கறையை கொண்டுள்ளோம் என கூறிய வாட்ஸ்-அப் தன்னுடைய விளக்கத்தில், “வாட்ஸ்-அப்பில் போலிச் செய்திகளை பரப்பி இதுபோன்ற வன்முறை செயல்கள் நடப்பதை நினைத்து அச்சப்படுகிறோம். இந்திய அரசு எழுப்பிய விஷயங்களுக்கும், கவலைகளுக்கும் விரைவாக தீர்வு காண நினைக்கிறோம். இச்சவால்களுக்கான தீர்வை தேடுவதற்கு, அரசு, மக்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆகியவை இணைந்து செயல்படுவீர்கள் என நம்புகிறோம்.

தேவையில்லாத செய்திகளை, தகவல்களை தடுக்கும் வகையில் குரூப் சாட்டில் பல்வேறு விதமான மாற்றங்களை சமீபத்தில் செய்திருக்கிறோம்.

இந்தியாவில் ஒரு புதிய தொழில்நுட்பத்தையும் சோதித்து வருகிறோம். அதாவது ஒரு செய்தி எங்கு உருவாக்கப்பட்டது, எத்தனை நபர்களிடம் இருந்து ஃபார்வர்டாகி வந்துள்ளது என்பதைக் கண்டறியும் வசதியாகும். இந்த வசதி செயல்பாட்டுக்கு வந்துவிட்டால் எந்த நபரும் எந்த ஒரு செய்தியையும் பரப்புவதற்கு முன் யோசனையுடன் செயல்படுவார்கள். செய்தியால் ஏதேனும் விபரீதங்கள், கலவரங்கள் நடந்தால் சிக்கக்கூடும் என்பதால், ஃபார்வர்டு செய்ய மாட்டார்கள். இந்தத் தொழில்நுட்பம் இந்தியாவில் பரிசோதனை முயற்சியில் இருக்கிறது. இந்த வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.” என்று தெரிவித்துள்ளது.மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பேசுகையில், “செய்திகளைப் படிக்காமலும், புரிந்துக்கொள்ளாமலும் பிறருக்கு அனுப்புவதை தடுப்பதற்கான காரணிகளை பார்ப்பதாக வாட்ஸ்-அப் தெரிவித்துள்ளது. அவர்களுடைய நடவடிக்கையை நான் பாராட்டுகிறேன்,” என்று கூறினார்.

மாநில அரசுக்களுக்கு கடிதம்

வாட்ஸ்-அப்பிற்கு எச்சரிக்கையை விடுத்த மத்திய அரசு, குழந்தை கடத்தல் வதந்தியால் ஏற்படும் கும்பல் தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு மாநிலங்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கடிதம் எழுதியுள்ள மத்திய உள்துறை அமைச்சகம் “குழந்தை கடத்தல் என்பது தொடர்பான வதந்திகளை முன்கூட்டியே கண்டுபிடிக்க விழிப்புடன் இருங்கள், அவற்றை முறியடிக்க பயனுள்ள நடவடிக்கையை மேற்கொள்ளுங்கள்,” என கேட்டுக்கொண்டுள்ளது. இதுபோன்ற வதந்தி செய்திகளால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளை அடையாளம் காணவும், அங்கு விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொள்ளவும் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிடுங்கள். பொதுமக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்த குழந்தைகள் கடத்தல் தொடர்பான புகார்கள் தொடர்பாக முறையாக விசாரணையை மேற்கொள்ளுங்கள் என மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் பேசுகையில், “சமூக வலைதளங்களில் சுற்றும் குழந்தை கடத்தல் தொடர்பான வதந்திகள் காரணமாக நேரிடும் கும்பல் தாக்குதல் சம்பவங்களை தடுக்க தேவையான நடவடிக்கையை எடுக்குமாறு மத்திய அரசு, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது,” என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *